ஐரோப்பாவில் டென்யூப் நதி 2860 கி.மீ.தூரமுள்ளது.இந்த நதி ஜெர்மனி நாட்டில் உதயமாகிறது;அங்கிருந்து உற்பத்தியாகி ஆஸ்திரியா,ஸ்லோவோகியா, ஹங்கேரி, குரோவேஷியா, யுகோஸ்லோவியா, பல்கேரியா, ருமேனியா , உக்ரைன் போன்ற ஒன்பது நாடுகளின் பாய்ந்து கடைசியில் துருக்கியின் அருகில் இருக்கும் கருங்கடலில் கலக்கிறது.
அமெரிக்காவில் மிசிசிபி நதியின் நீளம் 3766 கி.மீ.ஆகும்.இது மின்னசோடா, விஸ்கான்சின், அயோவா, இல்லியானாய்ஸ், மிசோரி, கெண்டகி,டென்ஸி, அர்க்கான்சாஸ், மிசிசிபி,லூசியானா ஆகிய பத்து மாநிலங்களின் வழியாக பாய்கிறது.
இந்த நதிகளைச் சொந்தம் கொண்டாடி அங்கெல்லாம் எந்த சண்டையோ சர்ச்சையோ நிகழ்ந்ததாகக் கேள்விப்பட்டதில்லை;
நமது நாட்டில் காவிரி நதியின் நீளம் 760 கி.மீ.ஆகும்.இது கர்நாடகாவில் தலைக்காவிரியில் பிறந்து,கேரளாவைக் கடந்து தமிழ்நாட்டை வளப்படுத்தி, புதுச்சேரி வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.தலைமை ஆணையம் தீர்ப்பு வழங்கும் நிலை ஏற்பட்டப்பின்பும்,உலகின் மிகப் பெரிய ஜனநாயக மக்களின் பிரதிநிதிகள் மக்கள் தீர்ப்பை எதிர்ப்பதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக மிகைப்படுத்திச் சித்திரிக்கின்றனர்.அரசியல் தலைவர்கள்,விவசாய அமைப்புகள்,நடிகர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி குளிர்காய்ந்துகொண்டிருக்கின்றன.
வரப்புயர கோலுயரும் என்று சொன்ன ஊரில் நீருக்குப் போராடுவது நியாயம் தான்.கர்நாடகாவிலிருந்து காவிரி, கேரளாவிலிருந்து முல்லைப்பெரியார்,ஆந்திராவிலிருந்து க்ருஷ்ணா என்று தமிழகம் தண்ணீர் கேட்டு அண்டை மாநிலங்களுடன் போராடிக்கொண்டிருக்கின்றன.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகம் தனது விவசாய நிலப்பரப்பை அதிகரித்துக்கொண்டே சென்றதை,தமிழ்நாடு கண்டுகொள்ளவில்லை;சுயச்சார்புடன் வாழ்வதற்காக கர்நாடகம் (அனைத்து அரசியல்தலைவர்களும் ஒருங்கிணைந்து)திட்டமிட்டு பணிபுரிந்துகொண்டிருக்கிறது.அந்த சுயச்சார்பான வளர்ச்சிக்கு எவரது உரிமையையும் பாதிக்காதவரையில் பிரச்னையில்லை;(இதே போல தமிழ்நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டிட ஏதும் திட்டமிட்டிருக்கிறதா?)
தாமோதர் நதி ஒரு காலத்தில் ‘மேற்கு வங்காளத்தின் சோகம்’ என்று அழைக்கப்பட்டது.அவ்வப்போது பெரும் வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது.இதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு,மேற்கு வங்கம்,பீஹார் ஆகிய அரசுகள், ‘தாமோதர் பள்ளத்தாக்குக் குழுமம்’(TVC)அமைத்து என்று இணைந்து செயல்படும் தளத்தை உருவாக்கி சரியான விதத்தில் நிர்வகித்து,நீர்ப்பாசனம்,நீர்ப்போக்குவரத்து(140கி.மீ) மின் உற்பத்தி,காட்டுவளம் போன்ற பலதுறைகளில் வெற்றிகண்டிருக்கிறது.சோகம் இன்று செல்வமாக மாறிவிட்டது.
தாமிரபரணி,வைகை போன்ற நதிகளுக்கு தனித்தனியே நதிநீர் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை தமிழகம் சார்ந்த நதிகள் என்பதால் பிரச்னை இல்லை;(நல்ல வேளையாக மாவட்டங்கள் தண்ணீரை பங்குபோடும் காலம் இதுவரை வரவில்லை).ஆனால்,காவிரி பாயும் மாநிலங்களை வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆள்வதால் பிரச்னை.அப்படியானால் என்ன செய்யலாம்? நிரந்தரத் தீர்வு என்ன?
காவிரி வள நிறுவனம் என்று ஒரு நிறுவனத்தை மத்திய அரசின் பிரதிநிதிகள்,புகழ் பெற்ற பொறியியல் வல்லுநர்கள், மூலதனம் செய்யும் பங்குதாரர்கள்,விவசாயிகள்,மீனவர்கள் ஆகியோரைக் கொண்டு அமைத்து இயக்கலாம்.
இந்த நிறுவனம் பாரபட்சமின்றி தேவைக்கேற்ப தண்ணீரைப் பிரித்துக் கொடுத்து விவசாயம் தடைபடாமலும்,கடலில் நேரடியாகச் சென்று கலக்காமலும் பார்த்துக்கொள்ளலாம்.விவசாய உரம்,மருந்துகள்,விவசாயக் கருவிகள் போன்றவற்றை நியாயவிலையில் வழங்கலாம்.
விவசாயிகளுக்கு பயிர் சுழற்சிமுறை, மண் ஆராய்ச்சி,வானிலை அறிக்கை,வெள்ளப்பெருக்கு போன்ற விழிப்புணவு கொடுக்கலாம்.மீன்வளத்தை திட்டமிட்டுப் பெருக்கலாம்.நதிக்கரையோர சுற்றுலாவைக் கவர திட்டம் தீட்டலாம்.ஆற்றுமணல் கொள்ளையை சட்டப்பாதுகாப்புடன் தடுக்கலாம்;மக்கள் பங்கீட்டினால் நதிக்கரை ஓரத்தில் மரங்களை நட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கலாம்.
அரசு மற்றும் அரசியல் சாராத ஒரு நிறுவனமாக இது இயங்க வேண்டும்.அப்போதுதான் தங்களின் மாநில மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அரசியல்வாதிகள் இதில் தலையிட்டு பிரச்னைகளைக் கிளப்பிவிட முடியாது.
இவ்வாறான கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டால் நதிகளை இணைத்து தேசியமயக்கவிருக்கும் சூழலில் நதிகளை மாநிலமயமாக்கல் சிந்தனை எழுந்திருக்காது.
பொதுப்பணித்துறை பழைய மாதிரி ஏரி குளங்களை பராமரிக்கும் ‘பாளையக்காரர்கள்’ முறை போன்ற மாற்றுச் சிந்தனையை செயல்படுத்த முன்வரலாம் அல்லது கிராமப்பஞ்சாயத்துக்கு மேலாண்மைப் பொறுப்புகளை கொடுத்துவிடலாம்.வறட்சி நேரத்தில் தன்னார்வத்தோடு குளங்களில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிக்கு PWD மற்றும் AD Mines கொடுக்கும் சில்லறை தொந்தரவுகளை நிறுத்தலாம்.முறையாக மண் சக்தி எடுப்பவர்களை ஊக்குவிக்கலாம்.
‘பக்கத்து வயலில் பயிர் காய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் சண்டைக்காரராக இருந்தாலும்,காலால் தன் வயலின் வாமடையை சற்று உடைத்துவிட்டுப்போவான்’ அவன் தான் விவசாயி!!! எனவே,அரசியல்வாதிகள் ஒதுங்கிக் கொண்டாலே நதிநீர்ப்பிரச்னைகளுக்குத் தீர்வு வந்துவிடும்.அந்நதிகளை சுதேசிய விவசாயிகள் தீர்வுடனும் நீருடனும் வைத்திருப்பர்.
நன்றி:திரு.ஜஸ்டின் திவாகர்,தேசிய மற்றும் சுதேசிய சிந்தனையாளர்.
No comments:
Post a Comment