Monday, July 6, 2015

திருநீற்றின் பெருமை


பதிணென் புராணங்களில் முக்கியமானது, `சிவ மஹா புராணம்' அதில் கூறப்படும் திருநீற்றின் பெருமைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.
தனக்கு மிகவும் பிடித்த திருநீற்றை உடலெங்கும் பூசியுள்ளார் சிவபெருமான். விபூதியை அணிபவர்கள் பிரயாகை, புஷ்கரம், உருத்திரவாகம், துவாரகை, ஹரித்வாரம், பிரபாசம் முதலிய திருத்தலங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன்களைவிட சிறப்பான பலன்களை அடைவார்கள்.
பிரம்மன் திருநீறு அணிந்தே உலகை சிருஷ்டிக்கிறார். திருமால் விபூதி தரித்தே சிவபெருமானை வணங்குகிறார். `நீற்றினை நிறையப்பூசி நித்தலாயிரம் பூக்கொண்டு' என்று திருவீழிமிழலை பதிகத்தில் அப்பர் பெருமான் பாடி அருளியுள்ளார்.
திருநீற்றினை தொடர்ந்து அணிந்து வந்தால் சித்திகள் வசமாகும். திருநீறு அணிந்தவர்கள், பிசாசுகள், இராட்சதர்கள், யக்ஷர்கள், கிரஹங்கள் முதலியோர்களுக்கு அஞ்சத் தேவையில்லை. திருநீறு தினமும் பூசிவந்தால் கயிலையில் வசிப்பர். அதாவது `சாரூப்யம்' என்னும் முக்தியைப் பெறுவர்.
பிரமன் விபூதியை தராசின் ஒரு தட்டிலும், சுவர்க்கம் முதலான உலகங்களை மறுதட்டிலும் வைத்து எடை போட்டு, அனைத்திலும் விபூதியே சிறந்தது என அறிந்தார். அசுத்தமாக இருந்தாலும், நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தாலும், வெறி பிடித்திருந்தாலும் விபூதி அணிந்தால் குணமடைவார்கள்.
சிவபெருமானுக்கு உமாதேவியை விடவும்-சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்று கண்களை விடவும் திருநீறு மேல் அதிக நேசம் உண்டு. அதனைப் பூசுவாரை அவர் பெரிதும் நேசிப்பார் என்று பொருள்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. -- திருமந்திரம், பத்தாம் திருமுறை.
திருஞானசம்பந்தரின் மந்திரமாவது நீறு திருநீற்றுபதிகம் திருநீற்றின் பெருமை உரைக்கிறது.
திருநீற்றை ஒற்றை விரலால் பூசாமல், மூன்று விரல் கொண்டு நெற்றி முழுவதும் குளிர பூசி அகமகிழ்வோம்.
. திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment