Sunday, May 3, 2015

உத்திராட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கரூர் வடுக பைரவர்!!!






குரங்கு முகமும்,மனித உருவும் கொண்ட முசுகுந்தச் சக்கரவர்த்தி கருர் கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கு திருப்பணிகள் செய்தார்.மூவேந்தர்களின் சேரமன்னர்களின் முடுசூடும் இடமாக இந்த ஆலயம் இருந்திருக்கிறது.புகழ்ச்சோழன் பெயரால் நூற்றுக்கால் மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.கொங்கு மண்டலத்தில் அமைந்திருக்கும் ஏழு புராதனமும் பெருமையும் நிறைந்த ஆலயங்களில் இதுவே முதன்மைத் தலம் ஆகும்.தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலாகிய இங்கே சுயம்பு மூர்த்தியாக கல்யாணபசுபதி ஈஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.விண்ணவரையும்,மண்ணவரையும் ஒன்றாகப் பாவிக்கும் வகையில் சவுந்தரநாயகி ஒரு அம்பாளாகவும்,வேட்டுவக் குலத்தில் பிறந்து பசுபதியை நோக்கி பெரும் தவம் செய்து மணம் புரிந்த அலங்காரவள்ளி மற்றொரு அம்பாளாகவும் அமைந்திருக்கின்றனர்.
கருவூர் சித்தர் இங்கே சூட்சுமமாக இருந்து கரூர் மாவட்ட மக்களையும்,தேடி வரும் அனைத்து ஆத்மாக்களையும் வழிநடத்தி வருகிறார்.

இப்பேர்ப்பட்ட சிறப்பு வந்த இந்த ஆலயத்தில் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய வடுக பைரவர் அருள்பாலித்துவருகிறார்.
தொடர்ந்து 6 உத்திராட நட்சத்திரம் வரும் நாட்களில் மூலவர்,அம்பிகைகள்,சித்தர் கருவூராருக்கு அபிஷேகம் செய்துவிட்டு,ராகு காலத்தில் வடுக பைரவரைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.இதன் மூலமாக வடுக பைரவரின் அருளாசி உத்திராட நட்சத்திரக்காரர்களுக்குக் கிட்டும்.

தொலைதூரத்தில் வசிக்கும் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்த  வாசக,வாசகிகள்  தனது பூஜை அறையில் வைத்து தினமும் 108 முறை ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுதி வரலாம்; அல்லது ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி வாசித்து வரலாம்;நிறைய ஓய்வு நேரம் உள்ளவர்கள் ஸ்ரீகாலபைரவர் 1008 போற்றியை வாசித்து வரலாம்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்குரிய சூரக்குடி கதாயுத பைரவர்!!!






காரைக்குடி நகராட்சிக்கு அருகில் பள்ளத்தூர் அமைந்திருக்கிறது.பள்ளத்தூர் அருகே இருக்கும் சூரக்குடியில் தேசிகநாதர்+ஆவுடைநாயகி திருக்கோவிலில் அமைந்திருக்கும் கதாயுதம் தாங்கியிருக்கும் பைரவப் பெருமானே கேட்டை நட்சத்திர பைரவர் ஆவார்.

இன்னொரு கேட்டை நட்சத்திர பைரவர் திருப்பத்தூரில் இருந்து சிவகெங்கை செல்லும் வழியில் திருக்கோட்டியூருக்கு முன்னதாக 1.6 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கும் திருமெய்ஞானபுரம்(T.வைரவன்பட்டி=திருக்கோட்டியூர் வைரவன்பட்டி) ஆகும்.
ராஜராஜசோழ மன்னனின் குல தெய்வம் இது.இந்தக் கோவிலில் முறைப்படி அனுமதி பெற்றப் பின்னரே தஞ்சை பெரிய கோவிலை கட்டினார்.இத்திருக்கோவிலானது 1500 ஆண்டுகள் பழமையானது.

ஜன்ம நட்சத்திர நாட்களில் இவர்களில் ஒருவரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் கேட்டை நட்சத்திரக்காரர்கள் வளமான வாழ்க்கையைப் பெறுவார்கள்.

அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆடுதுறை சொர்ணபைரவர்!!!





முற்பிறவிகளில் அளவற்ற தான தர்மங்களைச் செய்தவர்கள் இப்பிறவியில் அனுஷம் நட்சத்திரத்தில் பிறப்பார்கள்.முற்பிறவியில் சிறிது பூர்வபுண்ணியம் சேர்த்தவர்களும் இப்பிறவியில் தகுந்த ஆன்மீக குருவை அடைவது அனுஷத்தில் பிறந்தவர்களே!

ராமாயண காலத்தில்,வாலிக்குப் பயந்து சுக்ரீவன் தென்குரங்காடு துறையில் தஞ்சம் புகுந்தான்.தன்னைக் காத்து அருளும்படி இங்கே வீற்றிருக்கும் சிவனிடம் வேண்டினான்.அவனது பக்திக்கு இரங்கிய சிவபெருமான் சுக்ரீவனை அன்னப் பறவையாக மாற்றி ஆபத்திலிருந்து காப்பாற்றினார்.எனவே,இத்தலத்தின் பெருமான் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.சகாயம் என்ற பெயர் இடும் பழக்கம் இங்கிருந்தே உலகம் முழுவதும் பரவியது;சுக்ரீவன் வழிபட்டதால் இந்த தலத்திற்கு குரங்காடு துறை என்ற பெயர் உண்டானது.காவிரியின் தென்கரையில் இத்தலம் அமைந்ததால் தென் குரங்காடு துறை என்று மாறியது.

அகத்தியர் இந்த தலத்தில் சுவர்ண பைரவர் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.அதனாலேயே பல வரங்களைப் பெற்றார்.அவருக்கு ஈசன் நடனகோலம் காட்டியருளினார்.சுவர்ணபைரவர் இங்கே சக்தி வாய்ந்தவராக அருள்பாலித்துவருகிறார்.

திருக்கையிலாய மலையில் மனமுருகி இசையுடன் பாடிக் கொண்டிருந்தார் அனுமன்.சைவ அனுமன் என்று ஒருவர் உண்டு.அவ்வழியே வந்த நாரதர் அந்த இசையைக் கேட்டு மெய்மறந்து அமர்ந்துவிட்டார்.பின்னர்,அங்கிருந்து புறப்பட்ட சமயத்தில் அவர் கீழே வைத்திருந்த ‘மஹதி’ என்ற வீணை மீது பனி உறைந்துவிட்டது.இதனால்,ஆத்திரப்பட்ட நாரதர் நீ உன் இசையை மறப்பாய் என்று சைவ அனுமனைச் சபித்தார்.இந்த சாபத்தால் மனம் வருந்திய சைவஅனுமன் சுக்ரீவன் வழிபட்ட இத்தலம் வந்து ஆபத்சகாயேஸ்வரரை மனமுருகி பல ஆண்டுகள் வழிபட்டார்.இதன்மூலமாக மறந்து போன இசைஞானம் திரும்பக் கிடைத்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் தாலுகாவில் கும்பகோணம் டூ மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் ஆடுதுறையில் ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாதம் ஒருமுறை(சில சமயம் இருமுறை) வரும் தனது ஜன்ம நட்சத்திர நாளில் இங்கே வர வேண்டும்;ராகு காலத்துக்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்;பிறகு,ராகு காலத்தில் இங்கே அமைந்திருக்கும் சொர்ண பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அவ்வாறு அபிஷேகம் செய்யும்போது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் 108 போற்றியைப் பாட வேண்டும்.அல்லது துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகத்தைப்பாடலாம். இவ்வாறு தொடர்ந்து 6 ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு செய்து வர இறையருளும்,குருவருளும்,பைரவ அருளும் சித்திக்கும்.



அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருப்பத்தூர் டூ புதுக்கோட்டை மார்க்கத்தில் அமைந்திருக்கும் தபசுமலையில் இருக்கும் சுவர்ண பைரவரையும் வழிபடலாம்.

பூச நட்த்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம் யோகபைரவப் பெருமான்!!!





பிரம்மனின் மகன் தட்சன்.தட்சன் தனது மகள் தாட்சாயணியை சிவனுக்கு மணம் முடித்துக் கொடுக்க மறுத்தப் பின்னரும்,சிவன்+தாட்சாயணி திருமணம் நடைபெற்றது.இதனால் கோபம் கொண்ட தட்சன் சிவனை அழைக்காமல் வேள்வி செய்தான்.தட்சன் வேள்வியின் அவிர்ப்பாகத்தை சிவனுக்குத் தரவில்லை;ஆனால்,பிரம்மாவோ அவிர்ப்பாகத்தை சிவனின் நந்திக்குக் கொடுத்துவிட்டார்.இதனால் மேலும் ஆவேசமடைந்த தட்சன் மேருவின் வடக்கே புதிய வேள்வி ஒன்றைத்துவங்கினான்.சிவனைத் தவிர,அனைத்து தேவர்களுக்கும்,ரிஷிகளுக்கும் அழைப்பு விடுத்தான்.அனைவருமே இந்த புதிய வேள்வியில் கலந்துகொண்டனர்.

தட்சனின் மகள் தாட்சாயணி அந்த புதிய வேள்விசாலைக்கு வந்து அவிர்ப்பாகத்தை சிவனுக்குத் தராமல் வேள்வி நடத்துவதே தவறு என்று தனது தந்தைக்குச் சுட்டிக்காட்டினாள்.ஆனால்,அனைவரது முன்பாகவும் தனது மகள் தாட்சாயணியை அவமானப்படுத்தினான் தட்சன்.இதனால் வேதனையடைந்த தாட்சாயணி அந்த யாகசாலையில் இருந்த அனைவருக்கும் சாபம் கொடுத்துவிட்டு, யாக குண்டத்தில் வீழ்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டாள்.

இதையறிந்த சிவன் கடும்கோபம் கொண்டார்.வீரபத்திரர் தலைமையில் ஒரு பெரிய படையை அனுப்பி யாகத்தை அழிக்கச் சொன்னார்.
வீரபத்திரரும் யாகம் நடைபெற்றுவந்த இடத்தை சின்னாபின்னப்படுத்தினார்.அங்கே இருந்த அனைவரையும் அடித்து நொறுக்கினார்.இந்திரன்,சந்திரன்,விஷ்ணு,எமன்,அக்னி,வாயு,குபேரன்,   வருணன் என்று அனைவரையும் வதம் செய்தார்;சூரியனின் கன்னத்தில் வீரபத்திரர் ஓங்கி அறைய சூரியனின் பற்கள் கீழே விழுந்தன.இறுதியில் மஹாவிஷ்ணுவின் வேண்டுகோளின் பெயரில் கோபம் தணிந்தார் வீரபத்திரர்.அது சமயம் அங்கே வருகை தந்த சிவன் இறந்தவர்கள் அனைவரையும் மன்னித்து உயிர்ப்பிச்சை அருளினார்.

பற்கள் இழந்த சூரியன் இந்த பாவம் தீர,சிவனிடம் பாவ விமோசனம் கேட்டார்.சிவன் சொன்ன உபதேசம் இது:-கார்த்திகை மாதம் முழுவதும் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமியை வழிபட்டால்,சிவத் துரோகத்தால் ஏற்பட்ட பாவம் போகும்
சூரியன் அதே போல இங்கே வந்து தங்கி கார்த்திகை மாதம் முழுவதும் ஸ்ரீவாஞ்சியம் வந்து தங்கினார்;இங்கே அமைந்திருக்கும் முனிதீர்த்தம் என்ற  குப்த கங்கையில் நீராடி வழிபட்டார்.இதனால்,சிவ அபவாதம் நீங்கியது.
மேலும்,கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கே வந்து வழிபட்டால் பஞ்சமாபாவங்களும் மன்னிக்கப்படும் என்று சிவன் வரம் அருளினார்.

ஸ்ரீயை வாஞ்சித்து பல ஆண்டுகள் மஹாவிஷ்ணு தவம் இருந்ததால் இந்த ஆலயம் ஸ்ரீவாஞ்சியம் என்று பெயர் பெற்றது.ஸ்ரீ என்பது மஹாலட்சுமியின் இன்னொரு பெயர் ஆகும்.

பொன்வண்டு உருவம் எடுத்து,1000 ஆண்டுகள் ஸ்ரீகால பைரவப் பெருமான் ஸ்ரீவாஞ்சீசரை வழிபட்டார்.இதனால்,அகமகிழ்ந்த ஸ்ரீவாஞ்சீசரர்,இங்கே இருப்பவர்களுக்கு பைரவ உபாதையே கிடையாது என்று வரம் தந்தார்.ஸ்ரீவாஞ்சீசரின் வாகனம் இங்கே எமதர்மன் ஆவார்.

எனவே,இங்கே வந்து வழிபடுபவர்களுக்கு எமவாதனை,பைரவ உபாதை கிடையாது.கடுமையான ராகு,கேது தோஷங்கள் இருப்பவர்கள் இங்கே வந்து முறைப்படி வழிபட அதிலிருந்து மீள்வார்கள்.

பூசம் நட்சத்திரக்காரர்கள் இங்கே வந்து தனது ஜன்ம நட்சத்திர நாட்களில் வழிபட்டால்,பைரவரின் ஆசியையும்,இந்த ஜன்மத்திலும் மறுஜன்மத்திலும் சிறந்த வாழ்க்கையைப் பெறுவார்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய பாண்டிச்சேரி ஸ்ரீகாலபைரவப் பெருமான்!!!






முண்டகன் என்னும் அரக்கனைக் கொன்ற பாவம் தீர,ஸ்ரீகாலபைரவப் பெருமான் இங்கே சிவலிங்கம் அமைத்து வழிபட்டார்;வடுகன் என்ற பெயர் ஸ்ரீகாலபைரவருக்கு உண்டு.வடுகர் இங்கே வழிபட்டதால் இந்த ஊருக்கு வடுகூர் என்ற பெயர் உண்டானது.இங்கே இருக்கும் தீர்த்தத்திற்கு வடுக தீர்த்தம் என்ற வாமதேவத் தீர்த்தம் என்று பெயர்.வடுகனுக்கு ஆண்ட பிள்ளையார் என்ற பெயர் ஆரம்பத்தில் இருந்தது.அதுவே ஆண்டார் கோவில் என்று மாறிவிட(மருவி விட) அதுவே இந்த ஊரின் பெயராகவும் மாறிவிட்டது.திருஞானசம்பந்தர் இந்த ஆலயத்திற்கு வருகை தந்துபாடியிருக்கிறார்.வடுககோலம் என்ற தலைப்பில் பாடப்பட்டிருப்பது இந்த ஆலயத்தைத் தான்!

கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியே ஸ்ரீகால பைரவரின் பிறந்த திதி ஆகும்.எனவே,இதை காலபைரவ அஷ்டமி என்றே அழைக்கிறோம்.

பாண்டிச்சேரியில் விழுப்புரம் டூ பாண்டிச்சேரி சாலையில் கண்டமங்கலம் வழியே செல்லும் பாதையில் திருவாண்டார் கோவில் அமைந்திருக்கிறது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனது ஜன்ம நட்சத்திர நாளில் இங்கே வந்து இராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சகல வளங்களையும்,நலங்களையும் பெறுவர்.

மிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய க்ஷேத்திரபால பைரவப் பெருமான்!!!





பூலோகத்திற்கு வந்திருந்த பிரம்மா விஷ்ணுவிடம் தானே வல்லவன்;தனது ஆணையால் தான் விஷ்ணு பூவுலைக் காக்கிறார்;குரூர கர்மத்தினால் அழிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதால் அவர் மேலானவர் அல்ல; என்று வாதிட்டார்.

அப்போது சிம்பு(சிவனின் இன்னொரு பெயர் இது) பார்வதி மற்றும் தனது பாதுகாவலர் காலபைரவப் பெருமானுடன் அவ்விடம் வந்தார்;பிரம்மனின் இந்த திமிரான பேச்சைக் கேட்டு,அவரது ஐந்தாவது தலையைக் கொய்யும்படி காலபைரவப் பெருமானுக்கு ஆணையிட்டார்.அதன்படி,ஸ்ரீகாலபைரவப் பெருமான்,பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தார்;அவ்வாறு கொய்தப் பின்னரும்,பிரம்மா உயிரோடு இருந்தார்.தனது அகங்காரம் நீங்கியதால் அவர் பைரவப் பெருமானைத் துதிக்கத் துவங்கினார்.

பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.அது நீங்குவதற்காக,சிம்புவின்(சதாசிவனின்) உத்தரவுப்படி 12 ஆண்டுகள் வரை(ஜோதிடப்படி குரு ஒரு ராசிக்கு மீண்டும் வர ஆகும் காலம்) பல இடங்களில் திரிந்து கபாலத்தில் ரத்தபிட்சை எடுத்துவந்தார்.

ஒரு சமயம்,விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் சென்று பிச்சை கேட்டார்.விஷ்ணு இயன்ற அளவு ரத்த பிட்சை அளித்தும் கபாலம் நிறையவில்லை;எனவே,விஷ்ணு கூறினார்:- நான் பத்து அவதாரங்கள் எடுத்து,ஒவ்வொரு அவதாரத்திலும் எதிரிகளைக் கொன்று அதன் மூலம் போதுமான ரத்தப் பிட்சை அளிப்பேன்
அவ்வாறு ரத்தப் பிட்சை எடுத்து வந்தபோது காவேரி தீர்த்தம் அருகே வந்ததும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.ஸ்ரீகாலபைரவ பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடமே க்ஷேத்திரபாலபுரம் ஆகும்.

ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு தோஷம் நீங்கும் இடத்தில் சூலம் கிடைக்கும்;என்று சிம்பு(சதாசிவன்) கூறியிருந்தார்.அதன்படி இங்கே கிடைத்த சூலத்தை எடுத்துக் கொண்டார்.பின்னர் ஸ்வேதவிநாயகரை வணங்கினார்.

இந்த ஊரில் பிறக்கும் மனிதர்களுக்கு ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருள் கிட்டும்;இந்த ஊரில் இறப்பவர்களுக்கு வலது காதில் தாரக மந்திரம் உபதேசித்து யமவாதனை இல்லாமல் செய்யக் கடவாய் என்று அருளினார்.

காசித்தீர்த்தத்தில் மூன்று நாள் நீராடிய பலன் காவேரி சங்குமுக தீர்த்தத்தில் ஒரு நாள் நீராடினாலே கிடைக்கும்;க்ஷேத்திரபாலபுரத்தில் ஸ்ரீகால பைரவரை பிரம்மா,இந்திரன்,சக்திகள்,நவக்கிரகங்கள் பூஜித்து பலன் பெற்றனர்.மஹாபாரதத்தில் அர்ஜீனனுக்கு பாசுபத அஸ்திரம் கிடைக்க,அர்ஜீனன் வெகுகாலமாக பைரவ உபாசனை செய்திருக்கிறார்.அதனால்,ஸ்ரீகாலபைரவப்பெருமான் நேரடியாக வந்து பாசுபத அஸ்திரம் பெறும் வழிமுறையை உபதேசித்தார்.

காலை 8 மணிக்குள் காவிரியில் இருக்கும் சங்குமுக தீர்த்தத்தில் நீராட வேண்டும்;பிறகு அதே நாளில் காலை 10.30க்குள் சூலதீர்த்தத்தில் நீராடிவிட்டு,11 மணியில் இருந்து 12 மணிக்குள் ஸ்ரீகாலபைரவரை வழிபட வேண்டும்.இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் வழிபட்டால் தீராத கர்மவினைகளும் தீரும்.பில்லி,ஏவல் முழுமையாக விலகும்.

க்ஷேத்திரபால புரம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை(மாயவரம்) செல்லும் வழியில் அமைந்திருக்கிறது.

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த பைரவப் பெருமானை வழிபட பைரவப் பெருமானின் தரிசனமும்,அருளும் கிட்டும்.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய ஜடாமண்டல பைரவர்!!!




திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அம்மநாதர்+ஆவுடையம்மன் கோவிலில் ஜடாமண்டல பைரவப் பெருமான் ஆட்சிபுரிந்து வருகிறார்.இவரது திருமுடி வட்டமாக(ஜடாமண்டலமாக) அமைந்திருக்கும்;நெற்றிப்பட்டம்,கண்டாபரணம்,ஏகருத்ராட்சம்,
ருத்ராட்சமாலை,நாக உதரபந்தம்,முப்புரிநூல்,கிங்கிணிமாலை ஆகிய அணிகலன்களுடன் இடுப்பின் கீழ் சுற்றி அமைந்த பாம்பும் விளங்குகிறது.
பின் கரங்களில் உடுக்கை,நாகம்,முன் கரங்களில் திரிசூலம்,கபால பாத்திரம் விளங்க விழித்த கோரப்பார்வையுடன் தெற்றிப்பற்களும்,நிர்வாணத் திருமேனியுடனும்,அழகுநிரம்பிய கலைஅம்சத்துடனும் காட்சியளித்துவருகிறார்.

தொடர்ந்து 12 உத்திரம் நட்சத்திரம் வரும் நாட்களில் இங்கே வந்து ஜடாமண்டல பைரவப் பெருமானை அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,அரகஜா,மரிக்கொழுந்து,பால் இவைகளுடன் அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகம் செய்யும் போது ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது பைரவ சஷ்டிக் கவசம் பாட வேண்டும்.

இதன்மூலமாக உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகல சம்பத்துக்களையும் ஜடாமண்டல பைரவப் பெருமானால் பெறுவார்கள்.