கலியுகத்தை ஆட்சி செய்யும் சண்டி சமேத ஸம்ஹார
பைரவர்!!!
உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என அனைத்தையும்
ஈசனின் சார்பாக நிர்வாகித்து வருபவர் ஈசனின் அவதாரமான கால பைரவர் ஆவார்;இவரது பெயரில்
ஒரு உலகம் இருக்கின்றது;
அதற்கு பைரவ உலகம் என்று பெயர்;
தொடர்ந்து 12 பிறவிகள் மனித பிறப்பு எடுத்து
அனைத்து பிறவிகளிலும் மஹாகால பைரவப் பெருமானை மட்டுமே பேசி,ஜபித்து,வழிபட்டு,விரதம்
கொண்டு வாழ்ந்தால் பைரவ உலகத்தில் பைரவ சித்தர் என்ற புகழுடன் வாழும் வாய்ப்பு கிடைக்கும்;
ஜோதிடர்கள் தினமும் வழிபடவேண்டிய தெய்வம்
மஹாகால பைரவர் ஆவார்;ஜோதிடர்கள் தினமும் ஒருமுறையாவது ஓம் ஸ்ரீவாரதாரக சித்தகுரு நம
ஸ்வாஹா என்று ஜபிக்க வேண்டும்;இந்த பைரவ சித்தரின் அருளை ஒவ்வொரு ஜோதிடரும் பெறுவது
அவசியம் ஆகும்;
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆர்ய பட்டரும்,வராக
மிஹிரரும் இந்த ஸ்ரீவாரதாரக சித்தரை உபாசனை செய்து,இவரது அருளைப் பெற்றுத்தான் அழியாத
புகழ் கொண்ட ஜோதிட நூல்களை இயற்றினார்கள்;
மிக மிகக் கடினமானது தான் பைரவ உபாசனை!
அரை விநாடி அளவுக்கு கவனக் குறைவு ஏற்பட்டாலும் பைரவ கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதை
உணர்ந்தமையால் தான் நமது கலியுகத்தில் ஷீர்டி சாய்பாபா,பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்,மாயம்மா
போன்றவர்கள் பைரவ பக்தியை 40 ஆண்டுகள் வரை பின்பற்றினார்கள்;
பைரவரின் வாகனமாகிய நாய்களுக்கு தினமும்
உணவு இடுவதன் மூலமாகவே பைரவரின் அருளைப் பெற முடியும்;யார் தொடர்ந்து 40 ஆண்டுகள் பைரவருக்கு
(தெரு நாய்கள்) தினமும் உணவு தானம் செய்து வருகின்றார்களோ,அவர்களுக்கு பைரவரின் அருளும்,பைரவ
சித்துக்களும் சுலபமாக கிடைக்கும்;
இதைச் செய்ய இயலாதவர்கள் கும்பகோணம் அருகில்
இருக்கும் சோழபுரம் அருள்மிகு பைரவேஸ்வரர் கோவிலுக்கு தொடர்ந்து 64 தேய்பிறை அஷ்டமிகளுக்கு
சென்று வழிபடுவதன் மூலமாக அஷ்டமாசித்துக்களை பைரவரின் அருளால் பெற முடியும்;கும்பகோணத்தில்
இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் கிராமம் சோழபுரம்!
இங்கே இருக்கும் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத
பைரவேஸ்வரர் ஆலயத்திற்கும் பைரவ உலகத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கின்றது;ஒவ்வொரு
தேய்பிறை அஷ்டமி திதி ஆரம்பம் ஆகும் நொடியில் இருந்து நிறைவடையும் விநாடி வரை பல சித்தர்கள்
தமது சீடர்களோடு வருகை தந்து இங்கே சூட்சுமமாக வழிபாடு செய்து வருகின்றார்கள்;
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை
மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் ஈசனின் அருளால் மஹாகால
பைரவர் உதயமானார்;
முதல் யுகமான கிருதயுகத்தில் ஒரு ஆண்டு
என்பது நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மூன்று ஆண்டுகளுக்குச் சமம்;முதல் யுகமான
கிருதயுகத்தில் சனி ஒரு ராசியை கடக்க 12 ஆண்டுகள் வரை ஆகியிருக்கின்றது;
பைரவரின் அருளைப் பெற விரும்புவோர் ஒவ்வொரு
சனிக்கிழமை காலை 6 முதல் 7.30 மணிக்குள் கால
பைரவர் சன்னதியில் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;
நாம் வாழ்ந்து வரும் இந்த நூற்றாண்டினை
காலத்தின் மூலமாக நிர்வாகித்து வருபவர் ஸம்ஹார பைரவப் பெருமான் ஆவார்;இவரை தினமும்
ஒரு மணி நேரம் வரை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்து வருவதன் மூலமாக தொல்லைகள் இல்லாத
(நிம்மதியான) வாழ்க்கையை வாழ முடியும்;
வசதியும் சந்தர்ப்பமும் உள்ளவர்கள் இதே
நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் செல்வது மிகவும் நன்று;ஒரே நேரத்தில் மஹா கால பைரவரின்
அருளோடு,அருணாச்சலேஸ்வரரின் ஆசிகளையும் பெற முடியும்;
மஹத்தான செல்வ வளத்தை பெற விரும்புவோர்
புதுக்கோட்டை அருகில் இருக்கும் பொன்பேத்தி என்ற ஊருக்குச் செல்ல வேண்டும்;இங்கே இருக்கும்
அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலுக்குள் கால பைரவராக அருள்பாலித்து வருபவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ
சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;
இவரை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரத்தால்
ஜபிக்க வேண்டும்;அல்லது துர்கை சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகத்தை ஜபித்தும்
வழிபடலாம்;
மஹாவராகியை தினமும் ஜபித்து வருபவர்கள்
மஹா கால பைரவரையும் ஜபிக்கலாம்;
ராகுக் கிரகத்தின் ப்ராண தேவதையாக இருப்பவர்
ஸம்ஹார பைரவப் பெருமான் ஆவார்;இவரின் துணை சக்தியாக இருக்கும் அன்னை சண்டி!
சம்ஹார பைரவரின் காயத்ரி மந்திரம்:
ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்
சண்டியின் காயத்ரி மந்திரம்:
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச
தீமஹி
தந்நோ சண்டி ப்ரசோதயாத்
குறிப்பு:சமஸ்க்ருத வார்த்தைகளை சரியாக
உச்சரிக்கத் தெரிந்தவர்கள்,தினமும் ஒரு மணி நேரம் வரை இந்த காயத்ரி மந்திரத்தை ஜபித்து
வரலாம்;
மஹாகால பைரவரின் அருள் பெற்ற பைரவ சித்தர்
ஸ்ரீவாரதார சித்தரின் அருளால் இக்கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்;