Saturday, August 12, 2017

பொது க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகம்


திருச்சிற்றம்பலம்
1.தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி,
தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர்,
கொல்லிக் குளிர் அறைப்பள்ளி,
கோவல்-வீரட்டம், கோகரணம், கோடிகாவும்,
முல்லைப் புறவம் முருகன் பூண்டி,
முழையூர், பழையாறை, சத்தி முற்றம்,
கல்லில்-திகழ் சீர் ஆர் காளத்தியும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.
2.ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும்,
ஆக்கூரில்-தான் தோன்றி மாடம், ஆவூர்,
பேரூர், பிரமபுரம், பேராவூரும், பெருந்துறை,
காம்பீலி, பிடவூர், பேணும்
கூர் ஆர் குறுக்கை வீரட்டான(ம்)மும்,
கோட்டூர், குடமூக்கு, கோழம்ப(ம்)மும்,
கார் ஆர் கழுக்குன்றும், கானப்பேரும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.
3. இடை மருது, ஈங்கோய், இராமேச்சுரம்,
இன்னம்பர், ஏர் இடவை, ஏமப்பேறூர்,
சடைமுடி, சாலைக்குடி, தக்க(ள்)ளூர்,
தலையாலங்காடு, தலைச்சங்காடு,
கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர்,
கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு,
கடைமுடி, கானூர், கடம்பந்துறை, கயிலாய
நாதனையே காணல் ஆமே.
4.எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங்கோட்டூர்,
இறையான் சேரி,
அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர்,
ஆவடுதண்துறை, அழுந்தூர், ஆறை,
கச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக்கோயில்,
கரவீரம், காட்டுப்பள்ளி,
கச்சிப் பலதளியும், ஏகம்பத்தும், கயிலாய
நாதனையே காணல் ஆமே.
5.கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர்,
கொங்கணம், குன்றியூர், குரக்குக்காவும்,
நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்காவும்,
நின்றியூர், நீடூர், நியமநல்லூர்,
இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர்,
எறும்பியூர், ஏர் ஆரும் ஏமகூடம்,
கடம்பை, இளங்கோயில் தன்னிலுள்ளும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.
6. மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர்,
வக்கரை, மந்தாரம், வாரணாசி,
வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி,
விளமர், விராடபுரம், வேட்களத்தும்,
பெண்ணை அருள்-துறை, தண் பெண்ணாகடம்,
பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூரும்,
கண்ணை, களர்க் காறை, கழிப்பாலையும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.
7. வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர், வேதிகுடி,
விசயமங்கை, வியலூர்,
ஆழி அகத்தியான்பள்ளி, அண்ணாமலை,
ஆலங்காடும், அரதைப்பெரும்-
பாழி, பழனம், பனந்தாள், பாதாளம்,
பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், தண்
காழி, கடல் நாகைக்காரோணத்தும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.
8. உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர்,
உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும்,
மஞ்சு ஆர் பொதியில் மலை, தஞ்சை,
வழுவூர்-வீரட்டம், மாதானம், கேதாரத்தும்,
வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகா,
வேதீச்சுரம், வில்வீச்சுரம், வெற்றியூரும்,
கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கையும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.
9. திண்டீச்சுரம், சேய்ஞலூர், செம்பொன் பள்ளி,
தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை,
கொண்டீச்சுரம், கூந்தலூர், கூழையூர், கூடல்,
குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு(வ்),
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம்,
ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூரும்,
கண்டியூர் வீரட்டம், கருகாவூரும், கயிலாய
நாதனையே காணல் ஆமே.
10. நறையூரில் சித்தீச்சுரம், நள்ளாறு, நாரையூர்,
நாகேச்சுரம், நல்லூர், நல்ல
துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை,
தோணிபுரம், துருத்தி, சோமீச்சுரம்,
உறையூர், கடல் ஒற்றியூர், ஊற்றத்தூர்,
ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும்,
கறையூர், கருப்பறியல், கன்றாப்பூரும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.
11. புலி வலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம்,
பூவணம், பொய்கை நல்லூர்,
வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி,
வாஞ்சியம், மருகல், வன்னி
நிலம் மலி நெய்த்தானத்தோடு, எத்தானத்தும்
நிலவு பெருங்கோயில், பல கண்டால், தொண்டீர்!
கலி வலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற
கயிலாய நாதனையே காணல் ஆமே.
திருச்சிற்றம்பலம்

கோயில் திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்
1.பாளை உடைக் கமுகு ஓங்கி, பல் மாடம் நெருங்கி, எங்கும்
வாளை உடைப் புனல் வந்து எறி, வாழ் வயல்-தில்லை தன்னுள்,
ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே?
2.பொரு விடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி, புலி அதளன்,
உரு உடை அம் மலைமங்கை மணாளன், உலகுக்கு எல்லாம்
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
3.தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான்,
பொடிக் கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லைச் சிற்றம்பலவன்,
உடுத்த துகில் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
4. “வைச்ச பொருள் நமக்கு ஆகும்” என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன்; அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன், பிறப்பு இலி, பேர் நந்தி, உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?
5. செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
மைஞ் ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றான்,
 கைஞ் ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?
6.ஊனத்தை நீக்கி உலகு அறிய(வ்) என்னை ஆட்கொண்டவன்,
தேன் ஒத்து எனக்கு இனியான், தில்லைச் சிற்றம்பலவன், எம் கோன்,
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்
ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?
7.தெரித்த கணையால்-திரி புரம் மூன்றும் செந் தீயில் மூழ்க
எரித்த இறைவன், இமையவர் கோமான், இணை அடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
8.சுற்றும் அமரர், சுரபதி, “நின் திருப்பாதம் அல்லால்
பற்று ஒன்று இலோம்” என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான்,
செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான், தில்லை அம்பலவன்,
நெற்றியில் கண் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
9.சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ
மத்த மலர் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
10.தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை
 வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப, மலைமகள் கோன் சிரித்து,
அரக்கன் மணி முடி பத்தும்-அணி தில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பது என்னே?
திருச்சிற்றம்பலம்

திருப்பூவனம் திருத்தாண்டகம்


திருச்சிற்றம்பலம்
1.வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்; வளர்
சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்;
கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்;
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்;
இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்;
எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும்-பொழில்
திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
2.ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு தோன்றும்;
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகித் தோன்றும்;
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகித் தோன்றும்;
ஒற்றை வெண் பிறை தோன்றும்; பற்றார் தம்மேல்
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்;
செத்தவர்தம் எலும்பினால் செறியச் செய்த
பூண் நாணும் அரை நாணும் பொலிந்து தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
3. கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின்
மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று
சொல் ஆகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்;
சூழ் அரவும், மான்மறியும், தோன்றும் தோன்றும்;
அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்;
ஐவகையால் நினைவார் பால் அமர்ந்து தோன்றும்;
பொல்லாத புலால் எலும்பு பூண் ஆய்த் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
4.படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்;
பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்;
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்;
நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்;
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்;
ஊரல் வெண் சிரமாலை உலாவித் தோன்றும்;
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
5.மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும்,
மாசு இலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்;
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும்; இருங்கடல்
நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்;
கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை ஆயிரம்
ஆம் முகத்தினொடு வானில்- தோன்றும்.
புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
6. பார் ஆழி வட்டத்தார் பரவி இட்ட பல்மலரும்,
நறும்புகையும், பரந்து தோன்றும்;
சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்னதிருந்திய
மா நிறத்த சேவடிகள் தோன்றும்;
ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன் உடல்
துணித்த இடர் பாவம் கெடுப்பித்து, அன்று,
போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும்-பொழில்
திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
7.தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்;
சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்;
மின் அனைய நுண் இடையாள் பாகம் தோன்றும்;
வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்;
துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும்
தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்;
பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
8.செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்;
திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்;
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்;
நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்;
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்;
மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்;
பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
9. அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்;
அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்-
மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்; மணம்
மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர் வைகைத்
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்;
செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
10. ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி, அன்று, தன்
முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்;
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று,
பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்;
கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும் குழற்கு
அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்;
ங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
11. ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ் உரு
ஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்;
வார் உருவப்பூண் முலை நல் மங்கை தன்னை
மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்;
நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை
நெறு நெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்;
போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
திருச்சிற்றம்பலம்

திருஅதிகை வீரட்டானம் திருவடித் திருத்தாண்டகம்


திருச்சிற்றம்பலம்
1.அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி;
அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி;
சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி;
சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி;
பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி;
பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி;
திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி- திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
2. கொடுவினையார் என்றும் குறுகா அடி; குறைந்து
அடைந்தார் ஆழாமைக் காக்கும்(ம்) அடி;
படு முழவம் பாணி பயிற்றும்(ம்) அடி; பதைத்து
எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்த(வ்) அடி;
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி; கடல்
வையம் காப்பான் கருதும்(ம்) அடி;
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி- நிறை
கெடில வீரட்டம் நீங்கா அடி.
3.வைது எழுவார் காமம், பொய், போகா அடி;
வஞ்சவலைப்பாடு ஒன்று இல்லா அடி;
கைதொழுது நாம் ஏத்திக் காணும்(ம்) அடி;
கணக்கு வழக்கைக் கடந்த(வ்) அடி;
நெய்-தொழுது, நாம் ஏத்தி-ஆட்டும்(ம்) அடி; நீள்
விசும்பை ஊடு அறுத்து நின்ற(வ்) அடி;
தெய்வப்புனல் கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி;
4.அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்(ம்) அடி;
அழகு எழுதல் ஆகா அருள் சேவடி;
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த(வ்) அடி;
சோமனையும் காலனையும் காய்ந்தவ(வ்) அடி;
பெரும் பித்தர் கூடிப் பிதற்றும்(ம்) அடி;
பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல(வ்) அடி;
திருந்து நீர்த் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி
5. ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற(வ்) அடி;
ஊழிதோறுஊழி உயர்ந்த(வ்) அடி;
பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்(ம்) அடி;
புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
இரு நிலத்தார் இன்பு உற்று அங்கு ஏத்தும்(ம்) அடி;
இன்பு உற்றார் இட்ட பூ ஏறும்(ம்) அடி;
திரு அதிகைத் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
6. திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி;
சிறந்தவர்க்குத் தேன் ஆய் விளைக்கும்(ம்) அடி;
பொருளவர்க்குப் பொன் உரை ஆய் நின்ற(வ்)
அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி;
உரு என்று உணரப்படாத(வ்)அடி;
திரு அதிகைத் தென் கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
7.உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி; உரையால்
உணரப்படாத(வ்) அடி;
வரைமாதை வாடாமை வைக்கும்(ம்) அடி; வானவர்கள்
தாம் வணங்கி வாழ்த்தும்(ம்) அடி;
அரைமாத்திரையில் அடங்கும்(ம்) அடி; அகலம்
அளக்கிற்பார் இல்லா அடி;
கரை மாங் கலிக் கெடில நாடன்(ன்) அடி-கமழ்
வீரட்டானக் காபாலி(ய்) அடி;
8.நறுமலர் ஆய் நாறும் மலர்ச்சேவடி; நடு ஆய்
உலகம் நாடு ஆய(வ்) அடி;
செறிகதிரும் திங்களும் ஆய் நின்ற(வ்) அடி;
தீத்திரள் ஆய் உள்ளே திகழ்ந்த(வ்) அடி;
மறு மதியை மாசு கழுவும்(ம்) அடி; மந்திரமும்
தந்திரமும் ஆய(வ்) அடி;
செறி கெடில நாடர் பெருமான் அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
9.அணியனவும் சேயனவும் அல்லா அடி;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆய(வ்) அடி;
பணிபவர்க்குப் பாங்கு ஆக வல்ல(வ்) அடி;
பற்று அற்றார் பற்றும் பவள(வ்) அடி;
மணி அடி; பொன் அடி; மாண்பு ஆம் அடி;
மருந்து ஆய்ப் பிணி தீர்க்க வல்ல(வ்) அடி;
தணிபு ஆடு தண்கெடில நாடன்(ன்) அடி-தகை
சார் வீரட்டத் தலைவன்(ன்) அடி;
10. அம் தாமரைப்போது அலர்ந்த(வ்) அடி;
அரக்கனையும் ஆற்றல் அழித்த(வ்) அடி;
முந்துஆகி முன்னே முளைத்த(வ்) அடி; முழங்கு
அழல் ஆய் நீண்ட எம் மூர்த்தி(ய்) அடி;
பந்து ஆடு மெல்விரலாள் பாகன்(ன்) அடி;
பவளத்தடவரையே போல்வான் அடி;
வெந்தார் சுடலை நீறு ஆடும்(ம்) அடி-வீரட்டம்
காதல் விமலன்(ன்) அடி.
திருச்சிற்றம்பலம்

திருக்கயிலாயம் போற்றித் திருத்தாண்டகம்


திருச்சிற்றம்பலம்
1.வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
2. பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி! பிறவி
அறுக்கும் பிரானே, போற்றி!
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி! மருவி
என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கச்சு ஆக நாகம் அசைத்தாய், போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.
3.மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி! மருவி
என் சிந்தை புகுந்தாய், போற்றி!
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி! உள்
ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!
திரு ஆகி நின்ற திறமே, போற்றி! தேசம்
பரவப்படுவாய், போற்றி!
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.
4. வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி! வந்து
என்தன் சிந்தை புகுந்தாய், போற்றி!
ஊனத்தை நீக்கும் உடலே, போற்றி! ஓங்கி
அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
தேன(த்)த்தை வார்த்த தெளிவே, போற்றி!
தேவர்க்கும் தேவனாய் நின்றாய், போற்றி!
கானத் தீ ஆடல் உகந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
5.ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி! ஓங்கி
அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி! நேர்வார்
ஒருவரையும் இல்லாய், போற்றி!
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.
6.சில் உரு ஆய்ச் சென்று திரண்டாய், போற்றி!
தேவர் அறியாத தேவே, போற்றி!
புல் உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பல் உயிர் ஆய்ப் பார்தோறும் நின்றாய், போற்றி!
பற்றி உலகை விடாதாய், போற்றி!
கல் உயிர் ஆய் நின்ற கனலே, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.
7.பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!
பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி!
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி!
மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி!
கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
8. இமையாது உயிராது இருந்தாய், போற்றி! என்
சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி!
ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி!
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி!
ஆதி புராணனாய் நின்றாய், போற்றி!
கமை ஆகி நின்ற கனலே, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.
9.மூவாய், பிறவாய், இறவாய், போற்றி! முன்னமே
தோன்றி முளைத்தாய், போற்றி!
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி!
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி! அல்லல்
நலிய அலந்தேன், போற்றி!
காவாய்! கனகத்திரளே, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.
10. நெடிய விசும்போடு கண்ணே, போற்றி! நீள
அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி! அங்கு ஒன்று
அறியாமை நின்றாய், போற்றி!
கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி!
கடிய உருமொடு மின்னே, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.
11 உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி!
ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி!
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி!
இறை விரலால் வைத்து உகந்த ஈசா, போற்றி!
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய், போற்றி!
பண்டே என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கண் ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
திருச்சிற்றம்பலம்

திருஆரூர் திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்
1.குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ-
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்,
சிலம்பு அலம்பா வரு சேவடியான், திரு மூலட்டானம்
புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
2.மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர்
சொல்-திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ-
வில்-திடம் வாங்கி, விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்,
 புற்று இடம்கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
3. ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ-
செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன், சென்று அடையாத்
திரு உடையான், திரு ஆரூர்த் திருமூலட்டானன், செங்கண்
பொரு விடையான், அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
4.மாசினை ஏறிய மேனியர், வன்கண்ணர், மொண்ணரை விட்டு
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டுகொலோ-
தேசனை, ஆரூர்த் திருமூலட்டானனை, சிந்தைசெய்து
பூசனைப் பூசுரர்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
5. அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,
வருந்தி நினைந்து, “அரனே!” என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ-
திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
6.வீங்கிய தோள்களும் தாள்களும் ஆய் நின்று, வெற்று அரையே
மூங்கைகள் போல் உண்ணும் மூடர்முன்னே நமக்கு உண்டு கொலோ-
தேம் கமழ் சோலைத் தென் ஆரூர்த் திருமூலட்டானன், செய்ய-
பூங்கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
7.பண்ணிய சாத்திரப் பேய்கள் பறி தலைக் குண்டரை விட்டு
எண் இல் புகழ் ஈசன்தன் அருள் பெற்றேற்கும் உண்டுகொலோ-
திண்ணிய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானன், எங்கள்
புண்ணியன் தன் அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
8. கரப்பர்கள், மெய்யை; “தலை பறிக்கச் சுகம்” என்னும் குண்டர்
உரைப்பன கேளாது, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
திருப் பொலி ஆரூர்த் திருமூலட்டானன், திருக்கயிலைப்-
பொருப்பன், விருப்பு அமர் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
9. கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு,
உய்யும் நெறி கண்டு, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
ஐயன், அணி வயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
10. குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு,
உற்ற கருமம் செய்து, உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
மல் பொலி தோளான், இராவணன்தன் வலி வாட்டுவித்த
பொன் கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
திருச்சிற்றம்பலம்

திரு வெண்ணெய்நல்லூர்

திருச்சிற்றம்பலம்
1. பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! 
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
2. நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை,
 பேய் ஆய்த் திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்;
வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
3.மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை;
பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது உந்தி
மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
4.முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றம் ஊர்தீ!
கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், நீ!
செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
5. பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்!
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா!
தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
6.தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ!
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்) நகை செய்தாய்!
மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
 7.ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்;
வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்;
தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
8.ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்!
தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர்
ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
9.மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா!
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே;
செழு வார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அழகா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
10. கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால்
பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி,
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே?
திருச்சிற்றம்பலம்