Wednesday, January 30, 2013

பாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ.இறையன்பு அறிவுரை


ஈரோடு பாடப் புத்தகத்தை தாண்டி பிற புத்தகங்களையும் கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்க வேண்டுமென, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு பேசினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில், மாணவர்களும், சமுதாயமும் என்ற தலைப்பில் அவர் பேசியது:
மாணவர்கள் என்றால் வாசிப்பவர் என்று பொருள். எனவே, மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை எப்போதும் மேற்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இயற்கையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி நடக்க வேண்டும்.
மனித வாழ்க்கைக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்த அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. ஒவ்வொரு மணித்துளிகளையும் புத்தகங்களை வாசித்தல், நண்பர்களுடன் கலந்துரையாடுதல் எனப் பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும்.  அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 90 சதவீத நோய்களுக்குத் தீர்வுகாணக்கூடிய நிலை உள்ளது. நிலநடுக்கம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை கண்டறியக்கூடிய தொழில்நுட்பங்கள் இப்போது உள்ளன.
படித்துப் பட்டம் பெற்று, திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வசதியாக வாழவேண்டும் என்பதற்காக மட்டுமே படிக்கக்கூடாது. சமுதாயத்தில் இருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். அந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது திருப்பிச் செய்வது குறித்து சிந்திக்க வேண்டும்.
சுயநலத்தைக் கைவிட்டு சமுதாயத்துக்காக உழைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தன்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள், பொதுமக்கள், மரம், செடி, கொடி, விலங்குகள் உள்ளிட்டவற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். கற்றல் என்பது தொடர் நிகழ்வு. பாடப் புத்தகத்தை மட்டுமே படிப்பதால் பயனில்லை. கற்பதற்கு எல்லை இல்லையென சாதனையாளர்கள் எண்ணுகின்றனர். நூலகத்துக்குச் செல்லும்போதுதான் சாதனையாளராக மாற முடியும். பள்ளிப்படிப்புக்கும், கல்லூரிப் படிப்புக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.
பள்ளிப் பருவத்தை சந்தோஷமாக கழிக்க வேண்டும். ஆனால், கல்லூரிப் பருவத்தை மிக கவனமுடன் கையாள வேண்டும். பாடப் புத்தகத்தை மட்டுமே படிக்கக் கூடாது. அதையும் தாண்டி பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஒவ்வொரு மணித்துளிகளையும் பயன்படுத்த வேண்டும். வித்தியாசமாக சிந்தித்து கருத்துகளைச் சொல்லும் நபர்களை சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. மார்க்ஸ், அமெரிக்க சிந்தனையாளர் இங்கர்சால், குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற கொள்கையை உருவாக்கிய டார்வின் உள்ளிட்டோரை சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. வாய்ப்புக் கிடைக்குமென மாணவர்கள் காத்திருக்கக் கூடாது; வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.

லட்சியத்தை எட்டுவது எப்படி?


தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்க்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.
ஆடை: உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பல வாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக் கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிகையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.
வேகநடை: வேகநடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டுபிடித்து விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.
நிமிர்ந்த நிலை: எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியாது என பார்ப்பவர் எண்ணி விடுவர். நிமிர்ந்து நிற்பது. தலையை தொங்கப் போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்துப் பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணமாகும்.
கேட்பது: நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 -60 நொடிக்குள் உங்கள் லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக்கையை தூண்ட வேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.
நன்றி: உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும் அவ்வாறு பட்டியல் இடும் போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய விஷயங்கள் நம் வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும்.
மனதார பாராட்டுங்கள்: நம்மை நாமே "நெகட்டிவ்" வாக நினைக்கும் போது மற்றவர்கள் பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவாக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உடல்வாகு: நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும், அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்

உழைப்பே உயர்வு தரும்!!!


அறுபடைவீடும்,கந்தன் வழிபாடும்!!!


பழநி:

தண்டம் ஏந்தி  கோவணம் புனைந்து ஆண்டிக் கோலத்திலே
அருள் தரும் முருகன் அழகாய் நின்றான் ஆவினன் குடியாமே
பழமே வேண்டி பரமனைப் பிரிந்து பதமாய் நின்றிடவே
ஞாலம் எங்கும் ஞானம் நல்கும் பழனித் திருத்தலமே.

திருச்செந்தூர்

சூரன் முதலாய் அசுரரை வென்று தேவரைக் காத்திடவே
சூர சம்ஹாரம் செய்தான் முருகன் கடற்கரை ஓரத்திலே
சேவல் கொடியுடன் மயில்வா கனனன் காணும் திருக்கோலம்
காண்போர் கண்ணில் கண்ணீர் மல்கும் செந்தில் நகராமே.

திருப்பரங்குன்றம்

தெய்வ யானையை கந்தன் மணந்த தெய்வத் திருத்தலம்
பரங்கிரிநாதர் ஆவுடை நாயகி அம்பாள் அருள் கமழும்
தமிழகம் காணும் அறுபடை வீட்டில் முதலாம் படை வீடு
குடவரைக் கோவிலில் குமரன் திகழும் பரங்குன்றம் நகராமே

திருத்தணி

சூரரை வென்ற முருகன் சினமே தணிந்த திருத்தலமே
தணிகை மலையில் அமர்ந்தான் முருகன் தவமே இயற்றிடவே
குறத்தி வள்ளியை குகன் கைப்பிடித்த குன்றம் நகராமே
திருப்படி தோறும் திருநீறு மணக்கும் திருத்தணி  மலையாமே

சுவாமி மலை

பிரணவப் பொருளை முருகன் சிவனுக்கு உணர்த்திய திருத்தலமே
தகப்பன் சாமியாய் அழகன் அருளும் சுவாமி மலையாமே
கோவில் நகராம் கும்பகோணத்தில் திகழும் படைவீடு
திருவே ரகமே என்னும் பெயர் பெற்ற அழகிய திருத்தலமே

பழமுதிர்சோலை

சுந்தரமாக முருகன் நின்ற ஆறாம் படைவீடு
சுடராய் சுப்பிர மணியாய் அருள்வான் சோலை மலைமீது
அன்பாய் அருளாய் திகழும் முகத்தில்  புன்னகை  நீங்கா து   
அழகாய் முருகன் அருளும்  தலமே இதுபோல் வேறேது ...

மதவழிபாட்டில் ஜனநாயகம் இருப்பது நம்மிடம் மட்டுமே!!!


கோவில் திருவிழாக்களில் நாம் செய்யும் சடங்குகள் நம்மில் சிலருக்கு மிகுந்த நம்பிக்கையும் சிலருக்கு நிறைய கேள்விகளையும் எழுப்புவதில் சந்தேகமேயில்லை. உந்தித் தள்ளும் காரண அறிவால் சிந்தனை வேறாய்ப் போவது இயற்கை... அங்கு என்னதான் நடக்கிறது?
FILE

இந்த கலாசாரத்தில் கடவுளுக்கு ஓர் உறுதியான உருவம் கிடையாது. யாருக்கு எப்படித் தேவையோ, அப்படி உருவாக்கிக்கொள்ள முடியும். மனிதன் முழுமையாக விடுதலை ஆக வேண்டும். அதாவது முக்தி ஒன்றுதான் இந்தக் கலாசாரத்தின் நோக்கம். உலகிலேயே இந்தக் கலாசாரம் மட்டுமே இப்படி இருக்கிறது. எப்போது நீங்கள் இந்தக் கலாசாரத்தில் பிறந்தீர்களோ, அப்போதே உங்கள் குடும்பம், உங்கள் தொழில், உங்கள் கடவுள் எல்லாமே சைடு பிசினஸ்தான். மெயின் பிசினஸ் முக்தி மட்டுமே. முக்தியே அடிப்படையான குறிக்கோளாக இருப்பதால், உடல், மனம், சமூகம் போன்ற அனைத்தையும் குறிக்கோள் நிறைவேற உதவும் கருவிகளாகத்தான் முதலில் இருந்தே பயன்படுத்தி வருகிறோம்.

நமக்கு இருக்கக்கூடிய முக்கியத் தடை, உடல் மீதுள்ள அடையாளம்தான். அந்த அடையாளத்தைத் தாண்டுவதற்கு மிகவும் சூட்சுமமான, மென்மையான தியானத்தில் இருந்து மிகவும் கடினமான ஆணிப் படுக்கை மேல் படுப்பது வரை ஆயிரம் விதமான கருவிகள் உருவாக்கினார்கள். ஆன்மிக முன்னேற்றத்துக்காகத் தேவையான கருவியை எடுத்து உபயோகப்படுத்திக்கொள்ளும் சுதந்திரமும் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

நாளடைவில் இந்தக் கருவிகள் மக்களின் விருப்பங்களுக்கேற்ப புதுப்புது வடிவங்கள் எடுத்திருக்கலாம். எல்லாமே இன்றைக்கும் பொருத்தமானவை என்று சொல்ல முடியாது. ஆனால், இது ஒரு கலாசாரமாக இருப்பதால் மக்களின் விருப்பங்களுக்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. இந்த ஒரு கலாசாரத்தில் மட்டும்தான் கடவுள் உங்களுக்கு எது செய்ய வேண்டும், எது செய்ய வேண்டாம் என்று சொல்லித்தரவில்லை.

தற்போது இந்தக் கலாசாரத்தில் வழக்கத்தில் இருக்கும் பழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் காரணம், மனிதர்கள் அவற்றை இன்னும் விரும்புவதால்தான். அவை எல்லாவற்றையும் நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை. ஆனால், மற்றவர்கள் யாருக்கும் பிரச்னை இல்லாமல் அதை அவர்கள் விருப்பத்துடன் செய்யும்போது மற்றவர்கள் ஏன் தடுக்க வேண்டும்? கோவில் தீமிதியில் ஒடும்போது அவர்களுக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது. அந்தக் குதூகலத்தை ஏன் தடுக்க வேண்டும்? இவையெல்லாம்தான் நமது கலாசாரத்துக்கு அழகு சேர்க்கின்றன.

இந்தக் கலாசாரத்தில் ஒவ்வொரு சமூகமும் தனித்தனிப் பழக்கவழக்கங்களைக் கொண்டு இருக்கின்றன. அதனால்தான் இந்தக் கலாசாரம் இவ்வளவு வண்ணமயமாகவும் உற்சாகமானதாகவும் இருக்கிறது. உங்களது இப்போதைய அறிவுஜீவி எண்ணங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கடன் வாங்கப்பட்டது. ஆமாம். உங்கள் கல்வித் திட்டம் அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் இப்படி எண்ணுகிறீர்கள். மற்றபடி உங்களை நீங்கள் அறிவுபூர்வமாகச் சிந்திப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அவர்களை வாழ்க்கையில் உற்சாகமாக இருக்கவிடுங்கள். இவற்றை எல்லாம் அழித்துவிட்டு எல்லாரும் ஒரே மாதிரிதான் நடக்க வேண்டும், ஆட வேண்டும், பாட வேண்டும் என்றால் பிறகு வாழ்க்கையில் எங்கே உற்சாகத்துக்கு இடம் இருக்கும்?

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-5



டிசம்பர் 24-ஆம் நாள் 1892. அன்னை கன்னியாகுமரி நித்தம் தவமிருக்கும் பாரதத் திருநாட்டின் தென் கோடி. அவள் திருப் பாதங்களை வணங்கி அதில் மனநிறைவின்றி மீண்டும் மீண்டும் வருவனபோல் துள்ளி விழுந்தெழும் அலைக் கரங்கள். கரையிலிருந்து இருநூறு மீட்டர் தொலைவிலுள்ள கடற்பாறை மீது இருபத்தியொன்பது வயதான ஓர் இளந்துறவி; மூன்று நாள்கள் இடைவிடாத தியானத்தில் மூழ்கி அமர்ந்துள்ளார். சுயநல உணர்வோடு தன்னுடைய ஆன்ம விடுதலைக்கும் முக்திக்குமா அவர் அவ்வாறு செய்தார்?
இல்லை, தாழ்வுற்று வறுமை மிஞ்சிக் கிடக்கின்ற இந்நாட்டுக்காகவும், முன்னைப் பெருமையை மறந்து, மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியைக் காண இயலாதவர்களாக, எந்த எதிர்கால நம்பிக்கையும் இன்றி அடிமைகளாக உறங்கிக் கிடக்கின்ற இந்திய மக்களைத் தட்டி எழுப்புவதற்காகவும், நமது சனாதன மதத்தின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச்சென்று அதன் மூலம் தேசப் பெருமையை உயர்த்துவதற்காகவும் தன்னையே மறந்து தவமிருந்தார் அத்துறவி. யாருமே அறியாத அத்துறவிதான் அமெரிக்கா செல்ல பம்பாயிலிருந்து கப்பல் ஏறும் முன் "விவேகானந்தர்' என்ற துறவுப் பெயரை ஏற்றுக் கொண்டார்.
இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டுத் தேவைகளுக்கும், சமுதாய மாற்றங்களுக்கும் கூட சுவாமிஜியின் வாழ்க்கையும் அறிவுரைகளும்தான் வழிகாட்டிகளாக விளங்குகின்றன. அவரது அறிவுரைகளைப் படிக்கும் முன்பே, அவரது தோற்றப் பொலிவும் வீரத் திருவுருவமும், நமது இளைய தலைமுறையினருக்கு ஒரு நம்பிக்கையையும் புத்துணர்வையும் கொடுக்கின்றன என்றால் அது மிகையில்லை.
காவி உடையிலே, தலைப்பாகையோடு கைகளைக் கட்டிக்கொண்டு, நெஞ்சு நிமிர்த்தி ஒருபுறம் லேசாகத் திரும்பிப்பார்ப்பது போலிருக்கும் சுவாமிஜியின் ஆண்மை நிறைந்த திரு உருவமும், காந்தக் கண்களும், இந்திய நாட்டு இதயங்களை மட்டுமன்றி, உலக மக்களையும் தன்பால் ஈர்த்து இன்றும் வழிநடத்தி வருகின்றன.
இந்த ஆண்மைத் தோற்றம், பிறரை அடங்கச் சொல்லும் ஆண்மையல்ல; நான்தான் தலைவன்; என் சொல்லைக் கேளுங்கள் எனச் சொல்லும் இறுமாப்புப் பார்வையல்ல; எளியோரை ஒடுக்கும் வலிமைப் பார்வையல்ல; இது வள்ளுவன் சொன்ன பேராண்மை; ஆண், பெண், சாதி, மதம், இனம் என்ற பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு ஆன்மிக அனுபவம் பெற்ற அரவணைப்புப் பார்வை; வன்முறைகளாலும், சுயநலங்களாலும் துண்டாடப்பட்டு, காயப்பட்டுக் கிடக்கின்ற சமுதாயத்திற்கு அருமருந்தாய் அமைந்துள்ள அன்புப் பார்வை; அகிலத்தையே பிடிக்குள் கொண்டு வரும் அருட்பார்வை.
செப்டம்பர் 11-ஆம் நாள் 1893. ஒரே வாக்கியம். உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்ட ஒற்றை வரி. இந்தியப் பாரம்பரியத்தையும் இந்துமதப் பெருமையையும் உலகம் கேட்டுணர வழிகோலிய சொற்கள். ஆம் அமெரிக்கச் சிக்காகோவிலே ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்கும் அனைத்து சமய உலக மாநாட்டிலே சுவாமி விவேகானந்தர் முதன்முறையாகத் தன் வாய் திறந்து உதிர்த்த, ""அமெரிக்காவின் சகோதரிகளே சகோதரர்களே'' என்ற ஒற்றை வாக்கியம் பெற்றுவிட்ட வரலாற்றுச் சிறப்பு விந்தைக்குரியது.
அந்தச் சிறிய உரையைக் கேட்டு, தம்மை மறந்த அமெரிக்க மக்கள், அதன் பிறகு பதினேழு நாள்கள் நடந்த அந்த மாநாட்டிலும், கண்காட்சியிலும், பிறகு அமெரிக்காவின் பல பகுதிகளிலும் சுவாமிஜியின் உரையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். பாரதத்தையும், நமது சனாதன மதப் பண்பாடுகளையும் அகிலமே அறிந்து கொண்டது.
இதுவரை யாரும் பயன்படுத்தாதவையா அச் சொற்கள்? இல்லை அம்மாநாட்டிலே வேறு யாரும் இச்சொற்களைப் பயன்படுத்தாமல் இருந்தனரா? அப்படியொன்றும் இல்லை; சுவாமிஜி பேசுவதன் முன், சில பேச்சாளர்கள் இப்படித்தான் அவையோரை விளித்தனர். அப்படி என்றால் பிறரைப் போலவே சுவாமிஜியும் பயன்படுத்திய இந்தச் சொற்களுக்குக் கிடைத்த வேகத்தின் பின்னணி என்ன?
அந்த வேகத்தின் ஆதாரம் சுவாமிஜியின் ஆன்ம சக்தி; கொந்தளிக்கும் குமரிக் கடல் நடுவே கடல் பாறையோடு பாறையாக மூன்று நாள்கள் மோனத் தவமிருந்து பெற்ற வரம்; தக்க்ஷிணேஸ்வர மாமுனிவரான பரமஹம்ஸர் தன் பூத உடல் நீக்கிப் போகுமுன் நீர் தெளித்து தத்தம் செய்து கொடுத்த தவ வலிமை; இமயம் முதல் தென்கோடி வரையில் பரிவிராஜகராக, ஒரு பரதேசியாக, எளிய துறவியாக இம்மண்ணைக் காலால் அளந்த தன் தவப் புதல்வனுக்கு பாரத அன்னை உச்சி முகர்ந்து கொடுத்த அன்புப் பரிசு; ஆம்! சொற்களுக்கென்று தனி வலிமை ஏதுளது? அவை சொல்பவராலும், சொல்லப்படும் இடம் பொருள் ஏவல் ஆகியவற்றாலும் அன்றோ வலிமை பெறுகின்றன!
அதுமட்டுமல்ல. ""எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை அயராது செல்மின்'' என்பன போன்ற சுவாமிஜியின் அரிய உபதேசச் சொற்கள் எல்லாம் நமது வேதத்திலும் உபநிடதங்களிலும் காணப்படுபவைதான். ஆனால், சுவாமிஜி அவற்றைப் பயன்படுத்தும்போது, ஒரு தனியான ஆற்றல் சக்தி அவற்றுள் புகுந்துகொண்டது. சுவாமிஜி இவற்றையெல்லாம் வெறும் மேற்கோள்களாகப் பயன்படுத்தவில்லை. வாழ்க்கை அனுபவத்திலே நாளும் நயந்து பயன்கொள்ளக்கூடிய மந்திரச் சொற்களாகப் பயன்படுத்தினார். சடங்குகளில் முடங்கிக் கிடந்த இந்துமத தத்துவச் செல்வங்களை, எளிய பாமரனும் உணர்ந்து வீறுகொள்ளச் செய்தவர் விவேகானந்தர். மூடப் பழக்கங்கள், சமுதாயப் பிரிவினைகள், பழமைவாதிகளின் திரை மறைத்த பார்வைகள் ஆகியவற்றால் பட்டுப்போய்க் கொண்டிருந்த இந்துமதப் பண்பாடுகளைக் களையெடுத்து, மாசு நீக்கி உண்மையான பார்வையோடும் ஏற்றத்தோடும் கொடுத்தவர் சுவாமிஜி. எனவேதான் அவர் பயன்படுத்தும்போது பழைய சொற்களுக்குள்ளும் ஒரு புதுமை வந்து சேர்ந்தது.
""மாத்ரு தேவோபவ''; ""பித்ரு தேவோ பவ''; ""ஆச்சார்ய தேவோ பவ''; ""அதிதி தேவோ பவ''; என்று அன்னை, தந்தை, ஆசான், விருந்து ஆகியோரைக் கடவுளர்களாக வணங்கு என்ற மறைமொழிகளோடு, இன்னும் இரண்டினை சுவாமிஜி சேர்த்துக் கொண்டார். ""தரித்ர தேவோ பவ''; ""மூர்க்க தேவோ பவ''; கஞ்சியும் கிடைப்பதற்கில்லா வறியவர்களையும், எழுதப்படிக்கத் தெரியாத எளியவர்களையும் வணங்கி அவர்களுக்குச் சேவை செய்'' என்று முழங்கினார்.
சுவாமிஜி, இராமகிருஷ்ண மிஷன் என்ற சேவை அமைப்பினைத் தொடங்கியபோது, பரமஹம்ஸரின் நேரடிச் சீடரான அத்புதானந்தா ""நரேன், நாமெல்லாம் துறவிகள்; இறை அனுபவத்தையும் முக்தியையும் பெறும் வழியிலே நாளும் தியானமும் பிரார்த்தனையும் மேற்கொள்ள வேண்டியவர்கள். சமூக சேவையில் நாம் ஏன் ஈடுபட வேண்டும்'' என்று கேட்டபோது, சுவாமிஜி பொங்கி எழுந்து பதில் சொன்னார்.
""இதுவா நமது பக்தி? இதையா நமது குரு நமக்குச் சொல்லிக் கொடுத்தார்? ஒருவனை சுயநலவாதியாக்குவதா பக்தி? இல்லவே இல்லை; மக்களுக்குச் சேவை செய்வதும், பிறர் நலம் பேணுவதும்தான் உண்மை பக்தி'', என்றார்.
மேலும் ""பிறர் துயர் பொறுக்காத மனம் கொண்டவனே மகாத்மா. பிறரெல்லாம் உயிரின்றித் திரிகின்ற உடற்கூடுகள்'' என்றும், ""துயரத்தில் வாடுகின்றவருக்குச் சேவை செய்வதால் எனக்கு நரகம் கிடைத்தாலும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்'' என்றும் சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்கள் துறவு மனப்பான்மையோடு விளங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
÷நமது தேசத்திலே உள்ள எந்த மாநிலத்தை விடவும் - ஏன், சுவாமிஜி பிறந்த வங்க மாநிலத்தை விடவும் கூட - ஒரு மாநிலம் சுவாமி விவேகானந்தரை இனங்கண்டு உலகுக்குக் காட்டியது என்றால், அது நமது தமிழகம்தான் என்பதை வரலாறு கூறுகின்றது.
அதற்கு முக்கிய காரணம் சுவாமி விவேகாநந்தரின் அருமைச் சீடராக விளங்கிய-பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலே தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த - அளசிங்கப் பெருமாள்.
÷சுவாமி விவேகானந்தரின் பணிகளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டு அளசிங்கரின் தலைமையிலே சேவை செய்த சென்னை இளைஞர்கள் டாக்டர் நஞ்சுண்ட ராவ், "கிடி' என அழைக்கப்பட்ட சிங்காரவேலு முதலியார், பேராசிரியர் எம். ரங்காச்சாரியார், ஆர். பாலாஜிராவ், கே. சுந்தரராம அய்யர், பிலிகிரி ஐயங்கார், ஜி.ஜி. நரசிம்மாச்சாரியார், எழுத்தாளர் ராஜம் ஐயர் ஆகியோர் ஆவர். இவர்கள் ""எனது நண்பர்கள்'' என சுவாமிஜியினாலே அன்போடு அழைக்கப்பட்டவர்கள்.
1893-இல் சிக்காகோவில் நடைபெற உள்ள அனைத்து சமய மாநாட்டிற்கு சுவாமிஜியை அனுப்ப இவர்கள் ஏற்றுக் கொண்ட கடின உழைப்பைப் பாராட்ட வார்த்தைகள் கிடையாது. எனவே சுவாமிஜியின் 150-வது ஜயந்தி ஆண்டினை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய கடமை தமிழகத்திற்குள்ளது.
÷ஜனவரி 1863-இல் பிறந்து ஜூலை 1902-இல் தன் பூத உடல் நீத்து, இவ்வுலகில் 39 ஆண்டுகளே வாழ்ந்த சுவாமிஜி நிறைவேற்றிய பணிகளை நினைத்தால் மனம் வியந்து போகின்றது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் என்னவெல்லாம் சாதித்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
எனினும் ஓர் ஆறுதலை நான் பகிர்ந்து கொள்கின்றேன். நரைத்த தலையோடும், திரைவிழுந்த கண்ணோடும் கையிலே தடி கொண்டு தள்ளாடி நடந்து செல்லும் முதியவராக அவரை நாம் கற்பனை செய்யக்கூட முடியாது. என்றென்றும் இளமையாகவும் வீரப்பார்வையோடும், வலிமை வாய்ந்த உடலோடும்தான் நாம் அவரை நினைக்க முடியும்.
சுவாமிஜியின் 150-ஆவது ஜயந்தி விழா ஆண்டில், பாரதத்தின் "ஞானதீப'மாக ஒளிவீசும் அவரது ஒப்பற்ற மனித நேயக் கருத்துகளைச் செயல்படுத்துவோம் என்று மீண்டும் உறுதி பூணுவோம்.
கட்டுரையாளர்: சென்னை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர்.

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4



விவேகானந்தரை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இன்றைய காலக்கட்டத்திலிருந்து நாம் அவரைப் பார்க்கக் கூடாது. அவர் வாழ்ந்த காலத்தில் ஹிந்து மதமும், ஹிந்து தர்மமும் எப்படி இருந்தது, ஹிந்து மதம் உலகத்தின் பார்வையில் எப்படி பார்க்கப்பட்டது, அவர் சந்தித்த சவால்கள் எத்தகையவை என்பதையும் பார்க்க வேண்டும்.
இவற்றை தெரிந்துகொள்ளாவிட்டால் ஹிந்து மதத்துக்கான அவருடைய பங்களிப்பை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டில் நாம் அவரை நினைவுகூருகிறோம். அவருடைய வாழ்விலிருந்து, உரைகளிலிருந்து ஏதாவதை ஒரு தாக்கத்தைப் பெற முடியுமா என்று நாம் பார்க்கிறோம். அவருக்கு முன்னோடிகள் யாரும் கிடையாது.
விவேகானந்தரையும், ராமகிருஷ்ணரையும் புரிந்துகொள்வதற்கு ஆன்மிகத் தேடல் வேண்டும். ஆன்மிகத்தின் வழியாகவே அவரைப் புரிந்துகொள்ள முடியுமே தவிர,  இலக்கியத்தியத்தின் வழியாக அது முடியாது.
இந்தியா முழுவதும் பயணம் செய்து ஹிந்து மதத்தையும், இந்திய கலாசாரத்தையும் அவர் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். ஜூனாகட் சமஸ்தானத்தைச் சேர்ந்த திவான் வெளிநாட்டிற்குச் சென்று நமது மதத்தின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தினார். அதன்பிறகே, சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் பங்கேற்க அவர் சென்றார்.
சிகாகோ மாநாட்டில் அவரது முதல் வாசகம் வெறும் வார்த்தைகளல்ல. இந்தியாவின் ஆன்மாவை, கலாசாரத்தை அங்கு அவர் வெளிப்படுத்தினார்.  சகோதர, சகோதரிகளே என்ற வாசகத்தின் மூலம் அமெரிக்கர்களின் ஆன்மாவை விவேகானந்தர் தொட்டார். எனவேதான், இந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களையும் வசப்படுத்தியது.
பேச்சாளர்கள் கேட்பவர்களின் சிந்தனையை மாற்றலாம். ஆனால், அவர்களது நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவர மதத்தில் ஈடுபாடுள்ள, ஆன்மிகத்தில் ஊறியவர்களால் மட்டுமே முடியும். அவர்களது வார்த்தைகளுக்கு மட்டுமே அடுத்தவர்களின் ஆன்மாவைத் தொடும் ஆற்றல் உண்டு.
அந்த மாநாடு உலகிலேயே உண்மையான ஒரே மதம் கிறிஸ்தவ மதம் என்பதை அறிவிப்பதற்காகத்தான் கூட்டப்பட்டது. ஆனால், சுவாமி விவேகானந்தரின் உரை அதை மாற்றிவிட்டது. விவேகானந்தரின் பேச்சு குறித்து அந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவரான ஹென்றி பரோஸ் தனது நாள்குறிப்பில், சுவாமி விவேகானந்தர் இந்த வார்த்தைகளைப் பேசியவுடன் பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு பல நிமிடங்களுக்கு கை தட்டினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
விவேகானந்தர் 2 நிமிடங்கள் மட்டுமே,  471 வார்த்தைகள் மட்டுமே அவர் அந்தக் கூட்டத்தில் பேசினார். எங்கள் மதத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
ஹிந்து மதம் உலகில் உள்ள அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது. அனைத்து மதங்களையும் உண்மையானது என்று உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது என்றார். அதற்கு அவர் இரண்டு உதாரணங்களையும் குறிப்பிட்டார். தங்களின் தாய்நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பிறகு, முழு சுதந்திரத்தோடு இந்தியாவில் தங்கள் மதத்தையும், கலாசாரத்தையும் பின்பற்றி வந்த யூதர்களையும், பாரசீகர்களையும் குறிப்பிட்டு இந்தியா அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது என்று கூறினார்.
உலகில் எந்தவொரு மதமும் மற்றோரு மதத்தை ஏற்றுக்கொள்ளாது. எந்த மதம் சிறந்தது என்பதை தீர்மானிக்க குத்துச்சண்டைகள் நடைபெற்று வந்ததையும் அப்போது அவர் குறிப்பிட்டார். அவரது உரைக்குப் பிறகு, நம்முடைய மத பிரசாரகர்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு பதில் அங்கிருந்து இங்கு பிரசாரகர்கள் வருவதே பொருத்தமாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன.
அந்த மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் அவரது ஆன்மிக பின்புலம்தான். அவர் துறவி என்பதாலேயே எதிரிகளையும் தம்மை விரும்புபவர்களாக மாற்றினார். சாதாரணப் பேச்சாளர் ஒருவரால் இதைச் செய்ய முடியாது.
வேறு மதத்தைச் சேர்ந்த இறைவனுடன் நமது இறைவனை வேறுபடுத்துவதும், வேறு மதத்தினரை நம்மிடமிருந்து  வேறுபடுத்துவதும் இந்தியாவைப் பொருத்தவரை பாவம் ஆகும். இதையே அவர் உலகிற்கு எடுத்துக் கூறினார். அதுவே அவரது மேதமை.
அவர் இதை எடுத்துரைப்பதற்கு முன்பாக, உலகத்தினரும், மதத் தலைவர்களும், மத அறிஞர்களும் இது குறித்து அறியாமல் இருந்தனர்.
கடந்த 2008-ல் உலக மதத் தலைவர்கள் மாநாட்டில் அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்றும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத்தான் சுவாமி விவேகானந்தர் 115 ஆண்டுகளுக்கு முன்னர் கூறினார். ஏழ்மையைப் பயன்படுத்தி மக்களை மதமாற்றம் செய்யக் கூடாது என்றார். அதை இப்போது அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.