ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Thursday, April 12, 2012
Thursday, April 5, 2012
நமது கர்மவினைகளை அடியோடு நீக்கும் கிரிவல விரதம்
நம்மில் பலர் நேர்மையாகவும்,திறமையாகவும் உழைக்கிறோம்;உழைத்தும் அதற்குரிய பலன்கள் சம்பளமாக,பதவி உயர்வாக கிடைத்தாலும்,உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைப்பதில்லை;இதற்குக் காரணம் அவர்களின் பிறந்த ஜாதகத்தில் ஒளிந்திருக்கும்.யாருக்கெல்லாம் உழைப்புக்குரிய பலன்கள் கிடைக்கவில்லையோ,அவர்கள் இந்த கிரிவலவிரத முறையைப்பின்பற்றலாம்.
நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்துகொண்டே செல்கிறது;இதை கட்டுப்படுத்த வேண்டிய அரசுகள்,வேறு முக்கியமான ‘கடமைகளை’ செய்துகொண்டே இருக்கின்றன.இந்த சூழலில் நமது ஆன்மீக பலத்தை அதிகரித்துக்கொண்டே சென்றாலே,நமது பொருளாதார சூழ்நிலையில் தன்னிறைவை எட்டிவிட முடியும்.
ஏனெனில்,இந்தியாவே கர்மநாடு! இந்தியாவைத் தவிர,மேல்நாடுகள் அனைத்தும் போக நாடுகள்.கர்மங்கள் எனில்,நாம் கடந்த பிறவிகளில் செய்த நற்செயல்களின் விளைவுகளால் இந்த பிறவியில் சொத்துக்களை அனுபவிக்கிறோம்;குறிப்பிட்ட திறமையோடு வேலை பார்த்து சம்பாதிக்கிறோம்;பலவிதமான வாழ்க்கை அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன;பலருக்கு கிடைக்கும் புகழ் அவர்களின் கால கட்டத்தில் வேறு எவருக்குமே கிடைப்பதில்லை;அதேபோல,நாம் செய்த தீச்செயல்களின் விளைவாக அவமானம்,தோல்விகள்,துயரங்கள்,காம அவமானம்,கடன்,நோய் ,அரசாங்க கோபம் என அவதிப்படுகிறோம்.இந்த கர்மவினைகளின் மொத்த வடிவமாக நாம் இந்தியராக இருக்கிறோம்.இந்த சூழ்நிலையில் நமது கர்மவினைகளை அடியோடு நீக்கிட,நாம் செய்ய வேண்டியது அண்ணாமலை கிரிவலம் தான்.
அண்ணாமலை கிரிவலம் பற்றி விரிவாகவும்,அனுபவரீதியாகவும் கடந்த சில ஆண்டுகளாக நிறைய்ய்ய்ய எழுதியிருக்கிறோம்.நீங்கள் ஆன்மீகக்கடல் 2009,2010,2011 ஆம் ஆண்டின் பதிவுகளை வாசித்தால் அண்ணாமலை கிரிவலத்துக்கு இவ்வளவு மகிமையா? என்று பிரமிப்பீர்கள்.சுமார் 12 தடவை கிரிவலம் சென்றுவந்தால்,அதன் விளைவாக நமது அனைத்து கர்மவினைகளும் அடியோடு நீங்கி,நமது தினசரி வாழ்க்கை மிகவும் எளிதாகவும்,மகிழ்ச்சிகரமாகவும்,நிரந்தரமான வேலை அல்லது தொழிலோடும் அமைந்துவிடும் என்பது அனுபவ நிச்சயம் ஆகும்.
உங்களின் பிறந்த நட்சத்திரம் எதுவோ,அந்த நட்சத்திரம் ஒரு தமிழ் மாதத்தில் ஒருமுறை அல்லது இருமுறை வரும்;அவ்வாறு வரும்நாளன்று,நீங்கள் அண்ணாமலைக்கு வந்துவிடவேண்டும்.வரும்போது,மஞ்சள் நிற ஆடை,இரு ருத்ராட்சங்கள்,குறைந்தது ஐந்து கிலோ டயமண்டு கல்கண்டு இவைகளைக் கொண்டு வர வேண்டும்.உங்களின் ஜன்ம நட்சத்திரம் உதயமாகும் நேரத்தில் நீங்கள் சாப்பிடாமல்,(உபவாசம் இருத்தல்)மஞ்சள் நிற ஆடையை அணிந்துகொண்டு(ஆண்கள் எனில்,மஞ்சள் நிற வேட்டி மட்டும்),உடலெங்கும் விபூதி பூசிக்கொண்டு,இரட்டைப்பிள்ளையார் கோவிலில் ஒரு தேங்காயை விடலை விட வேண்டும்.(சூறைத் தேங்காய்)அங்கே இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு கிரிவலம் புறப்பட வேண்டும்.அங்கிருந்து கிழக்குக் கோபுர வாசலுக்கு வந்து,கோபுரவாசலில் இருந்தவாறு அண்ணாமலையாரை வழிபட்டு விட்டு,தேரடி முனீஸ்வரர் கோவிலுக்குச் சென்று அவரிடம் வழித்துணைக்கு வரும்படி மனதார வேண்டிக்கொண்டு ,கிரிவலம் புறப்பட வேண்டும்.கிரிவலப்பாதை முழுவதும் யாரிடமும் பேசக் கூடாது;பேசாமல் மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே கிரிவலம் செல்ல வேண்டும்.அவ்வாறு செல்லும்போது அக்னி லிங்கத்தைக் கடந்ததும்,கொண்டு வந்திருக்கும் டையமண்டு கல்கண்டை கிரிவலப்பாதையில் பாதையின் ஓரத்தில் அடர்த்தியாக இருக்கும் காட்டுப்பகுதியினுள் தூவ வேண்டும்.
கிரிவலத்தை பூதநாராயணர்கோவிலில் நிறைவு செய்ய வேண்டும்.நிறைவு செய்தபின்னர்,கோவிலுக்குள் சென்று அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்.அதன்பிறகு, வீட்டில்/ஹோட்டலில் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில்,உங்களால் கிரிவலப்பாதை முழுவதும் சாப்பிடாமல் பயணிக்கமுடியவில்லை எனில்,கிரிவலப்பாதையில் இளநீர் அல்லது பால் அருந்தலாம்(எவ்வளவு வேண்டுமானாலும்!)
#கிரிவலம் செல்லும்போது ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே இருப்பதால்,உடல் சூடாகிக்கொண்டே வரும்.இளநீர் அருந்துவதால் அதுவரை நாம் ஜபித்துவந்த ஓம்சிவசிவஓம் மந்திர அலைகள் நமது உடலுக்குள் முழுமையாக பதிவாகிவிடும்.இதை நமக்கு ஆராய்ந்து சொன்னவர் ருத்ராட்ச தெரபிஸ்ட்,சிவகடாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.
இரண்டாம் மாதத்தில் இதே போல உண்ணாவிரதமிருந்து 27 உணவுப் பொட்டலங்களைச் சுமந்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.ஓவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் தலா 3 துறவிகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.அவ்வாறு 27 உணவுப்பொட்டலங்களைச் சுமக்க இயலாதவர்கள் உடன் வருபவருடன் 27 உணவுப்பொட்டலங்களை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு,முன்பே ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் காத்திருக்கச் செய்து நீங்களே அன்னதானம் செய்ய வேண்டும்.
இவ்வாறு 12 மாதங்கள் செய்துவந்தால்,6 வது அல்லது 8 வது கிரிவல விரதம் பலனளிக்கத் துவங்கும்.நமது பிரச்னைகள் எப்பேர்பட்டதாக இருந்தாலும் அந்த பிரச்னைகள் தீர்ந்துவிடும்.நமது ஏக்கங்கள் எதுவாக இருந்தாலும் அது நிறைவேறும்.நமது வாழ்க்கைப் பயணமே அடியோடு மாறிவிடும்.
ஓம்சிவசிவஓம்
ஜீவசமாதியில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம் சங்கரன்கோவில்,புளியங்குடி,கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது.இந்த கிராமம் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது.தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி,காலை 11 மணி,மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது.சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது.மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,சங்கரன்கோவில்,பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது.பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக(செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.பயணித்ததும்,ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும்.அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.
இங்கே குறைந்தது ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;அவ்வாறு ஜபிக்கத் தேவையான மஞ்சள் துண்டு.இரு ருத்ராட்சங்களுடன் வருவோம்;இந்த ஆசிரமத்தில் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் இடங்களும்,அன்னதான வசதியும் இருக்கின்றன.
யார் ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை தியானிக்கிறார்களோ,அவர்களுக்கு மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.இங்கு தங்குவோர் செய்ய வேண்டியது:
இரவு ஒரு மணி நேரமும்,அதிகாலை ஒரு மணி நேரமும் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதியில் மஞ்சள்துண்டு விரித்து ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க வேண்டியது மட்டுமே!!
இந்த சனிக்கிழமை 7.4.2012 இரவில் அங்கே சந்திப்போம்;கூட்டாக ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிப்போம்;அளவற்ற அருளாற்றலைப் பெறுவோம்.
ஓம்சிவசிவஓம்
Wednesday, April 4, 2012
ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்
ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்;இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.
இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர்,தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.
ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.
ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.
ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார,உகார,மகாரங்கள் “பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை”க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.
ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின்புறம் உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் “உ” மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம” தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.
ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.
ஏழு சக்கரங்களிலும் அதிர்வு
இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,
1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.
2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.
மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸீம்,ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம்,மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3 ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384 ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம் ,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.
ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,கல்லீரல்,சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள்,சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.
இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஆதாரம்: ஞான ஆலயம் பக்கங்கள் 20,21,22;பிப்ரவரி 2011.
இந்திய மருந்துகள் துறையை விழுங்கும் பன்னாட்டு மருந்துதயாரிப்பு பூதங்கள்
நீங்கள் இருப்பது தெரியவேண்டுமெனில்,நீங்கள் செயல்பட வேண்டும்.இந்திய காப்புரிமைக் கட்டுப்பாட்டாளர் பி.ஹெச்.குரியனும் அவருடைய அலுவலகமும் இப்போது இந்தியாவைத் தாண்டி வெளியேயும் தெரிய ஆரம்பித்திருப்பது அப்படித்தான். ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் மருந்து நிறுவனத்துக்கு குரியன் கொடுத்த அடி,உலகம் முழுவதும் பொது சுகாதாரத்துக்காக குரல் கொடுப்பவர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்காக ‘பேயர்’ நிறுவனம் தயாரிக்கும் மருந்து ‘நெக்ஸாவர்’.ஒரு மாதத்துக்கு நெக்ஸாவர் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமானால் ரூ.2,80,000 செலவிட வேண்டியிருந்தது.இந்த விலை இந்தியர்களுக்குக்கட்டுப்படியாகாது என்று ‘பேயர்’நிறுவனத்திடம் சொன்னார் குரியன். ‘பேயர்’ அசைந்து கொடுக்காத நிலையில், கட்டாய காப்புரிமையின் அடிப்படையில் இந்த மருந்தைத் தயாரிக்கும் அனுமதியை இந்திய நிறுவனமான ‘நாட்கோ பார்மா’ வுக்கு வழங்கிவிட்டார் குரியன்.இனி, இந்த மாத்திரைகள் ரூ.8800/-க்கு கிடைக்கும்.இந்த மருந்தின் அடிப்படை மூலக்கூறுக்கான காப்புரிமைக்காக ‘பேயர்’ நிறுவனத்துக்கு ‘நாட்கோ பார்மா’ காப்புரிமைத் தொகையாக விற்பனையில் 6 சதவீதத்தையும் தரும்.இப்படி காப்புரிமைக்கு உட்பட்ட ஒரு மருந்தைத் தயாரிப்பதற்கான அனுமதியை உள்நாட்டு நிறுவனத்துக்கு இந்திய அரசு அளிப்பது இதுவே முதல் முறை.
உலக அளவில் மருந்து உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.1,00,000 கோடிக்கு மருந்து உற்பத்தி நடக்கிறது.இதில் ஏற்றுமதியாகும் 40% மருந்துகள் ஏழை நாடுகளுக்கே செல்கின்றன.குறிப்பாக,ஐ.நா.சபைசார் சுகாதார அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும் மருந்துகளில் மூன்றில் இரு பங்கு இந்திய மருந்துகள்.காரணம்,இந்திய மருந்துகள் விலை குறைவு;தரமோ சர்வதேச தரம்.
இந்தப் போட்டியை எதிர்கொள்ள இந்திய மருந்துத்துறையைக் கைப்பற்றும்வகையில் இப்போது மூன்றுவிதமான போர்களில் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்கியிருக்கின்றன.முதலாவது,இந்திய மருந்து நிறுவனங்களை வாங்கிவிடுவது. ‘ரான்பாக்ஸி; ‘டாபர் பார்மா’. ‘பிராமல் ஹெல்த்கேர்’ எல்லாம் இப்போது இந்திய நிறுவனங்கள் இல்லை;பன்னாட்டு பேராசை நிறுவனங்களாகிவிட்டன;இரண்டாவது விலைக்கு வராத இந்திய நிறுவனங்களைக் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் வளைப்பது; ‘டாக்டர் ரெட்டீஸ் லேப், அரபிந்தோ,காடில்லா பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இந்த வலைக்குள் வந்துவிட்டன.மூன்றாவது,காப்புரிமைப் போர்.முந்தைய இரு வழிமுறைகளை விட மோசமான உத்தி இது.இந்தப்போரை, எவ்வளவு திட்டமிட்டு அவை நடத்துகின்றன என்பதற்கும் இந்த போரில் அவை வென்றால் என்ன நடக்கும் என்பதற்கும் ஒரு சின்ன உதாரணம்: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘நோவார்டீஸ்’ மருந்து நிறுவனம் தொடுத்திருக்கும் ஒரு வழக்கு.
ரத்தப் புற்றுநோய்க்கான ‘இமானிடினிப் மெடிசிலேட்’ என்ற மருந்தைத் தயாரிக்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும் இந்த மருந்தை உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருக்கிறது..இந்திய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ‘இமானிடிப் மெசிலேட்’ மாத்திரை ஒன்றின் விலை ரூ.90/- அதே மருந்தை சின்ன மாற்றங்களோடு ‘நோவார்டீஸ்’ தயாரிக்கும் ‘கிளிவெக்’ மாத்திரை ஒன்றின் விலை ரூ.1000/-இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 30,000 பேர்கள் ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள்.இந்தப்பின்னணியில் ‘நோவார்டீஸ்’ இந்த வழக்கில் வென்றால் என்னவாகும் என்று நினைத்துப்பாருங்கள்!!!
இப்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கும் இந்த வழக்குக்காக ‘நோவார்டீஸ்’ சார்பாக இதுவரை ஆஜரான வழக்கறிஞர்கள் யார் எல்லாம் தெரியுமா? ப.சிதம்பரம்(இன்றைய உள்துறை அமைச்சரேதான்!!!),ரோகிந்தன் நாரிமன்,கோபால் சுப்ரமண்யம்(இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பதவியை அலங்கரித்தவர்கள்).எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரிக்கே மருந்து நிறுவனங்களுடன் சந்தேகத்துக்குரிய தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து,அவர் வழக்கில் இருந்து விலக நேர்ந்தது.’நோவார்டீஸ்’ மட்டும் அல்ல;பல நிறுவனங்கள் பல்லாயிரம் மருந்துகள் வரிசையில் நிற்கின்றன.
இத்தகைய சூழலில்தான் ‘பேயர்’ நிறுவனத்துக்கு எதிராகக் கட்டாயக் காப்புரிமையைப் பயன்படுத்தி இருக்கிறார் குரியன். உலக வர்த்தகக் கழகம் அளித்திருக்கும் ஒரு விஷேச உரிமையின் அடிப்படையில், அதாவது தேச நலன் சார்ந்து, உரிமம் அற்ற நிறுவனங்களுக்குக் கூட மருந்துகளைத் தயாரிக்க அரசு அனுமதி வழங்கலாம் என்ற விதியின் அடிப்படையில் இந்த அனுமதியை அளித்திருக்கிறார் குரியன்.பன்னாட்டு நிறுவனங்கள் இந்த முடிவால் அதிர்ந்து போயிருக்கின்றன.(ஆமாம்,அவர்களின் சுதந்திரமான கொள்ளையை தடுத்தால்?)பெரும்பாலான அமெரிக்க,ஐரோப்பிய நிறுவனங்கள், “காப்புரிமைகளுக்கு இந்தியா துளியும் மதிப்பு அளிப்பது இல்லை” என்று கடுமையாகச் சாடி இருக்கின்றன.இதைத் தொடர்ந்து காப்புரிமை என்பதற்கான எல்லை எது என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
இந்த தருணத்தில் இந்தியாவிடம் தொடரும் ஒரு முக்கியமான பலவீனத்தைப் பற்றியும் நாம் பேசவேண்டியது அவசியம். அது ஆராய்ச்சித்துறையில் நாம் மிக மோசமான நிலையில் இருப்பது(இதற்குக்காரணம் இந்தியாவின் ஆத்ம பலத்தை கடந்த 60 ஆண்டுகளாக இந்திய ஆளும் கட்சியின் மூலமாகவே அமெரிக்கா தகர்த்து வந்திருக்கிறது.அதாவது இந்தியாவில் நுகர்வோர்,மருந்து பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெறாமல் பார்த்துக்கொண்டது).நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.75% கூட ஆராய்ச்சிக்காகச் செலவிடப்படுவது இல்லை;ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிப்பது என்பதைக்காட்டிலும்,பிறர் கண்டுபிடித்த பொருட்களைப் பிரதியெடுப்பதே இந்தியத் தொழில் கலாச்சாரமாகிவருகிறது.இது மோசமான போக்கு.இதற்கு இந்தியாவை ஆண்ட ஆளும் கட்சிக்கு தேசநலன்,மக்கள் நலன்,தொலை நோக்குத் திட்டங்கள் என்று எதுவும் கிடையாது.உலக வர்த்தகப்போட்டிக்கு இந்தியாவை தயார் செய்ய எதுவுமே செய்யாமல் இருந்ததே காரணம்.இந்தியாவால் எதையும் கண்டுபிடிக்க முடியாது என்ற மனோபாவத்தை வளர்த்ததும் ஒரு காரணம் ஆகும்.இதன்பின்னணியில்,நிச்சயமாக அமெரிக்காவும்,இங்கிலாந்தும் இருக்கிறது.
உலகின் ஆறில் ஒரு பங்கு மக்களைச் சுமக்கும் இந்தியா,இந்த சூழலில் விழித்துக்கொள்ள வேண்டும்.ஆராய்ச்சிப்பணிகளில் பிரதான கவனம் செலுத்திட மேலும் பல பொதுத்துறை மருந்து நிறுவனங்களை உருவாக்கிட வேண்டும்.ஒரு பொருளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அதற்குரிய காப்புரிமையை வழங்கும் அதே சமயத்தில்,அந்த காப்புரிமை நியாயமானதாகவும்,கட்டுப்படியானதாகவும் இருப்பதை உறுதி செய்யக் குரல் கொடுக்க வேண்டும்.குரியனின் இந்த நடவடிக்கை அதற்கான முதல் படியாக இருக்கிறது.இந்த முதல் படி யானது பல படிகள் முன்னேற தேசபக்தியும் மக்கள் நலனும் நிறைந்த அரசு அமைந்தால் செய்ய முடியும்.
நன்றி:ஆனந்தவிகடன்,பக்கம் 58,59;4.4.12
Tuesday, April 3, 2012
இந்தியாவைக் காப்போம்;இன்னும் பலரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைப்போம்!!!
பெருங்கடலைக் கொண்ட மதம்,2020க்குப்பிறகு உலகை ஆளும்; என்பது பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் நார்ஸ்டர் டாமஸின் வாக்கு ஆகும்.அதற்கான நிகழ்வுகள் நிறைய தற்போது நிகழ்ந்துவருகின்றன.இருப்பினும்,நமது தமிழ்நாட்டிலும் உலகமெங்கும் தனி மனிதன்,குடும்பம் போன்றவைகள் பலவிதமான பொருளாதார கஷ்டங்களுக்கு உள்ளாகிவருகின்றன.
இந்த நிலையை மாற்றிட நாம் செய்ய வேண்டியது இரண்டு காரியங்கள் ஆகும்.
முதலாவதாக நாம் ஒவ்வொருவரும் தினமும் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க வேண்டும்.
இரண்டாவதாக இந்த வருடம் முழுவதும் எப்படி ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும் என்ற துண்டுப்பிரசுரத்தை நமது ஊரில் பரவச் செய்ய வேண்டும்.
ஏனெனில்,நேர்மையாக வாழ்ந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் அனைவருமே மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகிவருகின்றனர்;அப்படிப் பட்டவர்களுக்கு இந்த துண்டறிக்கை விரைவாகச் சென்றடைய வேண்டும்.
நடைமுறையில் நேர்மையாளர்களைப் போல நடிப்பவர்கள் நல்லது கெட்டதுகளை சுலபமாக அடையாளம் கண்டுகொண்டு தன்னை காப்பாற்றிக்கொள்கின்றனர்.நிஜமாகவே நேர்மையாக இருப்பவர்கள் தனது வட்டத்தை விட்டு வெளிவருவதில்லை;எனவே,வழக்கமான ஓம்சிவசிவஓம் துண்டறிக்கையை இன்னும் எளிமையாக்கியிருக்கிறோம்.இந்த துண்டறிக்கைகளை இந்த வருடம் முழுவதும் ஆன்மீக அமைப்புகள்,ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள்,ஜோதிட பயிற்சிவகுப்புகள்,புராதனமான கோவில்கள்,தேய்பிறைஅஷ்டமி நாட்கள்,சிவராத்திரி,அமாவாசை நாட்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் தமிழ்நாடெங்கும் விநியோகிக்க திட்டமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
நமது ஆன்மீகப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள்,நம்மை நேரில் சந்தித்தவர்கள் இந்த ஆன்மீக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கெடுத்துக்கொள்ளும்படி அழைக்கிறோம்.
நீங்கள் மூன்று விதமாக இந்த பிரச்சாரத்தில் பங்கெடுக்கலாம்.
1.நீங்களே உங்கள் பகுதியில் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் பற்றிய துண்டறிக்கை(நோட்டீஸ்)யை விநியோகிக்கலாம்.
2.நீங்களே இந்த ஓம்சிவசிவஓம் துண்டறிக்கையை குறைந்தது 1000 எண்ணிக்கையில் அச்சடித்துத் தரலாம்.(அச்சடிக்க செலவு 1000 பிரதிகளுக்கு ரூ.500/-க்குள்தான் ஆகும்)
இவ்வாறு செய்வதன்மூலமாக,உங்கள் பிரச்சாரத்தினால் சிலபல நல்ல உள்ளங்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குவார்கள்;இதனால் உங்களின் தீராத மன உளைச்சல்கள் தீரும்;நீண்டகால பிரச்னைகள் முடிவுக்கு வரும்(எனக்கு அப்படித்தான் ஆனது);அப்படி ஜபிப்பவர்களின் பிரச்னைகள் தீரும்;முடிவாக இந்தியாவானது விரைவாக வல்லரசு நிலையை எட்டும்;இதன் மூலமாக மின்சாரப்பற்றாக்குறை விரைவாகத் தீரும்;அனைவரின் தனிநபர் வருமானம் அதிகரிக்கும்;செலவுகள் குறையும்.
பின்குறிப்பு:இந்த வருடத்தில் நமது பூமியும்,நாடும்,மாநிலமும் பல பிரச்னைகள் சந்திக்க இருப்பது நவக்கிரகங்களின் செயல்பாடுகள் மூலமாக அறிகிறோம்.இதை தடுக்க நாம் செய்யும் முக்கியமான ஆன்மீக சேவை+ தேச சேவை & மக்கள் சேவை இதுதான்.
நீங்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் வெறும் 100 நாட்களுக்கு தினமும் ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவிட்டு,இந்த பதிவினை மீண்டும் வாசிக்கவும்.அப்போது என்ன உணர்வீர்கள் தெரியுமா?
Monday, April 2, 2012
திருஅண்ணாமலை கோயிலுக்குள் இடைக்காடர் சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது!!!
சிவ ஸ்தலங்களில் மிக அரிதான,மிக முக்கியமான,அளவற்ற சக்திவாய்ந்த ஆலயம் அண்ணாமலை ஆகும்.அருணாச்சலேஸ்வரின் இந்த ஆலயத்தினுள்ளே சித்தர்களில் ஒருவரான இடைக்காடரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
திருமஞ்சனக்கோபுரம் வழியாக திரு அண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்ததும்,இடது பக்கமாக தெரிவது கோசாலை ஆகும்.இந்த கோசாலைக்குள்ளே தெற்கு நோக்கியவாறு இருக்கும் ஒரு சிறு குகை போன்ற அமைப்பே இடைக்காடர் சித்தரின் ஜீவசமாதி ஆகும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10 முதல் 12 மணிக்குள்ளும்;அல்லது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 7 முதல் 9 மணிக்குள்ளும் இடைக்காடர் சித்தரை வழிபட ஏற்ற நேரம் ஆகும்.
முழுக்க முழுக்க ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலை ஒன்று,
விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழங்கள் குறைந்தது கால் கிலோ, விதை நீக்கப்பட்ட பேரீட்சை பழம் பாக்கெட் ஒன்று,
டயமண்டு வடிவில் இருக்கும் கல்கண்டு ஒரு கிலோ, பத்தி,நெய் தீபம் ஏற்ற கொஞ்சம் நெய் மற்றும் தாமரை நூல் திரி,தீப்பெட்டி,(மணமானவர்கள்) தேங்காய்,வாழைப்பழம் மற்றும் வேறு இரண்டு விதமான பழங்களுடன் வந்து இடைக்காடரை வழிபட்டு செல்ல வேண்டும்.இவ்வாறு எட்டு திங்கட் கிழமை அல்லது எட்டு வெள்ளிக்கிழமை தொடர்ந்து வழிபாடு செய்தால்,நமது தீர்க்கமுடியாத பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.
இடைக்காடர் சித்தரை வழிபட்டபின்னர்,கொஞ்சம் டயமண்டு கல்கண்டையும்,கொஞ்சம் வாழைப்பழத்தையும்,கொஞ்சம் விதையில்லாத திராட்சை மற்றும் பேரீட்சைப் பழங்களையும் கண்டிப்பாக அவரவர் வீட்டுக்குக் கொண்டு சென்று தனது ரத்த உறவுகளுக்கு தர வேண்டும்.இவ்வாறு செய்தால் தான் வழிபாடு முழுமையடையும்.
இந்த பதிவினை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.எல்லாம் சித்தர்களின் ஆசிகள்!!!
ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்
Subscribe to:
Posts (Atom)






