நாளை சனிப்பிரதோஷம்.பிரபஞ்சத்தில் முதன் முதலில் பிரதோஷம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது.எனவே,சனிப்பிரதோஷம் மிகவும் புண்ணியமான நாள் ஆகும்.இந்துக்களாகிய நம்மில் சிவனை வழிபடுவோருக்கு இது நமது பாவங்களை விரைவாக அழிப்பதற்கு உகந்த நாளாகும்.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.
தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது.மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.எனவே,இந்த ஒன்றரை மணி நேரமும் நாம் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு மாலை 4 மணிக்கே சென்றுவிடுவோம்.மாலை 6 மணி ஆகும் வரையிலும் சிவ மந்திரங்களை ஜபித்துக்கொண்டே இருப்போம்;
ஒரு முறை ஓம் அண்ணாமலையே போற்றி என ஜபித்தால் 3,00,000 முறை ஓம் நமச்சிவாய நம என்று ஜபித்ததற்குச் சமம் என்று அருணாச்சலபுராணத்தில் சிவபெருமானே தெரிவிக்கிறார்.அதை நாம் ஜபிக்கலாம்.
ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணான அபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்த மந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்;
அடுத்தபடியாக,ஓம்சிவசிவஓம் என்ற மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் அமிர்த நேரமான மாலை 5.30 முதல் 6.00 மணிவரையிலும் ஏதாவது ஒரு விரிப்பு விரித்து,(மஞ்சள் நிற துண்டு எனில் மிகவும் ஏற்றது)அதில் நந்திபகவானை நோக்கி அமர்ந்து,ஜபித்துக்கொண்டே இருப்போம்.
ஒரு மந்திரத்தை வாயால் பேசுவது போல் ஒரு முறை சொன்னால்,ஒரு தடவை ஜபித்ததற்குச் சமமாகும்.
மனதுக்குள் உதடு அசையாமல் சொன்னால்,அதன்பலன் பல மடங்கு ஆகும்.
மனதுக்குள் உதடு அசையாமல்,வீட்டில்,அலுவலகத்தில் ஒரு முறை சொன்னால்,பத்துமுறை ஜபித்தமைக்குச் சமமாகும்.
கருங்கல்லால் கட்டப்பட்ட(பழமையான) கோவிலுக்குள் அமர்ந்து மனதுக்குள் ஒரு முறை சொன்னால்,ஆயிரம் முறை ஜபித்ததற்குச் சமமாகும்.
மலைமீதிருக்கும் கோவில்களுக்குள் அமர்ந்து ஒரு முறை மனதுக்குள் சொன்னால்,ஒரு கோடி தடவை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
கடலோரக்கோவில்களுக்குள் அமர்ந்து ஒரு முறை மனதுக்குள் சொன்னால்,இரண்டு கோடி தடவை ஜபித்ததற்குச் சமமான பலன் கிடைக்கும்.இவையெல்லாம் சாதாரண நாட்களில் கிடைக்கும் பலனாகும்.
சனிப்பிரதோஷத்தன்று,இவ்வாறு பழமையான கோவில்களில் மனதுக்குள் ஒன்றரை மணி நேரம் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தால்,மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் நூறு கோடி மடங்காக ஜபித்த பலன்கள் கிடைக்கும் என மந்திர ராஜ பதப்பிரயோகம் என்ற ஆன்மீகநூல் தெரிவிக்கிறது.
ஆக,கலிகாலத்தில் இறை நாம ஜபம் மட்டுமே நமது பாவங்களையும்,நமது முற்பிறவி மற்றும் முன்னோர்களின் பாவங்களையும் தீர்க்கும் அருமருந்தாகும்.
No comments:
Post a Comment