Thursday, October 11, 2012

இந்தியாவில் வால்மார்ட்டுக்கு பூச்செண்டு!!! வால்மார்ட் உருவான அமெரிக்காவிலோ “கல்தா”!!!!!!




அதுதான் விதியின் விளையாட்டு.முரண்களை வெளிப்படுத்திய விளையாட்டு.பிரதமர் மன்மோகன்சிங், வால்மார்ட் நிறுவனத்திற்கு சிகப்புக் கம்பளம் விரித்த அதே 2012,செப்டம்பர் 14 ஆம் தேதி அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயார்க் நகரம் வால்மார்ட் நிறுவனத்தினை மூட உத்தரவிட்டது;அது மட்டுமல்ல;அதே தினத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை இந்தியாவின் மத்திய அமைச்சரவை அனுமதித்த அதே தினத்தில்,பன்னாட்டு நிறுவனங்களின் தரகர்களாகச் செயல்பட்டு இந்திய அரசின் கொள்கைமுடிவில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், ‘சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் சிறு விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள்’ என்று உறுதி சொன்ன அதே தினத்தில், இணையதளச் செய்தித்தாளான அட்லாண்டிக் சிடிஸ், “பரவும் மரணம்;உள்ளூர் சிறு வணிகத்தினை அழிக்கும் வால்மார்ட் நிறுவனம்” என்ற தலைப்புச் செய்தி வெளியிட்டது.

இரு மாதங்களுக்கு முன்புதான், ஜீன் 30 இல் 10,000க்கும் மேற்பட்டோர் “வால்மார்ட் என்றால் வறுமை”(Please search at search engines Walmart means poverty)என்ற கோஷத்தினை எழுப்பி அமெரிக்காவின் பணக்கார நகரான லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் வால்மார்ட் கடைகளுக்கெதிராக ஊர்வலம் வந்தனர். “வால்மார்ட்டிற்கு இல்லை என்போம்”(SAY NO TO WALMART)என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதும் நடைபெறும் இயக்கமாகும்.

வால்மார்ட் மீது ஏன் இத்தனை தாக்குதல்?
உலகின் சக்தி வாய்ந்த சில்லரை வர்த்தக நிறுவனம் வால்மார்ட்.சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு இந்தியாவில் அனுமதிக்கப்பட அது அதிக அளவில் “செலவழித்துள்ளது”.கொள்கைத் தரகர்கள் இதனைக் கொண்டாடிவரும் வேளையில், அது பிறந்த அமெரிக்க மண்ணிலேயே அது தீண்டத்தகாததாகி விட்டது.அமெரிக்காவிலேயே ஏன் இந்த எதிர்ப்பு? “அது உள்ளூர் சந்தையை அழித்துவிடும்” என நியூயார்க் தொழிற்சங்கங்களும் உள்ளூர் சமூகங்களும் கூறுகின்றன.இதையேதான் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் ஆர்பாட்டம் செய்தவர்களும் கூறினார்கள். “வால்மார்ட்டிற்கு இதயமோ,ஒழுக்கக்கூறுகளோ,சமூக சிந்தனைகளோ ஏதும் இல்லை” என அவர்கள் கதறுகிறார்கள்.ஆனால்,அந்த ஊர் அரசியல்வாதிகளும்,நம்மூர்(இந்தியா) ஐக்கிய முற்போக்கு கூட்டணியினர் சகலைகள் போலும். கடந்த மார்ச்சில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் மன்றம்(முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன்) பெரிய வர்த்தகர்களுக்கு பல்வேறுகெடுபிடிகளை விதித்தது. ஆனால்,வால்மார்ட் நிறுவனத்திற்கு அந்தக்கெடு விதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் அனுமதி வழங்கியது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நினைவுக்கு வருகிறதா?

இருந்த போதிலும் ,ஐக்கிய முற்போக்கு கூட்டணி வால்மார்டிற்கும் அதன் போட்டியாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்குகின்றனர்.அவர்கள் சிறு விவசாயிகள் மற்றும் குறு வியாபாரிகள் விஷயத்தில் கனிவாக நடந்துகொள்வார்கள் என்கிறார்கள்;பல லட்சம் பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்கிறார்கள்.ஆனால்,அமெரிக்காவின் நிலவரம் அதற்கு மாறாக உள்ளது.

வால்மார்ட்,ஆகஸ்டின் என்னும் சிகாகோ நகரின் அருகில் உள்ள நகரில் 2006 இல் நுழைந்தது;2008 க்குள் 306 கடைகளுள் 82 மூடப்பட்டு விட்டன என்கிறது அட்லாண்டிக் சிடி இதழ்=பொருளாதார வளர்ச்சி காலாண்டிதழ்.வால்மார்ட் தடம் பதித்த இடங்களில் 35 முதல் 60 சதவீதம் வரை சிறு வணிக நிறுவனங்களின் மூடுவிழா நடக்கிறது என்கிறது.அதன் சுற்றுவட்டாரத்தில் 20% மருந்துக்கடைகளும்,15% வீட்டுச்சாமான்கடைகளும், 25% பொம்மைக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.அமெரிக்க ஆய்வுகள், ‘வால்மார்ட்டால் சிறு கடைகள் பாதிக்காது’ என்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொய்யினை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.வால்மார்ட் உருவாக்கும் 2 வேலைகளுக்கு 3 பேர்களின் வேலையினை அழிக்கிறது என்று நியூயார்க் வக்கில் சங்கம் தயாரித்த “வால்மார்ட்டின் பொருளாதாரத் தடங்கள்” என்ற ஆய்வு சொல்கிறது.
விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பது அடுத்த பொய்.வால்மார்ட் நேரடியாக பொருட்களை வாங்குவதில்லை என்ற உண்மையினை மறைக்கின்றனர்.அடுத்தடுத்து வரும் அறுவடை காலங்களில் அறுவடை செய்யப்படும் தானியங்களள அது ஊக முன் பேர வணிகத்தில் வாங்கி பொருட்களின் விலையை நிர்ணயிக்கிறது.மலிவான சீன பொருட்களை வாங்கி அமெரிக்காவின் உள்ளூர் தொழிலை அழிக்கிறது.எப்படி?
ஜனவரி 2007 இல் இருந்ததைப் போல ஏப்ரல் 2008 இல் அரிசியின் விலை அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டுமல்லாது உலகெங்கும் மூன்றுமடங்கு அதிகரித்தது.இது குறித்துக் கேட்டபோது அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் அவர்கள், “புதுப் பணக்காரர்களான இந்தியர்கள் அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்” என்று வேடிக்கையாக கூறினார்.ஆனால்,உண்மை என்ன?கலிஃபோர்னியா அரிசி இணையமும்,அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரிசி இணையமும் அரிசிக்கு கிராக்கி இருக்கிறது என்பதை மறுத்து, இருப்பு போதுமான அளவு இருக்கிறது எனக்கூறியதை “யு.எஸ்.ஏ.டுடே” மற்றும் சி.என்.என்.மேற்கோள் காட்டியிருந்தன.பின் எதனால் அரிசி விலையேற்றம்?

வால்மார்ட்டின் மொத்த விற்பனைப்பிரிவான “ஸாம்ஸ் க்ளப்” மிக அதிகளவில் அரிசி கையிருப்பினை பதுக்கி வைத்திருந்து,அரிசி விலையை ஏற்றியது என சி.என்.என்.கூறியது.அரிசியின் விலையேற்றத்திற்கு,அமெரிக்க விவசாயிகள்,ஊக வணிக வியாபாரிகளையும்,முன்பேர வர்த்தகச் சந்தைகளையும் குற்றம் சாட்டினார்கள்.உண்மை என்னவெனில்,அமெரிக்க விவசாயிகள் பண்ணைப்பொருட்களுக்கான ஊக வணிகத்தில் ஈடுபடவில்லை;

ஜனவரி 2008 இல் அமெரிக்க கோதுமை தானிய முன்பேர வர்த்தகத்தில் 40% பங்கு கொண்டிருந்த முதலீட்டு நிதியங்கள் தங்கள் பங்கினை ஏப்ரல் 2008 க்குள் 60% அளவிற்கு உயர்த்திக்கொண்டு விட்டார்கள்.முன்பேர வணிகத்தில் 2007 ஆரம்பத்தில் ஒரு கிலோ 4 டாலருக்கு விற்ற கோதுமை,2008 ஏப்ரல் மாதத்தில் 14 டாலராக உயர்ந்துவிட்டது.தனது அறுவடடயினை ஊக வணிகத்தில் விற்ற அமெரிக்க விவசாயி நஷ்டமடைந்தான்.ஆனால்,அதே முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்ட வால்மார்ட் அதிக லாபமடைந்தது.ஊக வணிகத்தில் ஈடுபடாமல் இருந்த ஒரு சில விவசாயிகளும் மலிவான விலையில் பெருமளவு தானியத்தை வாங்கி வைத்திருந்த வால்மார்ட்டிற்கு அதிக விலையில் தனது தானியத்தை விற்க முடியவில்லை;

இதை மற்றொரு கோணத்திலும் ஆராயலாம்.வால்மார்ட்டிடமிருந்து நல்ல விவசாயினை அமெரிக்க விவசாயி பெறுகிறான் என்றால் அமெரிக்க அரசு தனது மக்கள் தொகையில் 2% மட்டுமே இருக்கும் விவசாயிக்கு ஆண்டு தோறும் 20 பில்லியன் டாலர்(ஒருபில்லியன் டாலர் சுமார் 4500 கோடி ரூபாய்கள்)மானியம்  ஏன் வழங்க வேண்டும்?அதே போல் ஐரோப்பிய யூனியனும் தமது மக்கள் தொகையில் 5% மட்டுமே இருக்கும் தனது விவசாயிகளுக்கு 74.5 பில்லியன் டாலர்களை மானியமாக ஏன் ஆண்டு தோறும் வழங்க வேண்டும்? அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் அனுபவங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீட்டிற்கு நியாயம் கற்பிக்கும் மூன்றுபொய்களின் சாயத்தினை வெளுக்க வைக்கின்றன.
அந்நிய முதலீட்டினால் 12 கோடி சில்லறை வியாபாரக்குடும்பங்கள் பாதிப்படையும்.விவசாயிகளுக்கும் அது உதவாது.வேலை வாய்ப்பினை குறைக்கும்;அதனிலும் மேலாக,கிராமப்புற உணவுப்பாதுகாப்பினையே அது அழிக்கும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரு வேறு அறிக்கைகளே-“திட்டக்குழு செயல்குழுவின் 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மை” என்ற தலைப்பிலான அறிக்கை மற்றும் உணவு பற்றிய பாராளுமன்ற நிலைக்குழுவின் 19 வது அறிக்கை;வால்மார்ட் விவசாயிகளுடன் கொள்ளும் நேரடித் தொடர்பு மூலம் இந்திய விவசாயிகள் வளமடைவார்கள் என்ற அரசின் பொய்யினை ஏற்கவில்லை; “5.9 கோடி விவசாயக்குடும்பங்கள் அதாவது 39 கோடி கிராம மக்கள் சராசரியாக ஐந்து ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான விளைநிலங்களையே கொண்டிருக்கிறார்கள்.(அமெரிக்காவில் சராசரி இதைப்போல 250 மடங்கு; ஆஸ்திரேலியாவில் இதைப்போல 4000 மடங்கு மற்றும் அதற்கும் அதிகமான மடங்கு).இவர்களது விளைச்சலில் 60%,கிராமத்திற்குள்ளாகவோ,பண்டமாற்றாகவோ அல்லது விவசாயக்குடும்பங்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களால் நுகரப்பட்டோ செலவாகிறது.மீதமுள்ள 40% மட்டுமே வெளியே வர்த்தக சந்தைகளுக்கு செல்கிறது.அமைப்பு ரீதியாக வலுவுள்ள திறமையான வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இவ்விளைச்சலில் ஒரு சிறிய அளவிற்கு கொள்முதல் செய்தாலும்,கிராமப்புறத்தில்,நகர்த்து விலைவாசி நிர்ணய முறை ஏற்பட்டு,அதிக விலை காரணமாக கிராமப்புற உணவுப்பாதுகாப்பு அழியும்.அதனால்,கிராமத்தில் உள்ளவர்களில் மூன்றில் இரண்டு பேர் பாதிப்படைவார்கள்” என்று அந்த அறிக்கைகள் கூறுகின்றன.
மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையில் இயங்கும் திட்டக்குழு அறிக்கை ஒன்று, “ சிறு  விவசாயிகள் இன்னும் பல காலத்துக்கு நிலைத்து இருப்பார்கள்” என்று வருத்தப்பட்டுக் கொள்வதோடு, “அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஒட்டு மொத்த பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும்” என்று சலித்துக்கொள்கிறது. ஆனால்,சிறு விவசாயி என்பவன் இந்நாட்டுக்கு வீண் அல்ல; அவன் மிகவும் திறமையானவன்.அவனது உற்பத்தித் திறன் பெரு விவசாயிகளை விட 33% அதிகம்.சிறு விவசாயிகள் மொத்த விளைநிலங்களில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்குப்பயன்படுத்தி 41% விளைச்சலைப் பெற்றுத்தருகிறான்.11 கோடி டன் பாலை உற்பத்தி செய்கிறான்.அவர்களூக்குப்பதிலாக பெருவிவசாயிகள் வந்தால்,இந்திய தேசத்தின் மொத்த உணவு உற்பத்தியில் 7% சரியும்.சிறு மற்றும் பெரு தொழில்களில் காணப்படும் உற்பத்தித்திறன் வேறுபாடு வேளாண்மைத் தொழிலுக்குப்பொருந்தாது என சமீபத்திய  உலகளாவிலான ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியிருப்பதை சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அறிய மாட்டார்கள்.வேளாண்மையைப்பொருத்த வரையில் சிறு விவசாயிகள் தான் அதிகத் திறனுடையவர்களாக இருக்கிறார்கள்.


நீதி: விவசாயிகளின்,வியாபாரிகளின் கல்வியறிவின்மையை காரணம் காட்டி சீர்திருத்தவாதிகள் இந்திய நாட்டிற்குத் துரோகம் இழைக்கிறார்கள்.அவர்கள் “சீர்திருத்தவாதிகள்” என்ற புகழும்,பெயரும் பெற இந்தியாவின் தேச நலனையும்,கோடிக்கணக்கான அப்பாவி இந்தியர்களின் தினசரி வாழ்க்கையையும்  பலிகொடுக்கிறார்கள்.இவர்கள் சீர்திருத்தவாதிகளா? அல்லது சீரழவுவாதிகளா?


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள்:22,23,24;வெளியீடு அக்டோபர் 2012

No comments:

Post a Comment