மாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்?
மாடுகள் கழிக்கும் ஒரு லிட்டர் சிறுநீரின் விலை ரூ. 500
கடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு... கடைசியில், 'அடச்சே, அடி மாடு' என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படுகின்றன பசுமாடுகள். ஆனால், 'இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல... அத்தனையும் காமதேனு' என்று சத்தம் போட்டுச் சொல்கிறது 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'!
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தேவலபூர். இலட்சக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலை அரங்கேறிய... சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.
மலை, குன்று, மேடு, பள்ளம், பொட்டல்வெளி, அடர்ந்தக் காடு எனப் பல பகுதிகளையும் கடந்து இந்த ஊர் உள்ளது. சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர்.
ஊரைக் கடந்து கொஞ்சத் தூரத்தில் 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா' என்ற இடம்.
அர்க் எனும் அருமருந்து!
"அடிமாடுகளைக் காப்பாற்றி, அவற்றின் வாழ் நாள் வரை பாதுகாப்பது தான் இந்த கேந்திராவின் நோக்கம். இந்த கேந்திரா தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. மாடு என்பது பால் கொடுக்கும், சாணம், மூத்திரம் கொடுக்கும் என்றுதான் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். ஆனால், நமக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் அது கொடுக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை (மாடு என்றால் தமிழில் 'செல்வம்' என்றொரு பொருள் இருக்கிறது).
22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலை இருக்கிறது. ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. 'இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை' என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச் சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப் பட்ட மாடுகளைத்தான் மீட்டுப் பராமரிக்கிறோம்.
அந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற்றையும்... அடிமாடுகளாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்திலிருக்கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருட்களை தயாரிக்கிறோம். இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.
'அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந்தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 'அர்க்', சர்க்கரை நோய் தொடங்கிப் புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. எங்களுடைய மருந்துப் பொருட்களுக்கு 'இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது.
உரிய வகையில் அதற்குரிய உபகரணங்களுடன் 20 லிட்டர் மாட்டு சிறுநீரைக் காய்ச்சினால், கிட்டத்தட்ட 13 லிட்டர் அர்க் கிடைக்கும். ஒரு லிட்டர் அர்க் 160 ரூபாய் என்று இங்கே விற்பனை செய்கிறோம். ஆனால், வெளியில் அதன் விலை 500 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. எங்களுடையது சேவை அமைப்பு என்பதால் குறைந்த விலைக்கே கொடுக்கிறோம்.
மாடுகளின் சிறுநீரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக் கொல்லி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது"
இங்கு தினமும் இரவு ஏழு மணிக்கு இப்பூஜை நடக்கும். இதன் மூலம் இயல்பாகவே மாடுகளின் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக இங்குள்ள பணியாளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாடுகளை குச்சியால் அடிக்கவோ, அதட்டவோ மாட்டார்கள் என்று கூறும் சுனில்மான் சின்ஹா, சிறுநீர் சேகரிப்பு பற்றியும் விவரிக்கின்றார்..
விடிற்காலை நான்கு மணிக்கு சிறுநீரைப் பிடிக்கும் வேலை ஆரம்பமாகும். "மாட்டின் சிறுநீரை எளிதாக நாங்கள் சேகரிக்கிறோம். பழக்கத்தின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. காலை நான்கு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் தினசரி சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாட்டின் சிறுநீர் உறுப்பில் கை வைத்ததும் சிறுநீர் கழித்துவிடுகிறது. உலோகம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் அதைச் சேகரித்து விடுவோம். ஒரு மாடு சிறுநீர் கழிக்கத் தொடங்கியவுடன் பக்கத்தில் உள்ள மாடுகள் அடுத்தடுத்து கழிக்கத் தொடங்கிவிடும். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சேகரித்துவிடுகின்றனர்"
பயிற்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!
அங்கிருக்கும் 22 ஏக்கர் பரப்புக்குள் மருத்துவப் பொருட்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
"இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை இவர்களுடைய பணி மற்றும் தயாரிப்புகளை அங்கீகரித்துள்ளன. முழுக்க சேவை அடிப் படையில் இயங்கும் இந்த மையத்தில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்கள், தொழில்முனைவோர் என்று பலரும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சிக் கொடுக்கத் தயாராக உள்ளனர். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க விரும்புகிறார்களா... அல்லது அர்க் போன்ற மருந்து பொருட்கள் தயாரிக்க விரும்புகிறார்களா என்பதைப் பொறுத்து பயிற்சியின் கால அளவு நிர்ணயிக்கப்படும்.
உணவுச் செலவுக்காக மட்டும் சிறிய தொகையினைக் கட்டணமாக செலுத்தினால் போதும் என்று கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள்.
தமிழகத்திலிருந்து லாரி லாரியாக கேரளத்து கசாப்புக் கடைகளுக்கு தினசரி அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான 'காமதேனு'க்களைத் தடுத்தி நிறுத்தி இப்படி நல்ல முறையில் அவற்றைப் பேணிக்காத்து பயன்பெறலாமே!
தொடர்புக்கு: Govigyan Anusandhan Kendra, Kamadhenu Bhavan, Ghtae wada (Near bachharaj vyas chowk), Chitar oil, Mahal, Nagpur-32 .phone: 0712-2772273,2734182. Cell: 94221-01324. நன்றி:www.farmingnature.blogspot.in