Saturday, August 12, 2017

ஒவ்வொருவரும் தினமும் ஜபிக்க வேண்டிய அகத்தியப் பதிகங்கள் !!!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினந்தோறும் ஓதியே ஆக வேண்டும்.
இத்திருமுறைப் பாடல்கள் அனைத்தும் நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுடன் தொடர்பு கொண்டவை.
ஆனால், இன்றைய கலியுகத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதனால் பன்னிரு திருமுறைகளில் உள்ள அனைத்துப் பாடல்களையும் தினமும் ஓத முடியுமா? தேவாரம், திருக்கோவையார்,திருப்பல்லாண்டு, திருவாசகம், பெரிய புராணம், திருவிசைப்பா, திருமந்திரம் போன்ற நூல்கள் இப்பன்னிரு திருமுறை தொகுப்பில் அடங்கும்.
இறைப் பெரும் அடியார்களால் இறையருளால் மனித குல மேம்பாட்டிற்காக அருளப் பெற்றவையே இந்தப் பாக்கள். சாதாரண மனிதனுக்கு உண்டான இறை பக்தி, அவனுக்கு உலகப் பொருட்கள் மேல் உள்ள நாட்டம் இவற்றை முழுவதுமாக உணர்ந்த சித்தர் குல நாயகரான ஸ்ரீஅகஸ்திய மாமுனி கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினமுமே எவ்வாறு ஓத முடியும் என்பதைக் குறித்து பொதிய மலையில் இறைவனை நோக்கி தவமியற்றினார்.
அன்ன ஆகாரமின்றி பன்னெடுங் காலம் அவருடைய தவம் தொடர்ந்தது. நீண்ட கால தவத்திற்குப் பின் எம்பெருமான் மனம் கனிந்து ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு காட்சி அளித்து அச்சித்தர் பிரானின் நீண்ட தவத்திற்கான காரணத்தை வினவினார்.
ஸ்ரீஅகஸ்திய மாமுனியும், “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! தாங்கள் அறியாதது ஒன்று உண்டா? கலியுகத்தில் இன்று வாழும் மனிதன் தன்னுடைய சாதாரண கடமையான பொருள் ஈட்டுதல், குடும்பத்திற்காக உணவு தேடுதல், குடும்பத்தாரைப்பாதுகாத்தல் என்று சுயநல செயல்களிலேயே தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டு விடுகிறான். தன்னுடைய உண்மையான கடமையான சிவ வழிபாட்டை முற்றிலுமாக மறந்து விட்டு அலைகிறான். சிவ வழிபாட்டிற்காக தற்போது செலவிடும் நேரத்தை மிக மிகக் குறைவாக மனித சமுதாயம் அமைத்துக் கொண்டு விட்டது. அதனால் மனிதன் சிவ வழிபாட்டை இயற்றாமல் வீணாக்கிய நேரம் என்னும் சஞ்சித கர்மாவின் அளவு பெருகிக் கொண்டே வருகிறது. இந்த வினைச் சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது சித்தர்களின் கடமை அல்லவா? இதுவும் தாங்கள் எங்களுக்குக் கருணை மேற்கொண்டு அளித்த பெரும் பேறு அல்லவா?’’
கிருத யுகத்தில் நிகழ்ந்தது போல் இன்றைய கலியுகத்தில் வேத பாராயணத்தை நிறைவேற்ற இயலாவிட்டாலும் பன்னிரு திருமுறைப் பாக்களைத் தினமும் ஓதி வந்தால், அதுவே கலியுக மனிதன் வேதம் ஓதிய பலனை அடைய வழிகாட்டும் என்று முன்னரே அருளினீர்கள்.
ஆனால், இன்றைய மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்களைக் கூட தினமும் முழுமையாக ஓத முடியாக அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளான். தாங்கள் பெருங் கருணை கொண்டு பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற இறை நியதிக்குச் சற்று விலக்கு அளிக்க வேண்டும் என்று தங்கள் திருவடிகளைச் சரணடைந்து கேட்டுக் கொள்கிறேன்," என்று எம்பெருமானிடம் தன்னுடைய கருத்தை வெளியிட்டார் அகத்திய மாமுனி.
உனது வேண்டுகோள் எமக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கிறது, மாமுனியே. மண்ணுயிர்கள் மேல் நீர் கொண்ட கருணை ஒப்பற்றது. நீர் விரும்பிய வண்ணமே கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற எமது நியதியிலிருந்து சற்றே விலக்கு அளித்து சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் ஓதினாலே யுக தர்ம நியதியால் அவனுக்கு அனைத்துப் பாடல்களையும் ஓதிய பலன் கிடைக்க யாம் வழி செய்வோம்," என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
இவ்வாறு வேத நாயகனான சிவபெருமான் பெருங் கருண கொண்டு நமக்கு அளித்த பாடல்களே ஸ்ரீஅகஸ்தியர் பன்னிரு முறைத் திரட்டு என்னும் இறைப் பாக்கள் ஆகும்.
காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் இந்தப் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபடலாம்.
தனி மனித ஆராதனையை விட கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம்.
இறையடியார்கள் தங்கள் குடும்பத்திலுள்ள அனைவருடனும் சேர்ந்து இந்தப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என அனைவரையும் ஒன்று திரட்டி இத்திருப்பதிகங்களை ஓதி வந்தால் சமுதாய ஒற்றுமையும், அமைதியும் நிலவ வழி ஏற்படும்.
இந்தப் பன்னிரு திருமுறைத் திரட்டுப் பாடல்களைக் காரிய சித்திக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, நோயால் வாடும்போது மந்திரமாவது நீறு ... என்னும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகத்தை ஓதி திருநீறு அணிந்து வந்தால் நோய் அகலும். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களின் கடுமை தணியும். திருமணம், வீடு, நிலம் போன்ற நியாயமான தேவைகளுக்காகவும், வருமானத்தை மிஞ்சிய செலவு, கடன் தொல்லை போன்றவை நிவர்த்தியாகவும் வாசி தீரவே காசி நல்குவீர் .. என்ற திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகத்தைத் தொடர்ந்து ஓதி பலன் பெறலாம்.
ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று மூன்று முறை ஓதுதல் சிறப்பு.
பாடல் பெற்ற சிவத் தலங்கள், மங்கள சாசனம் அமைந்த பெருமாள் தலங்கள் (திவ்ய க்ஷேத்திரங்கள்), சுயம்பு மூர்த்தி அருளும் தலங்கள், கங்கை, காவிரி போன்ற புனித நதிக் கரைகள், துளசி மாடம், பசுமடம், திருஅண்ணாமலை, ஐயர்மலை, பழனி மலை கிரிவலப் பாதைகள், மலைத் தலங்களில் இந்தப் பதிகங்களை ஓதுவதால் வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.
ஆனால், அபரிமிதமான இந்தப் பலன்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் வெள்ளம், புயல், வறட்சி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கவும், சமுதாய அமைதிக்காகவும், இன ஒற்றுமைக்காகவும் அர்ப்பணித்தல் சிறப்பாகும்.
அன்னை ஸ்ரீபாகம்பிரியாளுக்கு நன்றிகள்!!!

திருப்பிரமபுரம் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்
1. தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி, 
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
2. முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,
வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
3. நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
“ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது” என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
4. விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
5. “ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும்(ம்)
இவன்!” என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம்
கவர் கள்வன்-
“கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது” என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
6. மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
7. சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம்
கவர் கள்வன்-
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம்
சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
8. வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம்
கவர் கள்வன்-
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
9. தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்-
வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
10. புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
“மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது!” என்ன,
பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
11. அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.
திருச்சிற்றம்பலம்

திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்

திருச்சிற்றம்பலம்
1.மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு; 
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.
2.வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.
3.முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
4.காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
5.பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
6.அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு;
 திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.
7.எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.
8.இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
9.மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு;
 ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.
10.குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,
கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.
11.ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருச்சிற்றம்பலம்

பஞ்சாக்கரத் திருப்பதிகம்



திருச்சிற்றம்பலம்
1.துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,
வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உடைத்தன, அஞ்சு எழுத்துமே.
2.மந்திர நால்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று, அவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே.
3.ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர்
ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து
ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
4.நல்லவர் தீயவர் எனாது, நச்சினர்
செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
5.கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து; அகத்து
அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்;
தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை
அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே.
6.தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்,
அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே.
7.வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர்
பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும்
மாடு கொடுப்பன; மன்னு மா நடம்
ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே.
8.வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.
9.கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச்
சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும்,
பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.
10.புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின;
வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.
11.நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை
கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய
அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து
உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.
திருச்சிற்றம்பலம்

பொது - நமச்சிவாயத் திருப்பதிகம்



திருச்சிற்றம்பலம்
1.காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
2.நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,
வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது;
செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எலாம்;
நம்பன் நாமம் நமச்சிவாயவே.
3.நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.
4.இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்;
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன், நாமம் நமச்சிவாயவே.
5.கொல்வாரேனும், குணம் பல நன்மைகள்
இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்,
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லான் நாமம் நமச்சிவாயவே.
6.மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்,
சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.
7.நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும்,
உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்-
வரதன் நாமம் நமச்சிவாயவே.
8.இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்,
மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே.
9.போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்
பாதம் தான் முடி நேடிய பண்பராய்,
ஆதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.
10.கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள்
வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்-
விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய்
நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே.
11.“நந்தி நாமம் நமச்சிவாய!” எனும்
சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே.
திருச்சிற்றம்பலம்

திருக்க்ஷேத்திரக் கோவை

திருச்சிற்றம்பலம்
1.ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம், வடகச்சியும்,
அச்சிறுபாக்கம், நல்ல
கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி, கடல் சூழ்
கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர்
நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும், குருகாவையூர்,
நாரையூர், நீடு கானப்
பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும், பிதற்றாய்,
பிறைசூடிதன் பேர் இடமே!
2.அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு அகலா
முதுகுன்றம், கொடுங்குன்றமும்
கண் ஆர் கழுக்குன்றம், கயிலை, கோணம் பயில் கற்குடி,
காளத்தி, வாட்போக்கியும்,
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான்
பரங்குன்றம், பருப்பதம், பேணி நின்றே,
எண்ணாய், இரவும் பகலும்! இடும்பைக்கடல் நீந்தல் ஆம்,
காரணமே.
3.அட்டானம் என்று ஓதிய நால் இரண்டும், அழகன்(ன்)
உறை கா அனைத்தும், துறைகள்
எட்டு ஆம், திருமூர்த்தியின் காடு ஒன்பதும், குளம்
மூன்றும், களம் அஞ்சும், பாடி நான்கும்,
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை பங்கன் மதிக்கும்(ம்)
இடம் ஆகிய பாழிமூன்றும்,
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய், அரும்பாவங்கள்
ஆயின தேய்ந்து அறவே!
4.அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, வெள்ளைப் பொடி பூசி
ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்
சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திரு நனிபள்ளி,
சீர் மகேந்திரத்துப்
பிறப்பு இல்லவன் பள்ளி, வெள்ளச் சடையான் விரும்பும்(ம்)
இடைப்பள்ளி, வண் சக்கரம் மால்
உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி, உணராய், மட
நெஞ்சமே, உன்னி நின்றே!
5.ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு,
அணி ஆர் பெருவேளூர், விளமர், தெங்கூர்,
சேறை, துலை புகலூர், அகலாது
இவை காதலித்தான் அவன் சேர் பதியே.
6.மன வஞ்சர் மற்று ஓட, முன் மாதர் ஆரும் மதி கூர்
திருக்கூடலில் ஆலவாயும்,
இன வஞ்சொல் இலா இடைமாமருதும்,
இரும்பைப்பதிமாகாளம், வெற்றியூரும்,
கனம் அம் சின மால்விடையான் விரும்பும் கருகாவூர்,
நல்லூர், பெரும்புலியூர்,
தன மென்சொலில் தஞ்சம் என்றே நினைமின்! தவம் ஆம்;
மலம் ஆயினதான் அறுமே.
7.மாட்டூர், மடப் பாச்சிலாச்சிரமம், மயிண்டீச்சுரம், வாதவூர்,
வாரணாசி,
காட்டூர், கடம்பூர், படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர்,
மற்று உறையூர் அவையும்,
கோட்டூர், திரு ஆமாத்தூர், கோழம்பமும்,
கொதுங்கோவலூர், திருக்குணவயில்,
8.* *குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம்,
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியாத் தென்
புறம்பயம், பூவணம், பூழியூரும்,
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடிதோள்
நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே!
9.நெற்குன்றம், ஓத்தூர், நிறை நீர் மருகல், நெடுவாயில்,
குறும்பலா, நீடு திரு
நற்குன்றம், வலம்புரம், நாகேச்சுரம், நளிர்சோலை
உஞ்சேனைமாகாளம், வாய்மூர்,
கல்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்வண்ணனும் மா
மலரோனும் காணாச்
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு,
என்று சொல்லிக் குலாவுமினே!
10.குத்தங்குடி, வேதிகுடி, புனல் சூழ் குருந்தங்குடி,
தேவன்குடி, மருவும்
அத்தங்குடி, தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன்
சடை வைத்து உகந்த
நித்தன், நிமலன், உமையோடும் கூட நெடுங் காலம்
உறைவு இடம் என்று சொல்லாப்
புத்தர், புறம்கூறிய புன் சமணர், நெடும் பொய்களை விட்டு,
நினைந்து உய்ம்மினே!
11.அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற அமரர்பெருமான், பதி
ஆன உன்னி,
கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு இறைவன்
சிவ ஞானசம்பந்தன் சொன்ன
இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும்
நினைந்து ஏத்தி நின்று,
விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார், விதியார் பிரியார்,
சிவன் சேவடிக்கே.
திருச்சிற்றம்பலம்

திருப்பிரமபுரம் - திருஎழுகூற்றிருக்கை



திருச்சிற்றம்பலம்
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;
ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை;
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,
மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.
திருச்சிற்றம்பலம்