Wednesday, October 10, 2012

ஓம்சிவசிவஓம் பற்றி திருமந்திர விளக்கம்






தமிழ்,தமிழ்நாடு,தமிழ்ப்பண்பாடு என்று பேசுபவர்களும்,எழுதுபவர்களும் ஒன்றை வேண்டுமென்றே மறந்துவிடுகிறார்கள்:நமக்கு மட்டுமல்ல;இந்த பூமிக்கு தமிழ்மொழியை கொண்டு வந்தவர் சித்தர்களின் தலைவர் அகத்தியர்! ஆக,நமது தமிழ்மொழியின் தந்தையாக நாம் அகத்தியரையே போற்றிக் கொண்டாட வேண்டும்.தமிழின் பெயரைக்கொண்டு பிழைத்தவர்கள் அப்படி நமக்கு அறிவுறுத்தினார்களா?

தமிழ் மொழியின் இலக்கியக்களஞ்சியத்தின் அளவு மிகப் பெரியது;தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம்,திருப்பாவை,     யாப்பிலக்கணம்,சிலப்பதிகாரம்,மணிமேகலை,திருக்குறள்,தொல்காப்பியம்,சித்தர்கள் எழுதிய நிகண்டுகள்,வைத்திய நூல்கள்,ரசவாதம் தொடர்பான ஓலைச்சுவடிகள்,ஜோதிடம் தொடர்பான புலிப்பாணி 300 போன்ற பாடல் தொகுப்புகள் முதல் இன்றைய பாரதியார்க் கவிதைகள்,மு.வ.வின் படைப்புகள் வரையிலும் மிக பிரம்மாண்டமானவை.இவைகளின் பெயர்களே இன்று நம்மில் பலருக்குத் தெரியவில்லை;தமிழ் வைத்திய முறையான சித்தமருத்துவமே இன்றைய ஆயுர்வேத மருத்துவமுறைக்கு மூலகர்த்தா என்பதை வைத்தியம் சார்ந்த முனைவர் பட்டம் பெறுபவர்கள் கண்டறிந்துள்ளனர்.அப்படிப் பார்த்தால் தமிழ் வைத்தியமுறையான சித்த மருத்துவத்துக்கு இப்போது போதுமான அங்கீகாரம் கிடைத்துள்ளதா? அப்படிக் கிடைக்க நமது தமிழினத் தலைவர்கள் என்ன முயற்சி எடுத்துள்ளார்கள்?


இந்த உலகத்தில் எந்த ஒரு நாட்டின் முதலீடும்,எந்த ஒரு நாட்டின் அறிவுச் செல்வமும் இல்லாமலேயே சுமார் 20,00,000 ஆண்டுகளாக தன்னிறைவோடும்,சிறந்த மனிதப்பண்பாட்டோடும் வாழ்ந்து வருவது நம் தமிழினம் மட்டுமே!
தமிழினத்தின் அடையாளமாக இருக்கும் திருமந்திரத்திலிருந்து கொஞ்சம் பாடல்களையும்,விளக்கங்களையும் உங்கள் முன் வைப்பதில் பெருமை கொள்கிறோம்:
திருமூலர் வழங்கிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் கொண்டது;இருநூற்றி முப்பத்திரண்டு அதிகாரங்களை உடையது;மூவாயிரம் செய்யுள்(ஆதிகாலத்து பாடலின் பெயர்)களைக் கொண்டது என்று நாம் அறிந்திருந்தாலும்,நிஜத்தில் மூவாயிரத்து அறுபத்தொரு செய்யுள்களைக் கொண்டது.கூடுதலாக இருக்கும் செய்யுள்கள்,உரையாசிரியர்களால்(விளக்கமளித்த ஆசிரியர்கள்) எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.


திருமந்திரம் நூலில் ஒன்பது தந்திரங்களும்,இருநூற்றி முப்பத்திரெண்டு அதிகாரங்களையும் பேரின்பத்தினை துய்த்ததற்கரிய வழிகளாகிய சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய நான்கு நெறிகளை விளக்கி நிற்கிறது.


“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த் தேனே”
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்”
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்”
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”
“என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநான் றாகத் தமிழ்செய் யுமாறே”


மேலே கண்டுள்ள இவையும் இவை போன்ற பிறவும் திருமூலர் வழங்கியுள்ள திருமந்திரத்தில் தான் உள்ளன.


சிவனொடொக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடொப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன் ஓளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.


விளக்கம்:சிவபெருமானுக்கு ஒப்பாகும் தெய்வம் எங்கு தேடினும் இல்லை;அச் சிவனுக்கு நிகரானவர் யாவரும் இலர்;எல்லா உலகங்கட்கும் அப்பாற்பட்டுள்ளவன்.அச்சிவம் பொன் போல ஒளிவிடும் தீவண்ணம் போன்ற சடைமுடி உடையவன்.அவன் அன்பர்களின் மனத்தாமரையில் அமர்ந்திருப்பவன்.


ஓம்சிவசிவஓம் மந்திரத்தைப் பற்றிய திருமூலரின் விளக்கம்

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே (திருமந்திரம் 330)

இதன் பொருள்:கொடிய பாவத்தையுடையவர்கள் சிவசிவ என்று கூறாமல் இருக்கின்றனரே! சிவசிவ என்பதை முறையோடு(முன்னும் பின்னும் ஓம்காரம் சேர்த்து) கூறினால்,கொடிய பாவங்கள் ஒழியுமே!! சிவசிவ என்பதை (முறையோடு தொடர்ந்து)கூறி வந்தால் தேவர்கள் ஆகலாமே!!! சிவசிவ என்று கூறச் சிவகதியையும் அடையலாம்.

 நன்றி:தினம் ஒரு திருமந்திரம் எளிய அறிமுகம்,பக்கம்175.எளிய உரை: கண்ணப்ப முதலியார்,வெளியீடு:ராமையா பதிப்பகம்,சென்னை-14.


ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. நல்ல உபயோகமான தகவல் . நன்றி

    ReplyDelete