உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் அந்த ஆதிசிவனின் பெயரால் ஆட்சி
செய்து வருபவர் கால தேவன் என்ற மஹாகால பைரவப் பெருமான் ஆவார்;
ஈசன் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை;ஆனால்,தேவைப்படும் போது தன்னுடைய
சக்தியின் ஒரு சிறு பகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;அப்படி வெளிப்பட்டதுதான் பைரவ
சக்தி;
ஈசன் வாழும் இடம் திருக்கையிலாயம் என்பது போல,மஹா கால பைரவப் பெருமான்
வாழ்ந்து வருவது பைரவ உலகம் ஆகும்;எட்டுவிதமான பைரவ உலகங்கள் இருக்கின்றன;ஒவ்வொரு பைரவ
உலகத்திற்கும் ஒவ்வொரு பைரவ பெருமான் தலைவராக இருந்தபடி ஆட்சி செய்து வருகின்றார்கள்;
மனிதனாக வாழ்ந்து வரும் நாம் ஒவ்வொருவரும் தினமும் செய்யும் செயல்களை
எட்டுவிதமான ‘கர்மா’க்களுக்குள் அடக்கிவிடலாம்;இந்த எட்டுவிதமான கர்மாக்கள் மூலமாக
எட்டுவிதமான பாவச் செயல் அல்லது புண்ணியச் செயலைச் செய்துவிடலாம்;எட்டுவிதமான பாவச்
செயல் செய்தால்,64 விதமான தண்டனைகளும்,எட்டுவிதமான புண்ணியச் செயல் செய்தால் 64 விதமான
பூர்வ புண்ணியங்களும் உண்டாகின்றன; நமது பாவ புண்ணிய நடவடிக்கைகளை நவக்கிரகங்கள் மூலமாக
கண்காணித்து,நமது மறுபிறவியை நிர்ணயிப்பதுதான் எட்டுவிதமான பைரவசக்திகளின் கடமை!!!
அதனால் தான் எட்டுவிதமான பைரவர்கள் ஒவ்வொருவரும் தலா எட்டு எட்டாக பிரிந்து
64 விதமான பைரவர்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள்:64 விதமான பைரவ வழிபாடுகள் சமண மதம்,புத்த
மதம்,ஜைன மதம் என்று அனைத்துவிதமான மதங்களிலும் இன்றுவரையிலும் வெவ்வேறு பெயர்களில்
இருக்கின்றன;சில ஆராய்ச்சியாளர்கள் பைரவர்கள் 64 அவதாரங்கள் மட்டும் அல்ல;10,008 பைரவர்கள்
உண்டு என்றும்,சிலர் 1,00,008 பைரவர்கள் உண்டு என்றும் கூறுகின்றார்கள்;
தமிழ்நாட்டில் பைரவர்களின் வீரதீரச் செயல்கள் எட்டு இடங்களில் வெவ்வேறு
யுகங்களில் நிகழ்ந்துள்ளன;அவைகளை அட்டவீரட்ட திருத்தலங்கள் என்று அழைக்கின்றோம்;இந்த
அட்டவீரட்ட திருத்தலங்களுக்கு ஒரே ஒருமுறை சென்று வருபவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்குள்
அவர்களுடைய முற்பிறப்பு ரகசியங்கள் தேடிவரும் என்பது அனுபவத்தில் கிடைத்த உண்மை;
1.திருக்கண்டியூர் (தஞ்சாவூர் அருகில்)
2.திருக்கோவிலூர்
3.திருக்கடையூர் & திருக்கடையூர் மயானம்
4.திருவதிகை (பண்ருட்டி அருகில்)
5.திருப்பறசலூர்(மயிலாடுதுறை அருகில்)
6.வழுவூர்(மயிலாடுதுறை டூ திருவாரூர் சாலையில் 12 வது கி மீ தூரத்தில்)
7.கொறுக்கை என்ற குறுக்கை(மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும்
சாலையில் 18 கி மீ தூரம் பயணித்து பிறகு உள்ளடங்கிய கிராமப்புற சாலையில் செல்ல வேண்டும்)
8.திருவிற்குடி(திருவாரூரில் இருந்து நாகை செல்லும் சாலையில்)
9.சிதம்பரம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி
அட்ட வீரட்டானங்கள் என்று இவைகள் அழைக்கப்படுகின்றன;
இவைகளின் புராண வரலாறு
பற்றி ஒரு சிலர் மட்டுமே நூல்களாக எழுதியுள்ளார்கள்;பழைய புத்தகக் கடைகள் அல்லது
1980 க்கு முந்தைய வெளியீட்டு புத்தகங்களில் இதுபற்றி முழுவிபரங்கள் இருக்கின்றன;
பூமியில் பைரவ சித்தர்களில் ஒருவர் கூட ஜீவசமாதி ஆகவில்லை என்று தெரிகின்றது;பைரவப்
பெருமானைச் சரணடைந்தவர்கள் தமது ஆயுள் முடிந்தவுடன் அவர்களது ஆன்மா பைரவ உலகத்தை நோக்கி
பயணித்துவிடுகின்றது;
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாக,காலத்தை நிர்ணயித்தவர் ஸ்ரீவாரதாரக சித்தர்
என்ற பைரவ சித்தர் ஆவார்;இவரே,ஒரு நாள் என்பதை 16 முகூர்த்தம்(24 மணி நேரம்);ஒரு வாரம்
என்பது ஏழு நாட்கள்,ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் என்று நிர்ணயம் செய்தார்;இவர் இன்றும்
பைரவ உலகம் ஒன்றில் வாழ்ந்து வருகின்றார்;இவரை உபாசனை செய்து தான் ஆர்ய பட்டர் தமது
ஜோதிட நூலையும்,பாஸ்கராச்சாரியார் தனது ஜோதிடம் சார்ந்த வானியல் நூலையும் இயற்றினார்;
நம் ஒவ்வொருவருடைய மனத்திலும் இருக்கும் துணிச்சல் உணர்ச்சியாக இருந்து
கொண்டு நம்மை இயக்குபவர் மஹா கால பைரவப்பெருமான் தான்!!!
தினமும் பைரவ வழிபாடு செய்து வருபவர்களுக்கு குரு பக்தி உருவாகி,அது
வலுவடைந்துவிடும்;உண்மையான குரு தேடி வருவார்;இன்றைய கலியுகத்தில்,ஒவ்வொரு மனிதனுக்கும்
பணத்தாசை/பெண்ணாசை/மண்ணாசை என ஏதாவது ஒரு ஆசை அதிகரிக்கின்றது;இதனால்,பக்தியும்,கடவுள்
மீதான அன்பும் குறைகின்றது;குருவைத் தேடும் எண்ணமே இருப்பதில்லை;இதை சரி செய்யும் ஒரே
ஜபம் பைரவ ஜபம் மற்றும் பைரவ வழிபாடு மட்டுமே!!!
ஒவ்வொரு நாளும் சூரிய உதய நேரத்தின் முன்னும் பின்னும் இருக்கும் நான்கு
நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் எனப்படும்;உதாரணமாக,சித்திரை மாதம் 1 ஆம் நாளன்று சூரிய
உதயம் காலை 5.45க்கு இருக்கும்;இந்த நாளில் பைரவ முகூர்த்தம் காலை 5.41க்கு துவங்கி
காலை 5.49 வரை இருக்கின்றது;அதே சமயம்,ஆவணி மாதம் 1 ஆம் நாளன்று சூரிய உதயம் காலை
6 மணியாக இருக்கின்றது;அப்போது,பைரவ முகூர்த்தம் காலை 5.56 முதல் 6.04 வரை இருக்கின்றது;மார்கழி
மாதம் 1 ஆம் நாளன்று சூரிய உதயம் காலை 6.45க்கு இருக்கின்றது;அந்த நாளில் பைரவ முகூர்த்தமானது
காலை 6.41 முதல் காலை 6.49 வரை இருக்கின்றது;
எட்டு பைரவ உலகங்கள் இருக்கின்றன;ஒவ்வொரு உலகத்தையும் ஒவ்வொரு பைரவப்
பெருமான்கள் ஆட்சி செய்வதாக கூறினோம் அல்லவா?இந்த எட்டு பைரவப் பெருமான்களும் பைரவ
முகூர்த்தத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆட்சி புரிந்து வருகின்றார்கள்;அதன் மூலமாக
இந்த பூமியின் ஒவ்வொரு நாளின் கர்மபரிபாலனத்தையும் அவர்களே ஆரம்பித்து வைக்கின்றார்கள்;
பைரவப் பெருமானை முழு முதற்கடவுளாக எண்ணி தினமும் அவரது அருளைப் பெற
விரும்புவோர், ஒவ்வொரு நாளிலும் வரும் பைரவ முகூர்த்த நேரத்திலும்,ஒவ்வொரு நாளிலும்
வரும் குளிகைக் காலத்திலும் 108 முறை அல்லது 1008 முறை “ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ”
என்று ஜபித்து வர வேண்டும்; 3 ஆண்டுகளுக்குள் அடுத்த பைரவ வழிபாட்டு முறை தேடி வரும்;
பைரவ ஜபத்தின் போது ருத்ராட்ச மாலை அணிந்து ஜபிக்கலாம்;ஐந்து முக ருத்ராட்சங்கள்
108 உள்ள மாலை அணிந்து ஜபித்து வருவதன் மூலமாக ஓராண்டுக்குள் பைரவ அருள் கிட்டிவிடும்;
செல்வத்தின் தெய்வமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கின்றார்;இவர்
தான் மஹாவிஷ்ணுவுக்கு செல்வத்தின் கடவுள் என்ற வரத்தை கொடுத்திருக்கின்றார்;இவரை உபாசனை
செய்துதான் திருவிற்குடி என்ற அட்டவீரட்டானத்தில் சங்கு,சக்கரத்தை தனது ஆயுதமாக மஹாவிஷ்ணு
பெற்றார்;
ராமாயண யுத்தத்தில் ஒரே நேரத்தில் தனது பத்து தலைகளை யார் வீழ்த்துகின்றார்களோ,அப்போதுதான்
தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை ராவணன் பெற்றிருந்தான்;அதனால்,அகத்திய மகரிஷியின்
உபதேசப்படி,அஷ்ட பைரவர்களில் ஒருவரை ஸ்ரீராமபிரான் உபாசனை செய்து,பைரவ பாணம் ஒன்றினை
வரமாக பெற்றார்;அதன் பிறகுதான் ஸ்ரீராமனால்,சிவபக்தனாகிய ராவணனை வீழ்த்த முடிந்தது;
இருடிகள் ராமாயணத்தில் மட்டுமே இருக்கும் ராமாயண மறை பொருள் இது;
(இருடிகள் ராமாயணம்
என்பது சித்தர் பெருமக்களால் எழுதப் பட்ட ராமாயணம் ஆகும்;சித்தர் பெருமக்கள் ராமாயண
சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நேரில் பார்த்து,அதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்துள்ளார்கள்)
எல்லா சிவாலயங்களிலும் ஷேத்திரபாலராக கால பைரவர் இன்றும் இருந்து வருகின்றார்;அதே
போல,எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் ஷேத்திரபாலராக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் இருந்திருக்கின்றார்;இன்றைக்கு
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் இருக்கும் தாடிக்கொம்பு என்ற கிராமத்தில்
இருக்கும் அருள் மிகு சவுந்தர ராஜப் பெருமாள் திருக்கோவிலில் மட்டுமே க்ஷேத்திரபாலராக
அமைந்திருக்கின்றார்;
ஒரு ஊரில் ஒரு நல்ல காரியம் செய்ய முயலும் போது அதை நிறைவேற்ற விடாமல்
நமது மனமே பல எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கும்;
சில ஊர்களில் எப்போதும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கக்
கூட முடியாது;காரணம்,இம்மாதிரியான ஊர்களில் தீய ஆத்மாக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து
வருவதுதான் காரணம்;
நல்ல எண்ணத்திற்கும் தீய எண்ணத்திற்கும் இடையிலான போராட்டம் இந்த பூமியைப்
பொறுத்தவரையில் நிரந்தரமானது;
இந்த போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்?
நல்ல சக்தியுள்ள,நல்ல எண்ணமுள்ள,நல்லவனாக வாழ்ந்து வரும் மனித ஆத்மாக்கள்
ஓளி உலகத்தை அடையும் வரை இந்த போராட்டம் தொடரும்;
இந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வர பின்வரும் அமைப்புடைய சிவாலயத்தில்
பைரவ பூஜை,பைரவ யாகம்,பைரவ மந்திர ஜபம்,பைரவ யோகத்தை தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும்;
எல்லா சிவாலயங்களிலும் மூலவருக்கு பின்புறமாக லிங்கோத்பவர் சன்னதி அமைந்திருக்கும்;சில
பல சிவாலயங்களில் லிங்கோத்பவர் சன்னதிக்குப் பதிலாக அர்த்த நாரீஸ்வரரோ அல்லது பிட்சாடனரோ
சன்னதியாக அமைக்கப்பட்டிருக்கும்;இவ்வாறு இருக்கும் ஆலயங்களுக்கும் ஒளி உலகங்களுக்கும்
நேரடியாகத் தொடர்பு உண்டு;இங்கே தொடர்ந்து செய்யப்படும் பைரவ பூஜை,பைரவ வழிபாடு,பைரவ
ஜபம்,பைரவ தவம் எவ்வித தங்குதடையின்றி சுலபமாக நிறைவேறி,ஒளி உலகங்களின் உதவியால் உன்னதமான
நிலையை பைரவ பூஜை/யாகம்/தவம்/ஜபம் செய்பவர்கள் அடைந்துவிடுவார்;
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி திதி நாட்களில் அண்ணாமலை
கிரிவலம் வந்து கொண்டே இருந்தால் நமது கஷ்டங்கள்,வேதனைகள்,சோகங்கள் காணாமல் போய்விடும்;108
அஷ்டமிகளுக்கு தொடர்ந்து இவ்வாறு கிரிவலம் வருவதன் மூலமாக பைரவ உலகத்தில் வாழ்ந்துவரும் பைரவ சித்தர்களின் நேரடித் தொடர்பு கிடைத்துவிடும்;
குரு கிரகம் சுபராகி,சுப ஸ்தானத்தில் இருப்பவர்களால் கட்டப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ
சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் அவரே எழுந்தருளி செல்வ வளத்தை அனைத்து மக்களுக்கும்
அள்ளித் தருவார்;
அட்டவீரட்டானங்களைக் கடந்தும் பலவிதமான சக்தி வாய்ந்த பைரவ ஆலயங்கள்
தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன;அவைகளில் சென்றுமுறையாக வழிபட்டு வர நமது முற்பிறவி
பைரவ உபாசனைகள் மீண்டும் தொடரும் சந்தர்ப்பம் வாய்க்கும்;
கோவில்களை வழிபடாமல் விட்டுவிடுதல்,12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்
கும்பாபிஷேகம் செய்யாமல் இருப்பது,கோவில் மூலவர் திருட்டு போனால் அதுபற்றி கவலைப்படாமல்
வேறு ஒரு மூலவரை ஸ்தாபிப்பது(நாத்திகவாதிகள் செய்த பாவங்களில் முதன்மையானது இது),ஆகம
விதிகளை மதிக்காமல் இஷ்டத்துக்கு பூஜைகள் செய்வது,கோவிலை திறப்பது மற்றும் பூட்டுவது
போன்றவைகளால் தான் பைரவ சாபம் உண்டாகின்றது;
பைரவரை நம்பினோர் கைவிடப்படார்;
பைரவரை தொடர்ந்து வழிபடும் போது,வராகி வழிபாடு தானாகவே தேடி வரும்;
ஒருவரே ஒரே நாளில் பைரவ வழிபாட்டினை பகல் பொழுதிலும்,வராகி வழிபாட்டினை
இரவுப் பொழுதிலும் செய்து வரலாம்;
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!
No comments:
Post a Comment