Wednesday, July 22, 2015

லிங்க ரூபம் என்பது பலருக்கு சிவனின் திருமேனி, இறைவனின் உருவம்.



ஆனால் வெளிநாட்டினரும், தொல்லியல் நிபுணர்களும் இது இனப்பெருக்க உறுப்பை குறிக்கிறது என்கிறார்கள்.
வெளிப்படையாக சொல்வதென்றால் பலர் லிங்கத்தை பார்த்து கேலி செய்வதும் உண்டு. உண்மையில் லிங்க ரூபம் ஆணின் இனப்பெருக்க உறுப்பை குறிக்கிறதா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக கேட்பதற்கோ பயம். காரணம் நாம் விரும்பி வணங்கும் இறைவனின் உருவை பற்றி கேள்வி கேட்டு, பிறகு ஆமாம் இது இனப்பெருக்க உறுப்பைத்தான் குறிக்கிறது என சொல்லிவிட்டார்களானால் என்ன செய்ய?
மருந்தை சாப்பிடும் பொழுது குரங்கை நினைக்காதே என சொன்ன கதையாக லிங்கத்தை பார்க்கும் பொழுதெல்லாம் இது ஞாபகம் வருமே? அப்பறம் எங்கே சாமி கும்பிடுவது என எண்ணுபவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.
கவனியுங்கள். லிங்க உருவம் ஆணின் இனப்பெருக்க உறுப்பை குறிப்பதில்லை. லிங்கம் என்ற வார்த்தை ஆணின் உறுப்பை குறிக்க தமிழில் பயன்படுத்தப்படுகிறதே தவிர இதற்கும் சிவ லிங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அப்படியானால் லிங்கம் என்பது என்ன?
பஞ்ச பூதத்தால் உருவாக்கப்படும் எந்த ஒரு பொருளின் அடைப்படை உருவமும் லிங்கம் என்கிற நீண்ட உருளை வடிவமாகும். கோழி முட்டையின் வடிவம், மழை துளியின் வடிவம், நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களின் வடிவம், தாவரத்தின் விதைவடிவம் என எந்த பொருளின் அடிப்படை கோள வடிவமாக இருக்கும்.
மனித உடலின் அடிப்படையாக ‘செல்’ இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு செல்லின் வடிவமும், அதன் உட்கருவின் வடிவமும் நீண்ட கோள வடிவமே. இவ்வாறு கோளவடிவில் இருக்கும் இறையாற்றல் கொண்ட லிங்க வடிவத்திற்கு பாண லிங்கம் என்பார்கள். சமஸ்கிருதத்தில் பாணம் என்றால் குண்டு அல்லது புல்லட் என பெயர். பாணம் தொடுப்பது,அம்பு எய்வது என கேள்விபட்டிருப்பீர்கள். பாண லிங்கம் என்பது பார்க்க கோழி முட்டையை போல நீண்டு முனைகள் குவிந்து இருக்கும்.
ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் இத்தகைய லிங்க ரூபங்களை காணலாம்.
அனேக கோவில்களில் இருக்கும் லிங்கம் பாண லிங்க ரூபமாக இல்லாமல் முழுமையான மூன்று பிரிவுகளுடன் இருக்கிறது. லிங்கம், ஆவுடையார் மற்றும் லிங்க பீடம் என இவற்றை விளக்கலாம்.
உருவமற்ற ப்ரணவ மந்திரமான ஓம் என்ற ஓசையின் உருவ நிலையே லிங்கம் என்கிறார் திருமூலர். ஓம் என்ற ப்ரணவ மந்திரம் அ-உ-ம என்ற மூன்று ஓசைகளால் ஆனது. அ என்பது லிங்க பீடத்தையும், உ என்பது ஆவுடையாரையும், மஎன்பது லிங்கத்தையும் குறிக்கிறது. லிங்கம் மூம்மூர்த்திகள் என்ற பிரம்ம விஷ்ணு மற்றும் மஹேஷ்வரனின் ரூபம் என விளக்குகிறார். இவ்விளக்கம் கொண்ட திருமந்திரத்தை பார்ப்போமா?
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.
- திருமந்திரம் - 1752
இனி லிங்கத்தை பற்றி யாராவது கேட்டால் உண்மையை விளக்குவீர்கள் தானே?

No comments:

Post a Comment