Sunday, October 29, 2017

பைரவ சஷ்டி கவசம்!!!





வணங்குவோர்க்கு வாழ்வு தரும்
வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
போற்றுவோர்க்கு புகழ் தரும்
தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்
நினைத்தாலே நிம்மதி தரும்
நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!


பக்தர் பரவசமுற பலன் தரும்
பைரவர் திருவடியே கதி


சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்
திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
அகிலம் போற்றும் அஷ்ட பைரவர்
அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்
சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்
சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்
சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்


வருக வருக வடுகபைரவா வருக
வளம்தர வருக வஜ்ரபைரவா வருக
வருக வருக உக்கிரபைரவா வருக
உவகைதர வருக உலகபைரவா வருக
பைரவி போற்றும் பைரவா வருக
ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக
ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக
ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக
காலத்தின் நாயகா கால பைரவா வருக
கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக
நலம் தரும் நரசிங்க பைரவா வருக
நாளும்காக்கும் நாக பைரவா வருக
கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக
ஞாலம் போற்றும் ஞானபைரவா வருக
தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக
மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக
அவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக
குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக
உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக
திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக
சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக
ருசியான  உணவுதரும் ருருபைரவா வருக
சந்தோஷம் தரும் சம்கார  பைரவா வருக
பித்தம் போக்கும் பீஷணபைரவா வருக
வருகவருக வரமருளும் வரதபைரவா வருக
தருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக
பருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக
பெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக
நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக
சதிராடும் சர்ப்ப பைரவா வருக
ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக
பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக


சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்
முப்புரமெரி செய் முக்கண்ணும்
முகவழகு கூட்டும் நாசியும்
சீற்றம் காட்டும் சிங்க பல்லும்
இடது செவியில் பொன்னாபரணமும்
இன்பமூட்டும் இள நகையும்
அழகிய தோளும் அற்புத அழகும்
மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்
எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்
இளமை காட்டும் வாலிபமும்
மணி ஓசை தரும் கிண்கிணியும்
கையிலே கபாலமும் சூலமும்
தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்


ஏற்றம் தரும் தோற்றமாய்
பத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்
பரவசம் தர வருகவே வருகவே
மெய் உணவு கேட்ட மெய்யடியாரே
உய்ய வழிகாட்டும் உத்தமரே
பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே
சேய் மகிழ விரைந்து வருவீரே
ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க
அன்னை பார்வதி மனம் நொந்திடவே
ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி
அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்
தலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்
தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்
கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே
பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே


கற்றவர் போற்றும் காசியாம்
பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்
எங்கும் திரிந்தான் பரமன்
காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே
மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே
ஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே
பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்
கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை
வீடு தேடியொரு வேளையிலே
பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே
ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்
தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே
எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்
அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்
அழிந்திடத் தான் வேண்டுமென்றே
பிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே
பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்
காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்
கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்
மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்


எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்
முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்
அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி
ஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே
இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்
இடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்
விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்
கபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு
கண்ணான கணவன் மயங்கிவிழவே
கதறி அழுதிட்டாள் மகாலட்சுமி
கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்


மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ
மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ
மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்
பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே
இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.
அந்தகாசுரனென்னும் புதல்வனும் அசுரனானான்
அகிலத்தையே ஆட்டி படைத்தான்
அன்னையுருவு கண்டு ஆசைப்பட்டான்
அவனை அழித்து அல்லல் அகற்றினார்
மணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்
இனியொரு விதி செய்தே மக்களை காக்க
கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே
மதிகெட்டவர்களை அழித்திட்டார்.


முண்டகன் என்றொரு கொடியவன்
கண்டபடி தந்தான் துன்பங்களை
அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்
பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே
எண்ணங்களிலே மாற்றம் தரும்
இதயத்திலே எழுச்சி தரும்
அடியவருக்கு அருள்புரியும்
பைரவ புராணத்தை பாடிடுவோம்
காலத்தின் நாயகன் கால பைரவனென்றே
ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே
விதியும் அவனே வெற்றியும் அவனே
வேதமும் அவனே வேதநாயகனும் அவனே
அட்டவீரட்ட தலங்கள் அற்புதத்தலங்கள்
ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்
அம்பலவாணன் பைரவரூபமான இடங்கள்


அகிலத்தோரை காத்திட தலங்கள்
தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்
ஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்
எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்
அத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே
எங்கும் பைரவர் எதிலும் பைரவர்
என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க
ஐந்து தலையரசே ஆகாசபைரவரே
அல்லல் நீங்கிட வருவீரே


தலைதனை தராபாலன பைரவர் காக்க
கேசந்தனை கேசர பைரவர் காக்க
நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க
கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க
செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க
நாசிதனை நர்த்தன பைரவர் காக்க
வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க
நாக்கினை நானாரூப பைரவர் காக்க
கழுத்தினை கராள பைரவர் காக்க
தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க
கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க
மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க
விலாவினை விருபாச பைரவர் காக்க
வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க
இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க
மறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க
தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க
முழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க
பாதமிரண்டும் பரம பைரவர் காக்க
விரல்களைத்தும் விஜய பைரவர் காக்க


இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி
சங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி
சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி
உயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி
உன்மத்தம் போக்குவாய் போற்றி
குருட்டை நீக்குவாய் போற்றி
கர்ப்பதோஷம் போக்குவாய் போற்றி
உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி
ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி
இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி
சளித்தொல்லை போக்குவாய் போற்றி
சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி
விஷபயம் போக்குவாய் போற்றி
பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி
விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி
பகைமையை அழிப்பாய் போற்றி
உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி
அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி
தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி
முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி
நல்லதொரு துணைதருவாய் போற்றி
துணையின் துன்பம் களைவாய் போற்றி
சந்தானபாக்கியம் தருவாய் போற்றி
புத்திரதோஷம் போக்குவாய் போற்றி
கடன் தொல்லை நீக்குவாய் போற்றி
களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி
என்றும் புகழ் தருவாய் போற்றி
ஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி
பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி
பில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி
கெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி
பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி


சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக
பாசமிகு பைரவமூர்த்தியே வருக
காலனைவிரட்டும் கால பைரவா வருக
ஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக
கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக
பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக
சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக
சந்ததிதரும் சந்தான பைரவா வருக
ஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக
சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக
வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக
நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக
சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக
தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக
விசாலமனம் தரும் விசாலாக்ஷ பைரவா வருக
ஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக
குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக
கல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக
மேன்மை தரும் மேகநாத பைரவா வருக
சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக
கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக
அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக
சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக
பூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக
தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக
காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக
லாபம் தரும் லோகபால பைரவா வருக
பூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக
ஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக
கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக
அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக
தட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக
வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக
அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக
பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக
குலம் காக்கும் குல பைரவா வருக
சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக
ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக
சிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக
சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக
கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக
குற்றம் களையும் குலபால பைரவா வருக
சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக
கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக
புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக
லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக
நிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக
சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக
கஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக
பிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக
மண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக
விருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக
சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக
கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக
பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக
எதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக
சோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக
பீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக
பூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக
ரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக
பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக
வினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக
நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக
சக்திக்கும்  பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவா வருக
அட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக
பைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக
பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக
ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக
முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக


பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்
பக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்
சண்முகசுந்தரம் பாடிய கவசம்
நவபைரவர் அருளும் நற்கவசம்
பைரவ சஷ்டி கவசம் இதனை
செப்பிடுவோர் ஜெகமாள்வர்


ஓதுவோர் ஓங்குபுகழ் பெறுவர்
கூறுவோர் கூற்றனை வெல்வர்
வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்
பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்
சொல்வோர் சொத்துக்களை பெறுவர்
கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்
சரணம் சரணம் பைரவா சரணம்
சரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்
சரணம் சரணம் திருவடி சரணம்

இயற்றியவர்:பண்ணாரிதாசன் என்ற சோம.சண்முகசுந்தரம்,சேலம்

Sunday, September 10, 2017

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!



ஓம் ஸ்ரீவாராதர சித்தர் குரு வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 13.9.2017 புதன் கிழமை அன்று வர இருக்கின்றது;


ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை துதிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

புதன் கிழமை குளிகை காலம் காலை 10.30 முதல் 12 வரை இருக்கின்றது;

புதன் கிழமை இராகு காலம் மதியம் 12 முதல் 1.30 வரை  இருக்கின்றது;


இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,ரிஷபம் ,சிம்மம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)
7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
8. சிதம்பரம்
9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)
18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை
34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)
35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;
இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அடுத்த தேய்பிறை அஷ்டமி:

புரட்டாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி12.10.2017 வியாழக்கிழமை காலை 10.25 முதல் 13.10.2017 வெள்ளிக்கிழமை காலை 8.04 வரை அமைந்திருக்கின்றது;


இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;

Saturday, September 9, 2017

மந்திரங்கள் எப்படி இயங்குகின்றன?



நாம் வாழ்ந்து வரும் மனித உலகத்திற்கும்,நம்மைச் சுற்றிலும் இருக்கும் சில சூட்சும உலகங்கள் மற்றும் நமது பூமிக்கு மேலே இருக்கும் ஏழு தெய்வீக உலகங்கள்,கீழே இயங்கும் ஏழு கர்ம உலகங்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்த உதவுபவையே மந்திரங்கள்!


சித்தர்களும்,தெய்வீக புருஷர்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக தவம் இருந்து இறைசக்தியிடம் இருந்து வரங்களாகப் பெற்றவையே இந்த மந்திரங்கள் ஆகும்;பூமியில் மனிதர்கள் மத்தியில் 7,00,00,000 கோடி மந்திரங்கள் புழக்கத்தில் இருக்கின்றன;


இவைகளில் எச்சில் படாத மந்திரங்கள்,காயத்ரி மந்திரங்கள்,பீஜாட்சர மந்திரங்கள்,அஷ்டகர்ம மந்திரங்கள்,வழிபாட்டு மந்திரங்கள் என்று பலவகைகள் உள்ளன;


தவிர தரையில் ஜபிக்கக் கூடியவை;கடலில் ஜபிக்கக் கூடியவை;காட்டுக்குள் ஜபிக்கக் கூடியவை;குகைக்குள் ஜபிக்கக் கூடியவை;பூமிக்கு அடியில் ஜபிக்கக் கூடியவை;விண்ணில் பறந்துகொண்டே ஜபிக்கக் கூடியவை;என்று பலவிதங்களும் உண்டு;


மேலும் ஆண் மட்டுமே ஜபிக்கக் கூடியவை;பெண் மட்டுமே ஜபிக்கத் தக்கவை;அலி மட்டும் ஜபிக்க வேண்டியவை;துறவி மட்டும் ஜபிக்கக் கூடியவை;இல்லறத்தார் ஜபிக்கக் கூடியவை என்றும் வகைப்படுத்தப்படுள்ளன;


மனதைத் திடப்படுத்துபவை அனைத்துமே மந்திரங்கள் எனப்படும்;


வித்மஹே என்ற வார்த்தையில் முதல் வரியும்,தீமஹி என்ற வார்த்தையில் இரண்டாவது வரியும்,ப்ரசோதயாத் என்ற வார்த்தையில் மூன்றாவது வரியும் நிறைவடைந்தால் அது காயத்ரி மந்திரம் எனப்படும்;ஒவ்வொரு இறைசக்திக்கும் காயத்ரி மந்திரம் உண்டு;தகுந்த ஆன்மீகத் தகுதி வராமல் இவைகளை ஜபித்தால் உடல் நலம்,மன நலம் பாதிக்கக் கூடும்;


ஒரே ஒரு எழுத்து மட்டுமே மந்திரமாக இருக்குமானால் அது பீஜாட்சர மந்திரம் எனப்படும்;இவைகள் உரிய தெய்வீக சக்தியின் ஆத்மாவுக்குச் சமமானவை;


அஷ்ட கர்ம மந்திரங்கள் என்றும் இருக்கின்றன;இவையே மாந்திரீகத்திற்கு அடிப்படை ஆகும்;இதில் எட்டு விதமான செயல்களைச் செய்யலாம்;அல்லது எட்டுவிதமான செயல்களை தடுத்து நிறுத்தலாம்;ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் புண்ணியத்திற்கு ஏற்ப இந்த அஷ்ட கர்ம மந்திரங்களை ஜபிக்கும் முறை நம்மை வந்து சேரும்;இவைகளைக் கொண்டு தனிமனித நலனுக்கு செய்வதால் சாபமும் கிடைக்கும்;

மனிதர்களின் செயல்களை எட்டுவிதமான வகைகளுக்குள் அடக்கிவிடலாம்;அந்த எட்டுவிதமான மந்திரங்களைக் கொண்டே பூமியில் மாந்திரீகம் ஒரு தொழிலாகவே பரவியிருக்கிறது;மாந்திரீகத்தை ஒரு தொழிலாகவே செய்வது தமிழ்நாடு,கேரளாவில் மட்டுமல்ல;பாரதத்தின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது;இதில் முழுமையாக அறிந்தவர் என்று எவரும் இல்லை;


இல்லறவாசிகள் தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 முறை ஜபிப்பதை வழக்கமாக வைத்திருப்பது அவசியம்;அதுவும் ஏதாவது ஒரு இறைவனது பெயரை ஜபித்து வந்தாலே போதும்;தமிழ்நாடு முழுவதும் தினமும் 108 முறை அல்லது 1008 முறை ராமஜெயம் எழுதுபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்;ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராம என தினமும் 108 முறை ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;அதேபோல,தினமும் 108 முறை ஒம் நமச்சிவாய நமஹ என்று ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;சிலர் சிவாய நமஹ என்றும்,சில நமச்சிவாய என்றும்,சிலர் சிவாய சிவ என்றும்,சிலர் சிவசிவ என்றும்,சிலர் சிவயசிவ என்றும் ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;


எப்படி ஒரு மந்திரத்தை ஜபிப்பது?


ஒரு மஞ்சள் துண்டு வாங்கிக் கொள்ள வேண்டும்;அதிகாலையில்(4.30 முதல் 6 க்குள்)காலைக் கடமைகளை நிறைவு செய்துவிட்டு உங்களுக்கு விருப்பமான மந்திரத்தை இந்த மஞ்சள் துண்டு மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பத்மாசனத்தில் தயாராக வேண்டும்;அப்படி அமரும்முன்பு, வாசமான பத்தியை பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;(இதில் ஏதாவது ஒன்று செய்தாலும் போதுமானது)

அன்னை மஹாவராகியை தினமும் ஜபிக்க விரும்புவோர் பச்சை துண்டு வாங்கி அதில் அமர்ந்து ஜபிக்க வேண்டும்;

பிறகு ஒம் கணபதி நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;பிறகு ஒம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒரு முறை ஜபிக்க வேண்டும்;(குல தெய்வம் தெரியாதவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ளலாம்) பிறகு உங்களது விருப்பமான சிவ மந்திரம் அல்லது விஷ்ணு மந்திரத்தை 108 முறை உதடு அசையாமல் மனதுக்குள் ஜபிக்கலாம்;


இப்படி ஒரு ஆண்டுக்குக் குறையாமல் ஜபித்து வந்தால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வரும்;அப்படி உயிர் வந்தப் பின்னர் அந்த மந்திரம் உங்களை பாதுகாக்கும்;வழிநடத்தும்;


நீண்டகாலமாக பிரச்சினைகளுடன் இருப்பவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே அவைகளைத் தீர்க்கமுடியும்;கடந்த காலங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே தங்களது பிரச்சினைகள் தீர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்;


எப்படி இந்த மந்திர ஜபம் நம் சிக்கல்களைத் தீர்க்கும்?


ஒரு நாளுக்கு 108 முறை வீதம் குறைந்தது ஒராண்டு வரை மந்திர ஜபம் செய்து வருவதால்,உங்களது மந்திர ஜபம் நெய்தீபத்தின் சுடர் மூலமாக ஆவியாகவோ அல்லது பத்திப் புகை மூலமாகவே விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்தைச் சென்றடைகிறது;விண்வெளியில் நமது விதி ஒரு ஏடாகவே இருக்கிறது;அந்த ஏட்டை நமது மந்திர ஜபம் சென்றடைகிறது;பிறகு,அந்த ஏட்டிற்கும் மேலே குறிப்பிட்ட உயரத்தில் ஆகாய ஏடு என்ற ஒன்று இருக்கிறது;அந்த ஆகாய ஏட்டைச் சென்றடைகிறது உங்களின் மந்திர ஜபம்;அங்கே சென்றடைந்ததும் உங்களின் கர்மவினையை உங்களது மந்திரஜபமானது அழித்துவிடுகிறது;அப்படி அழிப்பதற்கு உங்கள் ஜனன ஜாதகத்தில் பூர்வபுண்ணியமும் துணைபுரிகிறது;கடந்த சில ஆண்டுகளாக ஈசனின் அருளால் கண்டறிந்த தெய்வீக உண்மை இது;


ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் உங்களின் கர்மவினைகள் கரையவும் ஒரு சுலபமான மந்திரஜபம் இருக்கிறது;


அமாவாசையன்று மேலே கூறியவிதத்தில் மந்திர ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்;ஒரு மாதம் வரை;அதாவது இரண்டாவது அமாவாசை வரை 10 நிமிடம் வரை மட்டுமே மந்திர ஜபம் செய்ய வேண்டும்;

இரண்டாவது அமாவாசை முதல் அந்த மந்திர ஜபத்தை 20 நிமிடமாக அதிகரித்து மூன்றாவது அமாவாசை வரை தினமும் 20 நிமிடம் ஜபிக்க வேண்டும்;

மூன்றாவது அமாவாசை முதல் தினமும் 40 நிமிடம் மந்திரத்தை ஜபித்து வரை வேண்டும்;நான்காவது அமாவாசை வரை இப்படிச் செய்ய வேண்டும்;நான்காவது அமாவாசை முதல் உங்கள் சிக்கல்கள் தீரும் வரை தினமும் 80 நிமிடம் மந்திரம் ஜபிக்கக் கூடாது;60 நிமிடம் வரை தினமும் மந்திரம் ஜபித்தால் போதுமானது;


ஏனெனில்,நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் ஒரு மனிதனது ஒரு நாள் மந்திர ஜபமானது 60 நிமிடம் வரை ஜபித்தாலே போதும்;அதற்கு மேல் ஜபித்தால் அந்த மந்திரஜப ஆற்றலைத் தாங்க முடியாது;தலைவலியோ அல்லது வேறு ஏதாவது உடல் நலக் குறைவோ உருவாகலாம்;(அரிதிலும் அரிதான சிலருக்கு இது ஏற்படாது;அவர்கள் ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம்)


சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்வியல் சிக்கல்கள் இருக்கும்;அதற்கும் ஒரே ஒரு மந்திரத்தை ஜபித்தாலே போதுமானது;


மந்திரம் ஜபிக்க ஆரம்பிப்பவர்கள் கண்டிப்பாக 18 வயதைக் கடந்தவர்களாக இருக்க வேண்டும்;

கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக(உங்கள் பிரச்சினைகள்/வாழ்வியல் சிக்கல்கள் தீரும் வரை) நிறுத்தியிருக்க வேண்டும்;

இப்படி இதற்காக மந்திரம் ஜபிக்கிறேன் என்று எவரிடம் தெரிவிக்கக்கூடாது;புரோட்டா,முட்டை இரண்டுமே அசைவம் தான்;ஒரு போதும் சைவம் அல்ல;சைவப் புரோட்டாவும் அசைவமே! மது அருந்துவதையும்,போதைப் பொருட்களையும் தவிர்த்தால் மட்டுமே மந்திரஜபம் கைகூடும்;


மந்திர ஜபம் செய்து வரும் நாட்களில் துக்கத்தில் கலந்து கொண்டால் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;


ருதுவான வீடுகளுக்குச் சென்று ருது விஷேசத்தில் கலந்து கொண்டாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;


குழந்தை பிறப்பை போய் பார்த்தாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;


உக்கிரமான தெய்வ மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது இல்லறவாசிகளுக்கு நல்லது;உதாரணமாக காளி,ஆஞ்சநேயர் மந்திரங்களையும்,நரசிம்மர்,லட்சுமி நரசிம்மர் மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது மிகவும் நன்று;மிகவும் கடினமான கட்டுப்பாடுகள் இந்த கடவுள்களின் மந்திர ஜபத்தை ஜபிப்பவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது;அது நடைமுறையில் சிறிதும் சாத்தியமில்லை;

ஏழரைச்சனி(துலாம்,விருச்சிகம்,தனுசு),அஷ்டமச்சனி(மேஷம்),
கண்டச்சனி(ரிஷபம்);அர்த்தாஷ்டமச்சனி(சிம்மம்) இருப்பவர்கள் (அசைவத்தைத் தவிர்த்துவிட்டு)ஒம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;


மற்றவர்கள் சிவ மந்திரத்தை ஜபிக்கலாம்;


இந்த பதிவு ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே! தமிழ்நாடு சித்தர் பூமி! பல புண்ணிய ஆத்மாக்கள் முற்பிறப்புகளில் செய்த புண்ணியச் செயல்களால் தமிழர்களாகப் பிறந்துள்ளனர்;

அப்படிப் பிறந்துள்ளவர்களுக்கு மிகச் சுலபமாக சித்தர் தரிசனமும்,மிகவும் சக்தி வாய்ந்த மந்திர உபதேசமும் கிடைத்து வருகிறது;அப்படி கிடைத்தவர்கள்,கிடைக்க இருப்பவர்களில் பலர் வலைப்பூ/முகனூல் பக்கம் வழியாக ஆன்மீகத்தைப் பரப்புகிறார்கள்;அவர்களுக்கு இந்த பதிவு கத்துக்குட்டியாகவே தோன்றும்;


இந்த மந்திர ஜபமானது பக்தி மார்க்கமே! தைரியமாக 18 வயது நிரம்பிய எவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருப்பதை பின்பற்றலாம்;


இப்படிக்கு உங்கள் கை.வீரமுனி. . .




Friday, September 8, 2017

அன்னை மஹாவராகி ஜபத்தின் பலன்கள்!!!



உலகத்தில் இருக்கும் பழமையான வழிபாட்டுமுறை சைவ வழிபாடு;அதைவிடவும் மிகவும் பழமையான ஸ்ரீவித்யா உபாசனை ஆகும்;

இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை நீங்கள் உணர்வீர்களா?


நாம் வாழ்ந்து வரும் பூமியானது சூரியனைச் சுற்றிவருகின்றது;சூரியன் இருப்பது மில்கி வே என்ற பால்வழித்திரள் என்ற காலக்ஸியில்! இந்த பால்வழித் திரளின் விட்டம் 1,00,000 ஓளியாண்டுகள்;


அதென்ன்ன ஒளியாண்டு?

ஒளியின் வேகம் விநாடிக்கு 3,00,000 கி.மீட்டர்கள்;
இப்படி ஒரு வருடத்தில் ஒளியானது கடக்கும் தூரம் 9,00,000 கோடி கி.மீட்டர்கள் ஆகும்;


இப்படி ஒரு லட்சம் ஆண்டுகள் பயணித்தால்,பால்வழித்திரளின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குச் சென்றுவிடலாம்;


ஒரு ராக்கெட்டில் விநாடிக்கு 3,00,000 கி.மீ.வேகத்தில் பயணித்தால்,நாம் வாழ்ந்து வரும் மில்கிவே காலக்ஸியின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு பயணிக்க ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்;


இது போல,பல கோடி காலக்ஸிகள் இருக்கின்றன;இந்த காலக்ஸிகள் (தமிழில் அண்டம் என்றும் சொல்லலாம்) அனைத்தும் சேர்ந்தே பிரபஞ்சமாக இருக்கின்றது;இந்த பிரபஞ்சத்தை விடவும் மிகப் பெரியது ஸ்ரீசக்கரம் ஆகும்;


இந்த ஸ்ரீசக்கரத்தில் 43 கோடி தெய்வீக பெண் சக்திகள் ஆட்சி புரிகின்றன;இந்த 43 கோடி பெண் தெய்வீக சக்திகளுக்கும் தலைமை தான் ஸ்ரீராஜாராஜேஸ்வரி என்ற திரிபுரிசுந்தரி என்ற வாலை என்ற மனோன்மணி!


இந்த ஸ்ரீராஜராஜேஸ்வரியை சித்தர்களால் மட்டுமே வழிபட முடியும்;இந்த அன்னையை வழிபட முறையான வழிமுறைகளும் இருக்கின்றன;அதற்குப் பெயர்தான் ஸ்ரீவித்யா உபாசனை!


முதலில் அஷ்டகணபதியின் அருளைப் பெற வேண்டும்;இதை யார் வேண்டுமானாலும் பெறலாம்;அதிக பட்சமாக 3 ஆண்டுகள் முயற்சி செய்தால் அஷ்டகணபதியின் அருள் கிட்டிவிடும்;


அதன் பிறகு,ராஜாமாதங்கியின் அருளைப் பெற வேண்டும்;இந்த அன்னையின் அருளைப் பெற குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் ஆகும்;அதிக பட்சம் 6 ஆண்டுகள் வரை ஆகலாம்;


அதன் பிறகு,மஹாவராகியின் அருளைப் பெற வேண்டும்;இந்த அன்னையின் அருளைப் பெற குறைந்த பட்சம் 3 ஆண்டுகளும்,அதிக பட்சம் 12 பிறவிகளும் ஆகும்;

நிறைவாக,அன்னை மனோன்மணியின் அருளைப் பெற முயற்சிக்க வேண்டும்;இதற்கு எத்தனை பிறவிகள் ஆகும் என்பதை எவராலும் கூற இயலாது;


ஸ்ரீராஜராஜேஸ்வரியின் படைகளுக்குரிய தலைமைத் தளபதியாகத் திகழுபவளே அன்னை மஹாவராகி ஆவாள்;


முந்தைய யுகங்களான கிருதயுகம்,திரோதாயுகம்,துவாபரயுகம் என்று மூன்று யுகங்களில் அன்னை மஹாவராகியை உபாசனை செய்தவர்கள் ஏராளமானவர்கள் இப்போது பிறவி எடுத்து வாழ்ந்துவருகின்றார்கள்;அவர்களுக்காகவே அன்னை மஹாவராகியின் வழிபாட்டை பரப்புகின்றோம்;


மற்ற யுகங்களில் ப்ரம்மச்சாரிய விரதம் ஒரு பிறவி முழுவதும் இருந்து அன்னை மஹாவராகியை உபாசனை செய்து கொண்டே இருக்க வேண்டும்;கரணம் தப்பினால் மரணம்  என்பது முந்தைய யுகங்களில்!


ஆனால்,இப்போதைய கலியுகத்தில் அப்படி இல்லை;இல்லறத்தில் இருந்தவாறே அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை தினமும் ஜபித்துக் கொண்டே இருந்தால் போதுமானது;அன்னை மஹாவராகியின் கருணையும்,அருளும் கிட்டிவிடும்;அப்படி பலருக்கு கிட்டி இருக்கின்றது;


ஓம் ரீங் வாத்தியார் ஐயா
வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைகள் தான் அன்னை மஹாவராகியின் அருளைப் பெற்றுத்தரும் 12 பெயர்கள்;ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஜபித்து வந்தமையால் கிட்டிய அருள் நன்மைகளை அன்னை மஹாவராகியின் ஆசிகளோடு இங்கே உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;


இந்த 12 பெயர்களையும் தினமும் இரவில் மட்டுமே ஜபிக்க வேண்டும்;அதிகாலையிலும் ஜபிக்கலாம்;அசைவம்,மது கண்டிப்பாக தவிர்த்தால் மட்டுமே ஜபத்திற்கான பலன் கிட்டும்;

22 வயதில் அவருக்கு திருமணம் ஆனது;அவர் அரசாங்கத்தில் பணிபுரிகின்றார் என்பதாலேயே அவருக்கு பெண் கொடுக்க பலர் முன்வந்தார்கள்;இப்போது அவருக்கு வயது 51 ஆகின்றது;இவருக்கு  இரண்டு  சகோதரிகள்;மூவருக்கும் இவருக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது;இவர் வாங்கும் சம்பளத்தை இவர் வீட்டில் தந்ததே கிடையாது;இவரது மனைவி தமது பெற்றோர்கள் தந்த பணத்தில் தான் இத்தனை ஆண்டுகளாக வாழ்க்கையை நடத்தியிருக்கின்றார்;காரணம்,இவரை இவரது இரு சகோதரிகளும் வசியம் செய்து வைத்துள்ளார்கள்;இவரது சம்பளம்,மேல் வருமானம் அனைத்தையும் “பங்கு” போட்டுள்ளார்கள்;

கடந்த ஒரு வருடமாக இவரது மனைவி அருகில் இருக்கும் பழமையான ஆலயத்தில் இரவு 7 முதல் 8 மணி வரை மேலே கூறப்பட்டிருக்கும் 12 பெயர்களை தொடர்ந்து ஜபித்து வந்திருக்கின்றார்;அது பழமையான ஆலயமாக இருந்ததால்,இவர் ஜபிக்க ஆரம்பித்த 6 வது மாதத்தில் இருந்து,இவர் கணவருக்கு அவரது சகோதரிகள் எப்படி வசியம் செய்து வைத்தார்கள்? அதை இத்தனை ஆண்டுகளாக எப்படி மெயின்டெய்ன் செய்தார்கள்? என்ற உண்மை தெரியவந்தது;
விடாப்பிடியாக இவரது மனைவி அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை ஜபித்து வந்தமையால் இவர் சகோதரிகளின் வசியம் செயலிழந்துவிட்டது;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


அந்த பள்ளி மாணவிக்கு வயது 14;பள்ளிக்குச் சென்றால் போராட்டம்;வீட்டு வந்தால் போராட்டம்;தோழிகளோடு பழகினால் போராட்டம்;தினமும் அதிகாலையில் 30 நிமிடம் மற்றும் இரவில் 30 நிமிடம் என்று ஜபித்து வந்தமையால் ஒராண்டுக்குப் பிறகு,வீட்டில் நிம்மதி;பள்ளித் தோழிகளால் நிம்மதி;படிப்பில் முழுக்கவனம் செலுத்துமளவுக்கு நிம்மதி;இவரது அப்பாவுக்கு குடிப்பழக்கம் அடியோடு நின்றுவிட்டது;அதுதான் இந்த குடும்பத்திற்கு ஆச்சரியம்;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


அவருக்கு அவரது குலதெய்வம் கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் குலதெய்வம் இவருக்குள் புகுந்து அங்கே வந்திருப்பவர்களுக்கு அருள் வாக்கு சொல்லும்;

இவருக்கு திருமணம் ஆனதில் இருந்து இன்று வரையிலும் இப்படி இருந்துள்ளது;கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு,இவரது பங்காளிகளே இவருக்குள் குலதெய்வம் வந்தாலும் பேசவிடாமல் தடுத்துள்ளார்கள்;

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை ஜபிக்க ஆரம்பித்துள்ளார்;ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 14 மாதங்கள் தினமும் ஜபித்து வந்தமையால் மீண்டும் குலதெய்வம் பேச ஆரம்பித்துள்ளது;பேச ஆரம்பித்ததுமே,யார் கட்டியது? எதற்காக கட்டினார்கள்? என்ற விபரங்களைத் தான் தெரிவித்திருக்கின்றது;

தன்னிடம் மட்டும் குலதெய்வம் பேசுவதில்லை;இவரிடம் பேசுவதால் இவருக்குத்தான் புகழ் இருக்கின்றது என்ற பொறாமையே காரணம்;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


இது போல நூற்றுக்கணக்கான ஆச்சரியங்களை அன்னை மஹாவராகியின் அருளால் நிகழ்ந்துள்ளது;அன்னை மஹாவராகியின் அனுமதித்துள்ள சம்பவங்களை மட்டுமே இங்கே தெரிவித்திருக்கின்றோம்;