Friday, April 20, 2012

குபேரகிரிவலம் செல்வது எப்படி?ஆன்மீகரீதியான அனுபவ விளக்கங்களுடன்


நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்கள்,நமது அம்மாவும் அப்பாவும் செய்த பாவங்கள்,நமது பெற்றோரின் பெற்றோர்கள் செய்த பாவங்கள்,நமது முந்தைய நான்கு அல்லது ஐந்து தலைமுறை பெற்றோர்கள் செய்த பாவங்களின் அடையாளத்துடன் நாம் பிறந்திருக்கிறோம்;நமது கல்வித்தகுதி,நமது வசதிகள்,பார்க்கும் வேலை அல்லது தொழில்,அனுபவிக்கும் சொத்துக்கள்,கிடைக்கும் அவமானங்கள்,நமது நோய்கள் இவை அனைத்தும் நமது முற்பிறவி,முன்னோர்களின் பாவ புண்ணிய அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.
நாமும்,நமது குழந்தைகளும்,அவர்களின் வம்சமும் நிம்மதியாகவும்,செல்வச்செழிப்போடும் வாழ ஏராளமான பரிகாரங்கள் இருக்கின்றன.அவற்றில் மிகவும் சுலபமான பரிகாரமே திருஅண்ணாமலை கிரிவலமும்,கிரிவலம் செல்லும்போது நாம் செய்யும் அன்னதானமும்.

பவுர்ணமி மற்றும் அமாவாசை கிரிவலம் மிகவும் புண்ணியம் தரக்கூடியதுதான்.கிரிவலம் செல்லும் விதங்களே ஒரு லட்சத்து எட்டுவிதங்களில் இருக்கின்றன.நாம் நிம்மதியாகவும்,வசதியாகவும் வாழ இரண்டு காரியங்கள் செய்யவேண்டும்.
ஒன்று,3.12.2010 வெள்ளிக்கிழமையன்று வரும் துவாதசி திதியன்று அண்ணாமலையில் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தல்;
இரண்டு 4.12.2010 சனிக்கிழமையன்று மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் குபேரலிங்கத்தில் நமது கோரிக்கைகளை வைத்தல்.இதற்கான செலவுத்தொகை குறைந்தது ரூ.1000/-ஆகும்.திருஅண்ணாமலையின் அருகிலிருக்கும் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு!பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.1000/-க்கும் மேல் ஆகும்.
முடிந்தால் மேலும் ரூ.1000/-க்கு டர்க்கிடவல் துண்டுகளை வாங்கிக்கொள்ளுவோம்;இந்த டர்க்கித்துண்டுகள் விரித்தால் படுக்கையாகவும்,போர்த்திக்கொண்டால் போர்வையாகவும் இருக்க வேண்டும்.அவ்வளவு அகலமாகவும் முரடாகவும் இருக்கவேண்டும்.ஒரு டர்க்கித்துண்டு ரூ.60/-ஆகிறது.இது கொஞ்சம் வித்தியாசப்படலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம்:

சுமார் 21 துறவிகளுக்கு அன்னதானம் ரூ.20/-X21=ரூ.420/= இது ஒரு வேளைக்கு வீதம் மூன்று வேளைக்கு ரூ.1260/- எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.இந்தத் தொகை குறைந்த பட்சம் ஆகும்.இன்னும் குறைவாக எனில்,ஒரு வேளைக்கு மூன்று துறவிகளுக்கு ரூ.60/-வீதம் மூன்று வேளைக்கு ரூ.180/- போதுமே.

ஒரு வெள்ளை வேட்டி,ஒரு ருத்ராட்சம்,ஒரு மஞ்சள் நிறச்சட்டை,ஒரு வில்வ இலை(2.12.2010 அன்று ஏதாவது ஒரு சிவாலயத்தில் பறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்),குடை,ஜலதோஷம்,காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகள்,முரட்டுப்போர்வை,இரண்டு இரவுகளுக்குத் தேவையான ஆடைகள் மற்றும் பணம்,செல்போனுக்கான சார்ஜர்கள்.
2.12.2010 இரவில் அல்லது 3.12.2010 காலையில் திரு அண்ணாமலையில் வந்துசேருமாறு பயணத்திட்டம் வகுத்துக்கொள்ளுங்கள்.

3.12.2010 அன்று காலையில் அருணாச்சலேஸ்வரரை வழிபட்டுவிட்டு,காலை 9 மணிக்குள்,மதியம் 12 முதல் 2 மணிக்குள்,இரவு 7 முதல் 9 மணிக்குள் திருஅண்ணாமலையின் கோபுரவாசலில் இருக்கும் துறவிகளுக்கு அல்லது கிரிவலப்பாதையில் இருக்கும் துறவிகளுக்கு, நாம் சமைத்த அல்லது கடையில் வாங்கிய உணவுப்பொட்டலங்களை தானமாக வழங்குவோம்.(எந்த உணவுப்பொருளாகவும் இருக்கலாம்;செய்யப்படும் அன்னதானம் சோறாக இருந்தால் முழுமையான அன்னதானப்பலன் கிடைக்கும்.அசைவம் அன்னதானம் செய்யக்கூடாது)

திருஅண்ணாமலையில் துவாதசி திதி அன்று அன்னதானம் செய்தால்,அன்னதானம் செய்தவர் தனது வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்.மேலும்,அவருக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும் என அருணாச்சலபுராணம் தெரிவிக்கிறது.

பிற நேரங்களில் மஞ்சள் ஆடை(இந்த மஞ்சள் ஆடையின் மகிமைகளைப் பற்றி நமது ஆன்மீகக்கடல் 2009 ஆம் ஆண்டில் விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது.இந்த மஞ்சள் நிற ஆடையை திருஅண்ணாமலைக்கு வந்து இறைவழிபாடு மற்றும் கிரிவலம் செல்லும்போது மட்டும் அணிந்துகொள்வோம்.பிற நேரங்களில் பயன்படுத்த வேண்டாம்) அணிந்துகொண்டு, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள்வந்துவிடுவோம். தனிமையில் அமர்ந்து ஓம் அருணாச்சலாய நமஹ (இதை ஒரு முறை ஜபித்தால் 3,00,000 முறை ஓம் நமச்சிவாய ஜபித்ததற்குச் சமம்)என்றும்,ஓம் சிவசிவஓம் (இதற்கு மிஞ்சிய மந்திரம் இந்த உலகில் இல்லை)என்றும் காலையில் குறைந்தது ஒரு மணிநேரமும்,மாலையில் குறைந்தது ஒரு மணி நேரமும் ஜபிப்போம்.

விடிந்தால்,சனிக்கிழமை 4.12.2010 குபேர பகவான் பூமிக்கு வரும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி நாள்! பகல் முழுவதும் நாம் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் அமர்ந்து ஓம் சிவசிவ ஓம் மந்திரம் ஜபிப்போம்;மாலை 4 மணிக்கு குபேரலிங்கத்துக்கு வந்துவிடுவோம்.மாலை 6 மணி வரையிலும் குபேரலிங்கத்திற்கு குபேரபகவான் பூஜை செய்கிறார்;ஆத்மபலம் இருப்பவர்களுக்கு மட்டுமே குபேரபகவானின் தோற்றம் தெரியும்.மற்றவர்கள் மானசீகமாக குபேரபகவானிடம் வேண்டிக்கொள்ள வேண்டியதுதான்.

நமது பொருளாதாரக்கோரிக்கைகளை வைப்போம்;வெட்டிக்கதை பேசுவோரை அழைத்து வர வேண்டாம்;நாமும் மவுனமாக நமது கோரிக்கைகளை வைப்போம்;அல்லது ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிப்போம்;
ஏனெனில், இதே ஒன்றரை மணி நேரம் மீண்டும் வர ஒரு ஆண்டு நாம் காத்திருக்க வேண்டும்.ஆகவே,நமது வறுமை/கடன்/பண நெருக்கடி/முன்வினை தீர பிரார்த்தனை செய்வோம்.

இந்த வாய்ப்பை நம்மிடம் வெளிப்படுத்திய நமது மானசீக குரு பி.எஸ்.பி.ஐயாவுக்கு நன்றிகளைக் கூறுவோம்;

மாலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் குபேரலிங்கத்திலிருந்து கிரிவலம் புறப்படுவோம்;புறப்படும்போது,நமது தலையில் நாம் கொண்டு வந்த வில்வ இலையை நமது தலையில் வைத்து ஒரு ரப்பர்பேண்டால் இறுக்கிக் கட்டிக்கொள்ளுவோம்;ஓம்சிவசிவஓம் என்ற மந்திரத்தை மட்டும் ஜபித்துக்கொண்டே கிரிவலம் செல்லுவோம்;கிழக்குக்கோபுர வாசலில் கொஞ்சம் பழங்களை வாங்கிக்கொள்ளுவோம்;கிரிவலப்பாதையில் காணும் பசுக்களுக்கு அந்தப்பழங்களைவழங்குவோம்;நாம் கொண்டு வந்த டர்க்கித்துண்டுகளை கிரிவலப்பாதையில் வாழும் துறவிகளுக்கு வழங்குவோம்;அந்தத்துறவிகள் அந்தத்துண்டினை பயன்படுத்தும் காலம் வரையிலும் நமது கர்மங்கள் கரைந்துகொண்டே வரும் என்பதை நினைவில் கொள்க; கிரிவலம் செல்லும் ஒவ்வொரு விநாடியும் ஓம்சிவசிவஓம் என்ற மந்திரம் மட்டுமே ஜபித்துக்கொண்டு செல்லுவோம்;அவசியமெனில் யாரிடமாவது பேசுவோம்;செல்போனை அணைத்துவிடுவோம்;மீண்டும் குபேரலிங்கத்தை வந்தடைவோம்.

அங்கிருந்து வாகனத்தில் நமது தங்குமிடம் சென்று,மறுநாள் 5.12.2010 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் (வேறு எந்தக்கோவிலுக்கும் செல்லாமல் நேராக) நமது வீட்டிற்குச் செல்லுவோம்.நமது வீட்டில் அரை மணிநேரத்துக்குக் குறையாமல் தங்கிவிட்டு நமது அடுத்த கடமைகளைத் துவங்குவோம்.

இப்படிச் செய்வதால், அடுத்த சில மாதங்களில் நமது பொருளாதார வாழ்க்கை உயரும்;நல்ல வேலை கிடைக்கும்;நிரந்தரத் தொழில் அமைந்துவிடும்;அமைந்திருக்கும் தொழில் விரிவடையும்;பாவங்கள் தீரும்;நீண்ட கால பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் தீர்வதற்கான பாதை தெரியும்.

No comments:

Post a Comment