Monday, July 6, 2015

கழற்சிங்க நாயனார்



பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவர் மணிகண்டப் பெருமானின் பேரருளால் அறநெறி குன்றாது அரசோச்சி வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களை வென்று வாகை சூடி பொன்னும் பொருளும் பெற்றார். இவ்வாறு பெற்ற பெரு நவநிதிகளை ஆலய வழிபாட்டிற்கும், அடியார்கள் வழிபாட்டிற்கும் பயன்படுத்தினார். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைச் சந்திக்க எண்ணினார். தமது பிராட்டியாருடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டார். திருவாரூரை அடைந்த நாயனார் பிறைமுடிப் பெருமான் குடிகொண்டிருக்கும் பூங்கோயிலை அடைந்தார். புற்றிடங்கொண்ட நாயகரின் திருமுன் வீழ்ந்து வணங்கி எழுந்தார். பூங்கோயில் புண்ணியரின் அருள்வடிவத்திலே மெய்மறந்து கண்ணிலே நீர்மல்க உள்ளத்திலே அன்பு பொங்கப் பக்தியிலே மூழ்கி வழிபட்டுக் கொண்டிருந்தார் வேந்தர். திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருந்த பட்டத்து நாயகி அழகிய எழில்மிகும் மண்டபங்களைக் கண்டு அதிசயித்தாள். அரசியார், மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தாள். அங்கு தொண்டர்கள் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தனர். எண்ணத்தைக் கவரும் வண்ண மலர்களைக் கண்டதும் அரசியார்க்கு ஆனந்தம் மேலிட்டது. நறுமலர் வாசனையில் சற்று நிலை மறந்தாள். தன்னையறியாதவாறு தரையில் கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்து பார்த்தாள். அங்கு கூடியிருந்த தொண்டருள் செருத்துணை நாயனார் என்பவரும் ஒருவர். இவர் அடியார்களுக்கு யாராகிலும், அறிந்தோ, அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார்.

அரசியாரின் செயலைக் கவனித்த செருத்துணை நாயனார் சினம் கொண்டார். அரசியாயிற்றே என்று கூடப் பார்க்கவில்லை; அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை நுகர்ந்து பார்த்துப் பிழை புரிந்த அரசியாரின் மூக்கை வாளால் சீவிவிட்டார் நாயனார்! பூமகள் போன்ற பட்டத்தரசி மயக்கமுற்று மண் மீது வீழ்ந்தாள். பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மன்னர்க்கு இச்செய்தி எட்டியது. மன்னர் அவ்விடத்திற்கு விரைந்த வந்தார். நிலத்தில் துடித்து துவண்டு கிடக்கும் அரசியாரின் பரிதாப நிலையைக் கண்டார். பதை பதைத்துப் போனார். அஞ்சாமல் இக்கொடிய செயலை செய்தது யார்? என்று கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டார். அம்மொழி கேட்டு, மன்னவா! இச்செயலை செய்தது நான்தான் என்று துணிந்து சொன்னார் நாயனார். சைவத் திருக்கோலத்திலே நின்றிருந்த செருத்துணை யாரைக் கண்டதும் மன்னரின் மனம் அடியார் சினத்துடன் இச்செயல் செய்ததற்கு எமது தேவியார் செய்த பிழைதான் யாதோ? என்பதை அறியத் துடித்தது. மன்னரின் முகத்தில் எழுந்த கேள்விக் குறியின் சாயலைப் புரிந்துகொண்ட செருத்துணையார், அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை மோந்து பார்த்தார் என்றார். அவர் மொழிந்தது கேட்டு மன்னர் மனம் கலங்கினார். அரசர், கரங்கூப்பி வணங்கி, ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை என்று கூறியவாறே உடைவாளை எடுத்தார். மலரை எடுத்த கையை அல்லவா முதலில் தாங்கள் துண்டித்திருக்க வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் சட்டென்று அரசியாரின் மலர்க்கையை வெட்டினார். அரசரின் உயர்ந்த பக்தி நிலை கண்டு செருத்துணை நாயனார், மன்னர்க்குத் தலைவணங்கினார். அப்பொழுது புற்றிடங்கொண்ட பெருமான் மன்னர்க்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, சக்திதேவியோடு ரிஷபத்தில் எழுந்தருளினார். பட்டத்தரிசியாருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் கண்டு அடியார்கள், மன்னரைப் போற்றிப் பணிந்தனர். மன்னரின் புகழ் திக்கெட்டும் பரவியது. மன்னர் கழற்சிங்க நாயனார் பூவுலகில் பல்லாண்டு வாழ்ந்து அறநெறி பிறழாமல் அரசாட்சி புரிந்தார். முடிவில் எம்பெருமான் திருவருளாலே சிவலோகம் அடைந்து இன்புற்றார்.

குருபூஜை: கழற்சிங்கர் நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

திருநீற்றின் பெருமை


பதிணென் புராணங்களில் முக்கியமானது, `சிவ மஹா புராணம்' அதில் கூறப்படும் திருநீற்றின் பெருமைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.
தனக்கு மிகவும் பிடித்த திருநீற்றை உடலெங்கும் பூசியுள்ளார் சிவபெருமான். விபூதியை அணிபவர்கள் பிரயாகை, புஷ்கரம், உருத்திரவாகம், துவாரகை, ஹரித்வாரம், பிரபாசம் முதலிய திருத்தலங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன்களைவிட சிறப்பான பலன்களை அடைவார்கள்.
பிரம்மன் திருநீறு அணிந்தே உலகை சிருஷ்டிக்கிறார். திருமால் விபூதி தரித்தே சிவபெருமானை வணங்குகிறார். `நீற்றினை நிறையப்பூசி நித்தலாயிரம் பூக்கொண்டு' என்று திருவீழிமிழலை பதிகத்தில் அப்பர் பெருமான் பாடி அருளியுள்ளார்.
திருநீற்றினை தொடர்ந்து அணிந்து வந்தால் சித்திகள் வசமாகும். திருநீறு அணிந்தவர்கள், பிசாசுகள், இராட்சதர்கள், யக்ஷர்கள், கிரஹங்கள் முதலியோர்களுக்கு அஞ்சத் தேவையில்லை. திருநீறு தினமும் பூசிவந்தால் கயிலையில் வசிப்பர். அதாவது `சாரூப்யம்' என்னும் முக்தியைப் பெறுவர்.
பிரமன் விபூதியை தராசின் ஒரு தட்டிலும், சுவர்க்கம் முதலான உலகங்களை மறுதட்டிலும் வைத்து எடை போட்டு, அனைத்திலும் விபூதியே சிறந்தது என அறிந்தார். அசுத்தமாக இருந்தாலும், நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தாலும், வெறி பிடித்திருந்தாலும் விபூதி அணிந்தால் குணமடைவார்கள்.
சிவபெருமானுக்கு உமாதேவியை விடவும்-சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்று கண்களை விடவும் திருநீறு மேல் அதிக நேசம் உண்டு. அதனைப் பூசுவாரை அவர் பெரிதும் நேசிப்பார் என்று பொருள்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. -- திருமந்திரம், பத்தாம் திருமுறை.
திருஞானசம்பந்தரின் மந்திரமாவது நீறு திருநீற்றுபதிகம் திருநீற்றின் பெருமை உரைக்கிறது.
திருநீற்றை ஒற்றை விரலால் பூசாமல், மூன்று விரல் கொண்டு நெற்றி முழுவதும் குளிர பூசி அகமகிழ்வோம்.
. திருச்சிற்றம்பலம்.

ஒரே சமயம் சைவமே

உலகம் தோன்றிய அன்றே உருவான நம் தமிழரின் சமயமே சைவம்.இந்து என்பது 6மதக்கூட்டமைப்பே.சைவத்தை மதம் என்ற போர்வையில் மறைக்க முடியாது.உலகில் இதுவரை தோன்றிய இனிமேலும் தோன்றக்கூடிய அத்துனை மத வழிபாடும் சைவ சமய சைவநீதி யின் வழித்தோன்றலே.சைவநீதி தழுவாமல் எந்தவித மதமும் உலகில் இல்லை.உலகின் மூலாதாரமே சைவ சமயமே.தமிழன்,சைவன் என்பதே மணிமகுடம் சூட்டும் வார்த்தை                                                                                                                                                                                                      

         நமக்கு.ஆதி மொழி தமிழ்,ஆதி சமயம் ஒரே சமயம் சைவமே.

அமர்நீதி நாயனார்

பழையாறை என்னும் பழம்பெரும் பதியில் - வணிக குல மரபில் அமர்நீதியார் என்னும் சிவ அன்பர் தோன்றினார். வணிககுல மரபிற்கு ஏற்ப வியாபாரத்தில் வல்லமையுள்ளவராய், மேம்பட்டு விளங்கிய அவரிடமிருந்த பொன்னும், மணியும், முத்தும், வைரமும், துகிலும், அவரது செல்வச் சிறப்பையும், வெளிநாட்டினரோடு அவருக்கிருந்த வர்த்தகத் தொடர்பையும் உலகோர்க்கு எடுத்துக் காட்டின. இத்தகைய செல்வச் சிறப்பு பெற்ற அமர்நீதியார், சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்வதையே, இலட்சியமாகக் கொண்டிருந்தார். அவர் தமது இல்லத்திற்கு வரும் அடியார்களுக்கு அமுது அளித்து, ஆடையும், அரைத் துண்டும், கோவணமும் அளித்து அளவிலா ஆனந்தம் பெற்றார். பழையாறைக்குப் பக்கத்திலே உள்ள சிவத்தலம் திருநல்லூர். இவ்விடத்தில் ஆண்டுதோறும் அங்கு எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானுக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கு வெளியூர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டு வருவர். அமர்நீதியாரும் அவ்விழாவிற்குத் தம் குடும்பத்துடன் சென்று இறைவனை வழிபடுவார். அவ்வூரில் அடியார்களுக்கு என்றே திருமடம் ஒன்றை கட்டினார். ஒரு சமயம் அவ்வூர் திருவிழாக் காலத்தில், அமர்நீதியார் தமது குடும்பத்தாரோடு மடத்தில் தங்கியிருந்தார். சிவனடியார்களுக்கு நல்ல பணிகள் புரியும் அமர்நீதியாரின் உயர்ந்த பண்பினை - பக்திப் பெருக்கினை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான்.

அந்தண பிரம்மச்சாரி போன்ற திருவுருவம் பூண்டு, அவர் தங்கியிருந்த மடத்திற்கு எழுந்தருளினார். அமர்நீதியார் அடியாரைப் பார்த்ததும் மகிழ்ச்சயோடு வரவேற்று தேவரீர் இம்மடத்திற்கு இப்போதுதான் முதல் தடவையாக வருகிறீர் என்று கருதுகிறேன். அடியார் இங்கே எழுந்தருளுவதற்கு யான் செய்த தவம்தான் என்னவோ ! என முகமன் கூறி வரவேற்றார். அவர் மொழிந்ததைக் கேட்டு எம்பெருமான், அடியார்களுக்கு அமுதளிப்பதோடு, கந்தை, கீவ், அழகிய வெண்மையான கோவணம் முதலியனவும் தருகின்றீர் என்று கேள்வியுற்றுத்தான் உம்மைப் பார்த்துவிட்டுப் போக வந்தேன் என்று பதிலுரைத்தார். அம்மையப்பரின் அருள் வாக்கு கேட்டு மகிழ்ந்த அமர்நீதியார் உள்ளங்குளிர, மடத்தில் அநதணர்களுக்காக வேதியர்களால் தனியாக அமுது செய்கின்றோம். அதனால் ஐயன் தயவு கூர்ந்து திருவமுது செய்து அருள வேண்டும் என்று பக்திப் பரவசத்தோடு வேண்டினார். நன்று நன்று, உமது விருப்பத்தை யாம் உளமாற ஏற்கின்றோம். முதலில் யாம் காவிரியில் நீராடச் செல்ல இருக்கின்றோம். அதற்கு முன் ஒரு சிறு நிபந்தனை. என்ன சுவாமி ! ஒன்றும் இல்லை. வானம் மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் ஒருக்கால் மழை வந்தாலும் வரலாம். இக்கோவணம் இரண்டும் நனைந்து போக நேரிடும். அதனால் ஒன்றை மட்டும் கொடுத்து விட்டுப் போகிறேன்.

பாதுகாப்பாக வைத்திருந்து தரவேண்டும். இந்தக் கோவணத்தைச் சர்வ சாதாரணமாக எண்ணி விடாதீர். இதன் பெருமையைப் பற்றி அப்படி, இப்படி என்று எடுத்து இயம்புவது அரிது. இவ்வாறு சொன்ன பெருமான், தண்டத்தில் இருந்த கோவணங்களில் ஒன்றை அவிழ்த்து, அமர்நீதியாரிடம் கொடுத்துவிட்டு, நீராடி வரக் காவிரிக்குப் புறப்பட்டார். வேதியர் மொழிந்ததை மனதில் கொண்ட அமர்நீதியார் அக்கோவணத்தை மற்ற கோவணங்களோடு சேர்த்து வைக்காமல் தனிப்பட்ட இடத்தில் தக்க பாதுகாப்பாக வைத்தார். அடியார்களைச் சோதிப்பதையே தமது திருவிளையாட்டாகக் கொண்ட பெருமான், திருநீலகண்டரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற திருவோட்டை அன்று மறைத்தது போல், இன்று இவ் வணிகரிடம் கொடுத்த கோவணத்தையும் மாயமாக மறையச் செய்தார். அத்தோடு நிறுத்தவில்லை. தமது சோதனையை ! அன்று பகீரதனுக்காகக் கங்கையைப் பெருக விட்ட பெருமான் இன்று வணிகனைச் சோதிக்க திடீரென்று மழையையும் வரவழைத்தார். முதல்வோன், கங்கையில் தான் நீராடினாரோ, இல்லை காவிரியில்தான் நீராடினாரோ அல்லது நம் மாமனது திருவிடத்திலே பாய்ந்தோடும் வற்றாத வைகை நதியில்தான் நீராடினாரோ அவருக்குத்தான் வெளிச்சம் ! சற்று நேரத்திற்கெல்லாம் மழையில் நனைந்து கொண்டே, மடத்தை வந்தடைந்தார். அதற்குள் அமர்நீதியார், அடியார்க்கு வேண்டிய அறுசுவை உண்டியைப் பக்குவமாகச் சமைத்து வைத்திருந்தார். அடியார் மழையில் நனைந்து வருவதைக் கண்டு மனம் பதறிப்போன அமர்நீதியார், விரைந்து சென்று அடியார் மேனிதனைத் துவட்டிக் கொள்ளத் துணிதனைக் கொடுத்தார். இதெல்லாம் எதற்கு ? முதலில் நான் கொடுத்து கோவணத்தை எடுத்து வாரும், எதிர்பாராமல் மழை பெய்ததால் எல்லாம் ஈரமாகிவிட்டது என்றார் இறைவன்.

அமர்நீதியார் கோவணத்தை எடுத்து வர உள்ளே சென்றார். வேதியரின் சூது மொழியை, அமர்நீதியார் எப்படி புரிந்து கொள்ள முடியும் ? இறைவனின் கொவ்வைச் செவ்வாய் இதழ்களிலே குமிழ்ச் சிரிப்பு சிறிது நேரம் நர்த்தனம் புரிந்தது. அமர்நீதியார் சென்று, கோவணத்தைத் தாம் வைத்திருந்த இடத்தில் பார்த்தார். அங்கு கோவணத்தைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார். எங்குமே காணவில்லை. யாராவது எடுத்திருக்கக் கூடுமோ ? என்று ஐயமுற்று அனைவரையும் கேட்டுப் பார்த்தார், பலனேதுமில்லை. அமர்நீதியாரும், அவர் மனைவியாரும் செய்வதறியாது திகைத்தனர். மனைவியோடு கலந்து ஆலோசித்து இறுதியில் மற்றொரு அழகிய, புதிய கோவணத்தை எடுத்துக்கொண்டு, வேதியர் முன் சென்று, வேதனை முகத்தில் தோன்ற, தலைகுனிந்து நின்றார். கண்களில் நீர்மல்க அந்தணரை நோக்கி, ஐயனே ! எம்மை அறியாமலே நடந்த தவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்றார் அமர்நீதியார். அமர்நீதியார் மொழிந்ததைக் கேட்ட செஞ்சடையான், என்ன சொல்கிறீர் ? எமக்கு ஒன்றுமே புரிய வில்லையே ! என்றார். ஐயனே ! தங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கோவணத்தைப் பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருந்தேன். ஆனால், இப்பொழுது போய்ப் பார்த்தால் வைத்திருந்த இடத்தில் அதைக் காணவில்லை. பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. அதனால் தேவரீர் இதனை அணிந்துகொண்டு எம் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று மிகத் தாழ்மையோடு மனம் உருகி வேண்டினார்.

அமர்நீதியாரின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், எம்பெருமானின் திருமுகத்திலே கோபம் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. நன்றாக உளது உமது பேச்சு. சற்று முன்னால் கொடுத்துச் சென்ற கோவணம் அதற்குள் எப்படிக் காணாமற் போகுமாம் ? நான் மகிமை பொருந்திய கோவணம் என்று சொன்னதால், அதனை நீரே எடுத்துக்கொண்டு, மற்றொரு கோவணத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றலாம் என்று நினைக்கிறீரோ ? இந்த நிலையில் நீர் அடியார்களுக்குக் கோவணம் கொடுப்பதாக ஊரெல்லாம் முரசு முழுக்குகின்றீரோ ! கொள்ளை லாபம் கொழிக்க, நீர் நடத்தும் வஞ்சக வாணிபத்தைப்பற்றி இப்போது அல்லவா எனக்குப் புரிகிறது. உம்மை நம்பி நான் அல்லவா மோசம் போனேன் ! மதுரை மீனாட்சி அம்மன் கைப்பிடிக்க, வளையல் வியாபாரியாக வந்த சோமசுந்தரக் கடவுள் அமர்நீதியாரின் வாணிபத்தைப் பற்றி மேற்கண்டவாறு கடிந்து கூறினார். எம்பெருமான் மொழிந்ததைக் கேட்டு அஞ்சி நடுங்கிய அமர்நீதியார், அறியாது நடந்த பிழையை மன்னித்து பொறுத்தருள வேண்டும். இவ்வெளியோன் வேண்டுமென்றே செய்யவில்லை. காணாமற் போன கோவணத்திற்கு ஈடாக அழகிய, விலை உயர்ந்த பட்டாடைகளும், பொன்மணிகளும் எவ்வளவு வேண்டுமாயினும் தருகின்றேன். ஐயன் எங்ஙனமாகிலும் சினம் தணிந்து எம்மைப் பொறுத்தருள வேண்டும். என்று பயபக்தியுடன் பிரார்த்தித்தார்.

பன்முறை மன்னிப்புக் கேட்டார். அடியாரை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார். அமர்நீதியார், கல்லும் கரையக் கெஞ்சுவது கண்டு, சினம் சற்று தணிந்தாற்போல் பாவனை செய்த வேதியர், தண்டில் இருக்கும் நனைந்த கோவணத்தைக் காட்டி, இது உம்மிடம் கொடுத்த கோவணத்தோடு கொடுத்தால் அதுவே போதுமானது. பொன்னும் பொருளும் எமக்கு எதற்கு என்று மொழிந்தார். இறைவனின் தீர்ப்பைக் கேட்டு அமர்நீதியார் சற்று மன அமைதி கொண்டார். உள்ளே சென்று துலாக்கோலை எடுத்து வந்து மறையவர் முன் நாட்டினார். அந்தணரிடமிருந்த கோவணத்தை வாங்கி ஒரு தட்டிலும் தம் கையில் வைத்திருந்த கோவணத்தை மற்றொரு தட்டிலுமாக வைத்தார். நிறை சரியாக இல்லை. அதுகண்டு அமர்நீதியார் அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த கோவணங்களை எடுத்து வந்து வைத்தார். அப்பொழுதும் நிறை சரியாக நிற்கவில்லை அமர்நீதி நாயனாரின் தட்டு உயர்ந்தேயிருந்தது. ஒவ்வொன்றாக மற்ற கோவணமனைத்தையும் தட்டில் வைத்துக்கொண்டே வந்தார். எடை சமமாகவே இல்லை. அந்தணரின் கோவணம் இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. அம்மாயத்தைக் கண்டு வியந்தார் அமர்நீதியார். இஃது உலகத்திலே இல்லாத பெரும் மாயையாக இருக்கிறதே என்று எண்ணியவாறு தொடர்ந்து நூல் பொதிகளையும், பட்டாடைகளையும் கீள்களையும் ஒவ்வொன்றாக அடுக்கடுக்காகத் தட்டில் வைத்துக் கொண்டே போனார்.

எவ்வளவுதான் வைத்தபோதும் எடை மட்டும் சரியாகவே இல்லை. அமர்நீதியார் தட்டு உயர்ந்தும், சிவனார் தட்டு தாழ்ந்தும் இருப்பதைப் பார்க்கும்போது, அமர்நீதியார் அடியார்களிடம் கொண்டுள்ள பக்தியும், அன்பும் உயர்ந்துள்ளது என்பதையும், அத்தகைய பக்திக்கு முன்னால் இறைவனின் சோதனைகூடச் சற்றுத் தாழ்ந்துதான் உள்ளது என்ற உண்மையை உணர்த்துவதுபோல் தோன்றியது. மடத்திலிருக்கும் அனைவரும் இக்காட்சியைக் கண்டு வியந்து நின்றனர். தராசுத் தட்டின் மீது இறைவனால் வைக்கப்பட்டுள்ள கோவணத்தின் மகிமையை யார்தான் அறிய முடியும் ? வேதத்தையல்லவா ? ஈரேழு உலகமும் அதற்கு ஈடு இணையாகாதே ! அன்பர்களின் அன்பிற்குத் தானே அது கட்டுப்படும் ! இறைவனின் இத்தகைய மாய ஜால வித்தையை உணரச் சக்தியற்ற தொண்டர் சித்தம் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார். தொண்டர் நல்லதொரு முடிவிற்கு வந்தார். பொன்னும் பொருளும், வெள்ளியும், வைரமும், நவமணித் திரளும் மற்றும் பலவகையான உலோகங்களையும் கொண்டுவந்து குவித்தார். தட்டுக்கள் சமமாகவில்லை. தம்மிடமுள்ள எல்லாப் பொருட்களையும் தராசு தட்டில் கொண்டுவந்து வைத்து மலைபோல் குவித்தார். இப்படியாக அவரிடமுள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு வழியாகத் தீர்ந்தது. இனிமேல் எஞ்சியிருப்பது தொண்டரின் குடும்பம் ஒன்றுதான் ! அமர்நீதியார் சற்றும் மன உறுதி தளரவில்லை. இறைவனை மனதிலே தியானித்தார்.

ஐயனே ! எம்மிடம் இருந்த பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. நானும், என் மனைவியும், குழந்தையும் தான் மிகுந்துள்ளோம். இந்தக் தராசு சமமான அளவு காட்ட, நாங்கள் தட்டில் உட்கார தேவரீர் இயைந்தருள வேண்டும் என்று வேண்டினார் நாயனார். பிறவிப் பெருங்கடலில் நின்றும் தம் தொண்டனைக் கரையேற்றும் பொருட்டு தராசில் குடும்பத்தோடு சேர்ந்து அமர அனுமதி கொடுத்தார் எம்பெருமான். அமர்நீதியாரும், அவரது மனைவியாரும், மகனும் அடியாரின் பாதங்களில் ஒருங்கே வீழ்ந்து வணங்கி எழுந்தனர். நாங்கள் திருவெண்ணீற்றில் உண்மையான பக்தியுடன் இதுகாறும் பிழை ஏதும் புரியாமல் வாழ்ந்து வந்தோம் என்பது சத்தியமானால் இந்தத் தராசு சமமாக நிற்றல் வேண்டும் என்று கூறினார். திருநல்லூர் பெருமானைப் பணிந்தார். நமச்சிவாய நாமத்தை தியானித்தவாறு தட்டின் மீது ஏறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து மனைவியாரும், மகனும் பரமனை நினைத்த மனத்தோடு ஏறி அமர்ந்தனர். மூவரும் கண்களை மூடிக்கொண்டு, ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தால் முறைப்படி ஓதினர். துலாக்கோலின் இரண்டு தட்டுகளும் சமமாக நின்றன. மூவரும் கண் திறந்தனர்.அதற்குள் முக்கண்ணன் மாயமாய் மறைந்தார். அந்தணரைக் காணாது அனைவரும் பெருத்த வியப்பில் மூழ்கினார், அப்போது வானத்திலே தூய ஒளி பிரகாசித்தது. நீலகண்டப் பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது காட்சி அளித்தார். விண்ணவர் கற்ப பூக்களை மழைபோல் பொழிய மறைகள் முரசுபோல் முழங்கின. வணிகரும், மனைவியாரும், மகனும் துலாத்தட்டில் மெய்மறந்து இருந்தபடியே சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தனர். இறைவனின் அருளினால் துலாத்தட்டு புட்பக விமானமாக மாறியது. அமர்நீதியார் குடும்பம் அப்புட்பக விமானத்தில் கைலயங்கிரியை அடைந்தது. அமர்நீதியார் இறைவனின் திருவடித்தாமரை நீழலிலே இன்புற்று வாழலானார்.

குருபூஜை: அமர்நீதி நாயனாரின் குருபூஜை ஆனி மாதம் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நவக்கிரக வழிபாடு! ஒரு எச்சரிக்கை!



இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது? நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே!
வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய் மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட.... இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை!
ஆகா…..நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம்! கடலைமாலைகளா! எள்ளெண்ணெய் தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா! நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனி பகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்! ஆனால், இங்கே , இறைவன் திருமுன்னோ….? சுத்தம்! ஒரு ஈ, காக்கா கூட இல்லை!
என்னதான்யா நடக்கிறது இங்கெல்லாம்? நீங்கள் வழிபடும் சிவனை விட சக்தி வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?
"நாமார்க்கும் குடியல்லோம்" என்று முழங்கிய நாவுக்கரசர் பரம்பரையில் தோன்றிவிட்டு… “ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே” என்று உரத்துச்சொன்ன சம்பந்தர் மரபில் தோன்றிவிட்டு, சில்லாண்டிற் சிதையும் சிலதேவர்களை நாடிப் போய் வீழ்ந்து கிடக்கிறீர்களே!
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை! நவக்கிரகங்களை ஏதோ அஞ்சத்தக்க தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி, தோசபரிகாரம் செய்யணும், அது செய்யணும் இது செய்யணும் என்று வற்புறுத்தி, உங்களையெல்லாம் தவறாக வழிநடத்தும் சில சோதிடர்கள், சில சிவாச்சாரியார்கள், பிரபல ஆன்மீக வியாபர பத்திரிகைகள், ஆன்மீக வியாபார பேச்சாளர்களைச் சொல்லவேண்டும்!
சோதிடம் ஒரு அருங்கலை! மறுக்கவில்லை! நல்லதோ, கெட்டதோ, நடக்கப்போவதை அறிந்துகொள்ளும் ஆவலில், சோதிடர்களை நாடுவதையோ, சுப காரியங்களுக்கு நல்ல நாள் பார்க்க, அவர்களைத் துணைக்கழைப்பதையோ, தவறென்று கூறவில்லை. ஆனால், திருக்கோயில் வழிபாடுகளிலேயே சோதிட நம்பிக்கை மூக்கை நுழைப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது!
ஆயிரத்துமுன்னூறு வருடங்களுக்கு முன்பே சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா! இறைநம்பிக்கை கொண்ட எவரையுமே, நாளும் கோளும் எதுவுமே செய்யாது என்று……….. பின்னே? எதற்காக இத்தனை அச்சம்?
ஆழ்ந்துபார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. இப்படி தோச பரிகாரம், கிரகப்பெயர்ச்சி, என்று ஆயுளைக் கழிக்கும் எல்லோருமே தன்னம்பிக்கை அற்றவர்கள்! எடுத்ததற்கெல்லாம் அஞ்சி நடுங்குபவர்கள்!
உங்களைக் ஏளனம் செய்வதற்காக இதைக்கூறவில்லை!
தயவு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
இறைவழிபாட்டைப் பொறுத்தவரை, நம் சமயத்தில் முழு எழுவரல் (சுதந்திரம்) இருப்பது உண்மை தான். அதைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்!
மிகப்பழைய ஆலயங்களுக்குச் சென்றீர்களானால், அங்கே நவக்கிரக திருமுன்களே இருக்காது! அப்படியும் இருக்கின்றதென்றால் அது மிக அண்மையில் கட்டப்பட்டதாகவே இருக்கும்! 500 வருடங்களிட்கு முன்பு எந்த சிவாலயங்களிலுமே நவக்கிரக சன்னிதானங்கள் இருந்ததில்லை.


அந்தந்த சிவாலயங்கள் யாரால் வழிபடப்பட்டதோ அந்த மூர்த்தி மட்டும் தனியாக பிரதிஸ்டை செய்யப்படிருந்தது. உதாரணமாக சனி, திருநள்ளாறில் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதனால் அந்த மூர்த்தியை மட்டும் விசேடமாக பிரதிஷ்டை பண்ணி இருந்தனர் . இது நம் நாயன்மார்கள் தோன்றிய தலங்களில் அவர்களின் விசேட சந்நிதிகள் அமைவது போல..
திருநள்ளாறு இன்று சிவன்கோயில் இல்லை! அது சனி பகவான் கோயில், திங்களூர் சிவன்கோயில் இல்லை, அது சந்திரன் கோயில்! வைத்தீசுவரன் கோவில் சிவன்கோயில் இல்லை, அது செவ்வாய் கோயில்! இப்படித்தான் இன்று அவை பிரபலம் பெற்று விளங்குகின்றன.
நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரியவை! அவை ஒரு மானிடனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை! உண்மைதான்!
ஆனால், ஆணை செலுத்துபவனிடமே அடைக்கலம் புகுந்தால், அவை நம்மை என்ன தான் செய்யமுடியும்? அதை விடுத்து, கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருப்பது, நமக்கு அருள்வதற்குக் காத்திருக்கும் இறைவனை அவமதிப்பதே ஆகும் அல்லவா??
கோளறு பதிகம், திருநீலகண்டப் பதிகம், திருத்தாண்டகம் போன்ற திருப்பதிகங்கள், நம் எத்தகைய ஆபத்துக்களையும், துன்பங்களையும் நீக்கக் கூடியவை. அவற்றை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
மேற்படி பதிகங்களையும், அந்தந்த நவகிரகங்கள் வழிபட்ட பரிகார தலங்களில் நாயன்மார்களால் பாடப்பட்ட தேவார திருபதிகங்களையும் பாடி மூலவரான சிவபெருமானை வழிபடுவதை விட நம் இடர் களைவதற்கான உபாயமே வேறு இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மூலமூர்த்தியை வழிபட்ட பின் நவகிரகங்களை வழிபடுவது ஏற்புடையது. மூலமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபடாமல் செய்யும் நவக்கிரக வழிபாட்டால் யாதொரு பலனும் இல்லை.
தோச நிவர்த்தி பரிகாரம், அது, இது என்று கொட்டும் பணத்தை,வசதிகுறைந்த சிவாலயங்களில் தொண்டு செய்வதற்கும், சிறிய சிதிலமடைந்த சிவாலயங்களை புனரமைப் பதிலும், சிவனடியார்களிட்கு உதவுவதிலும் செலவழித்தால் சிவபுண்ணியமாய் பல்கி பெருகிவந்து இம்மையிலும், மறுமையிலும் நம்மை காத்து இன்பம் தரும்.
ஏதாவது ஏழை எளியவர்களுக்கு உதவுவதிலும், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என்று எங்காவது போய் அன்னதானம், ஆடைதானம் செய்வதிலும் செலவழியுங்கள். வயிறும் மனமும் நிறைந்து, நாத்தழுதழுக்க, “நீங்க நல்லாயிருக்கணும் ஐயா, அம்மா” என்று அவர்களில் ஒரே ஒருவர் மனதார நினைத்தாலும் போதும். அந்த வாழ்த்தே சிவனாணையாய், உங்களைப் பற்றவரும் சனிபகவானை ஓட ஓட விரட்டிவிடுமே!
ஆலயங்களில் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், சிவாச்சாரியார்கள் தயவு செய்து இதில் கூடிய கவனமெடுங்கள்! ஏதோ ஆலயத்துக்கு வருமானம் வருகிறதே என்பதற்காக, ஈசன் முன்னிலையிலேயே சிவத்துரோகம் நிகழ்வதற்கு, தயவு செய்து அனுமதிக்காதீர்கள்!
"நமது சமய ஒழுக்கத்தை பேணாமையே புறசமய மதமாற்றங்களிட்கான காரணம். நாமும் நலமாக வாழ்ந்து எம் சமயத்தையும் வாழ வைப்போம்"
"மேன்மைகொள் சைவசமய நீதி விளங்குக உலகமெல்லாம்."

ஆவுடையார் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்


1. ஆவுடையார் கோவில் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ளது. சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்ற சிவஸ்தலமாகும்.
2. இந்த ஊரில் உள்ள, ஆத்மநாத சுவாமி கோவிலில் மூலவர் சிவலிங்கத்தின் ஆவுடையார் எனப்படும் பீடம் மட்டும் இடம் பெற்றிருப்பதால், இந்த கோவிலும், கோவில் அமைந்துள்ள ஊரும், ஆவுடையார் கோவில் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
3. இந்த ஊரின், பழம்பெயர் திருப்பெருந்துறை என்பது. சைவ, சமய குரவர் நால்வருள் நான்காமவரான மாணிக்கவாசக பெருமானின் வாழ்வில், பல அற்புதங்களை நிகழ்த்தியவர், இந்த 'திருப்பெருந்துறை உறை சிவபெருமான்' தான்.
4. அம்பாள் ஸ்ரீ யோகாம்பாளும் விக்கிரகத் திருமேனியாக இல்லை. அவளது திருவடிகளை மட்டுமே தரிசிக்க முடியும். தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும்
5. முதல் கால பூஜையில் சுத்த அன்னம் (வெறும் சாதம்), 2-ம் கால பூஜையின் போது, சர்க்கரைப் பொங்கல், 3-ம் கால பூஜையில் தேன்குழல் பாயசம், அதிரசம், பிட்டு, தோசை, 4-ம் கால பூஜையில் சுத்த அன்னம், வடை, கீரை, 5-ம் கால பூஜையின் போது, சுத்தம் அன்னம் மட்டுமே, 6-ம் கால அர்த்தசாம பூஜையின் போது, புழுங்கல் அரிசி சாதம் வடிக்காமல், புளியோதரை, பாகற்காய் என நைவேத்தியம், சூடு பறக்கும் உணவின் ஆவி சுவாமிக்கு பிரசாதமாகும். இந்த பிரசாதங்களை சாப்பிட, பித்ருக்கள் எனப்படும் முன்னோரின் சாபங்கள் நீங்கப் பெறுவதுடன், அவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
6. ஆனித் திருமஞ்சனம் விழா 10 நாட்கள் நடக்கும் 50 ஆயிரத்துக்கும் மேல் பக்தர்கள் கூடுவர்.
7. மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட மிகச் சிறப்புவாய்ந்த சிவதலம் இது.இக்கோயிலின் மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போல கொடுங்கைகள் (தாழ்வாரம்) அமைக்கப்பட்டுள்ளது
8. புதிதாக ஒரு கோபுரமோ, மண்டபமோ அமைப்பது என்றால், தங்கள் திறமைக்கு சவாலாக இருக்கிற பணிகளை, செய்வதற்கு ஸ்தபதிகள் ஆயத்தமாகவே இருப்பர். ஆனால், கட்டட கலையின் உச்சக்கட்ட சாதனையாக அமைந்த படைப்புகள் என்று, சிலவற்றைக் குறிப்பிட்டு, அவற்றுக்கு இணையாக மட்டும், தங்களால் சாதனை படைக்க இயலாது என்று, எழுதிக் கொடுத்து விடுவர். ஆவுடையார் கோவிலின் 'கொடுங்கை!' இக்கோவிலில் சிறப்பு பெற்று இருப்பதால் ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக, பிற பணிகளை செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்' என, புதிய பணிகளை துவங்குவதற்கு முன், இங்கு வேலைக்கு வரும் ஸ்தபதிகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்வர்.
9. பஞ்சாட்சர மண்டபத்தின் உத்தர கல்லில், சுற்றிலும், நான்கு திசைகளிலும், தொடர்ச்சியாக கட்டளை கலித்துறைப் பாக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 'இந்த அற்புதமான மண்டப திருப்பணி, மனித முயற்சியால் கைகூடவில்லை. யோகநாயகி (ஆவுடையார் கோவில் இறைவி), கோபுரவேலவன் (பழைய கோபுரத்தில் இடம் பெற்றுள்ள முருகக் கடவுள்), விநாயகர், மாணிக்கவாசகர் ஆகியோரே செய்வித்தனர்' என, பொருள்படும் கவித்துவமான வரிகள் உள்ளன. தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை கட்டுவித்த, பராக்கிரம பாண்டியன், அந்த பணி தன் செயல் அல்ல என, ஒரு பாடலில் கூறுவதை இதனோடு ஒப்பிடலாம்.
10. பஞ்சாட்சர மண்டபத்தில் பொறிக்கப்பட்டு உள்ள, மற்றொரு பாடலில், விசைய (விஜய) ஆண்டு, துலா மாதத்தில், இந்த மண்டப திருப்பணியை துவங்கி, பிலவ ஆண்டு பங்குனி மாதத்தில், யோகநாயகி காரிகை இந்த பணியை முடித்தாள் என்று, கூறப்பட்டு உள்ளது. மேலும், 'சுவரோவியங்களை வரைந்து, பாக்கல் (பாவுகல்) எல்லாம் அமைத்தவன் விநாயகனே' என்று, மற்றொரு பாடலில் கூறப்பட்டு உள்ளது.
11. ஆத்மநாதர் கோயில் சிற்பக்கலைக்கு சான்றாக சிறப்புற கட்டப்பட்டுள்ளது. இங்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவன், அம்பாள் சிற்பமும், புலையன், புலத்தி வேடத்தில் வந்த சிற்பமும் உள்ளது.
12. இந்த சிவதலத்தில் வழிபடுவோர்க்கு குருபலன் கூடும். மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த ஞானம் பெற்றவராகத் திகழ்வர்.
13. ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவம் இல்லாமை), அருவுருவம் (லிங்க வடிவம்) ஆகிய மூன்று வடிவங்களில் அருளும் சிவன் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர (ஸ்தல விருட்சம்) வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார்.
14. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது
15. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு "ஆத்மநாதர்' என்று பெயர் ஏற்பட்டது
16. ஆறு கால பூஜையின் போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல அபிஷேகம் நடப்பது விசேஷம்.
17. கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை.
18. இங்கு சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானது தான். எனவே, தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ள வெளியில் கொண்டு வருவதில்லை.
19. ஆவுடையார்கோயில் மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியன், சிவப்பு அக்னி, பச்சை நிறம் சந்திரனாக கருதப்படுகின்றன.
20. சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர்.
21. பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ள சிவனை குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள்.
22. மாணிக்கவாசகருக்காக, சிவன், குதிரைகளுடன் மதுரைக்கு சென்று அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தார். குதிரை மீது சென்ற சிவன், இக்கோயிலில் பஞ்சாட்சர மண்டபத்தில் இருக்கிறார். இவரை, "குதிரைச்சாமி' என்று அழைக்கிறார்கள்.
23. குதிரைக்குகீழே நரிகளும் உள்ளன. இவருக்கு "அசுவநாதர்' என்றும் பெயர் உண்டு.
24. ஆத்மநாதர் கோயிலில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை குறிக்கின்றன. சிவனை சுற்றி திருவாசியில் உள்ள 27 தீபங்கள் நட்சத்திரங்களையும், அருகிலுள்ள 2 தீபங்கள் ஜீவாத்மா, பரமாத்மாவையும் குறிக்கின்றன
25. சன்னதியிலிருந்து வெளியே வரும் அடுத்தடுத்த வாசல் நிலைகளில் பஞ்சகலைகளை குறிக்க 5 தீபம், 36 தத்துவங்கள், 51 அட்சரங்கள், 11 மந்திரங்கள், 224 உலகங்கள் இவற்றை குறிக்கும் விதமாக அந்தந்த எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
26. இத்தலத்தில் குருவாக இருந்து மாணவர்களுக்கு உபதேசம் செய்தபோது, சீடர்கள் அவருக்கு படைத்த உணவை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்றவர்கள் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி சாதம், கீரை, பாகற்காய் என எளிய பொருட்களை அவருக்கு கொடுத்தனர். அதனை சிவனும் விரும்பி வாங்கி சாப்பிட்டார். இதன் அடிப்படையில், ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
27. அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சன்னதிக்கு கொண்டு சென்று, படைக்கல்லில் ஆவி பறக்க கொட்டி விடுகின்றனர். அப்போது சன்னதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும். சுவாமி அரூப வடிவானவர் என்பதால், அரூபமாகி விடும் ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது.
28. தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத் தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது.
29. இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.
30. சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோயில்களின் பூஜை செய்யமாட்டர். ஆனால், ஆவுடையார் கோயிலில் கிரகணநாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆதியந்தம் அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக்கூடாது என்பதற்காக பூஜை நடக்கிறது.
31. குரு இருக்குமிடத்தில் சிஷ்யர்கள், மரியாதை கொடுப்பதற்காக அவர்முன்பு அமராமல் நின்று கொண்டிருப்பார்கள். இக்கோயிலில் ஆத்மநாதருக்கு மரியாதை செய்யும் விதத்தில், மாணிக்கவாசகர், சொக்க விநாயகர், முருகன், வீரபத்திரர் ஆகியோர் நின்ற கோலத்திலேயே இருக்கின்றனர்.
32. ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரக தூண்கள் வைக்கப் பட்டுள்ளன. முதல் தூணில் ராகு, கேது, 2வது தூணில் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய், மூன்றாவது தூணில் உஷா, பிரத்யூஷா, சூரியன், புதன், நான்காம் தூணில் சந்திரனும் இருக்கின்றனர். அருகிலுள்ள 2 தூண்களில் காளத்தீஸ்வரர், கங்காதேவி உள்ளனர்.
33. முக்தியை அடைவதற்கான பிரதான மூன்று நிலைகளான சச்சிதானந்த நிலை அமைப்பில் இக்கோயில் உள்ளது. "சத்' அம்சமாக கோயில் மகா மண்டபமும், "சித்' அம்சமாக அர்த்தமண்டபமும், "ஆனந்த' மயமாக கருவறையும் இருப்பது விசேஷம்.

"இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை!"


பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள். வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஹித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள். இவைதான் பிரதானம். இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.
போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது. இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது.
அந்த பாஷாணக் கலவையில் லிங்கம், செந்தூரம், பாதரசம், ரச கற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது! ஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை. அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்
பாகவே இருக்கிறது. அத்தனை பேரும் எந்த அளவுக்குச் சித்தி பெற்று பிராணாயாமத்தைக் கடைப்பிடித்திருந்தால் இப்படியொரு அசாத்தியமான மூச்சையடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்!
பாஷாணங்களை வைத்துக் கட்டப்பட்ட இந்தச் சிலை உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் போகர் எழுதி வைத்துப் பின்பற்றி வந்த ஆறு கால பூஜைகளையும், செய்விக்க வேண்டிய அபிஷேகங்களையும் இன்று வரை மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இரவுகால பூஜைக்குப் பின் விக்கிரகத் திருமேனியில் அரைத்த சந்தனத்தைப் பூசிக் குளிர்வித்து விடுகிறார்கள். மறுநாள் காலை விளாப் பூஜை நடக்கும் வரை, ஏறத்தாழ 10 மணி நேரங்களுக்கு எந்த அபிஷேகமும் இல்லாதபோது விக்கிரகம் வெளிப்படுத்தும் உஷ்ணத்தை உறிஞ்சி விக்கிரகத் திருமேனியைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்தச் சந்தனக் காப்பு உதவுகிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனியாண்டவர் விக்கிரகத்தின் ஸ்திரத் தன்மையை அறியவும், அந்தச் சந்தனத்தில் என்னென்ன ரசாயனங்கள் தங்கியுள்ளன என்பதைக் கண்டறியவும் தமிழக கனிம வளக் கழகத்தின் அப்போதைய தலைவர் தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒரு சோதனையை மேற்கொண்டது. முதல் சந்தனத்தைக் கரைசலாக்கி அதை அட்டாமிக் அப்சார்ப்ஷன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி மூலம் பரிசோதனை செய்தனர்.
மற்ற நேரங்களில் செய்விக்கப்பட்ட அபிஷேகப் பொருள்களில் என்னென்ன ரசாயனங்கள் தங்கின என்பதை இந்தக் கருவி மூலம் துல்லியமாகக் கண்டறிந்தனர். ஆனால் இரவுக்காலப் பூஜைக்குப் பின் சாற்றிய சந்தனத்தில் என்ன இருந்தது என்பதைப் பலமுறை, பரிசோதித்தும் கண்டறிய முடியவில்லை! அதாவது அந்தக் கரைசலின் மூலத்துகள்களை இன்னவென்று பகுத்தறிய முடியாமல் போனது எப்படி என்பது அக்குழுவினருக்கு மிகுந்த ஆச்சரியம்தான்!
இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை என்பது இதில் நிரூபணமானது!
சிவாயநம!