Wednesday, January 4, 2012

மனிதப் பிறவியின் நோக்கம் என்ன ?

மனிதப் பிறவியின் நோக்கம் என்ன ?



நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இருந்து இந்த பதிவு. ஏதாவது புத்தகத்திலிருந்து எடுத்தாளப் பட்டதா ? அவரது சொந்த கருத்தா தெரியவில்லை. நல்லதொரு தகவலாக இருப்பதால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..

மனிதனாகப் பிறந்தவனுக்கு பலவித சுக, துக்கங்கள் உண்டு. இவைகளை அனுபவித்தே ஆக வேண்டும். இப்படி அனுபவிப்பதற்காகவே ஏற்பட்டதுதான் மனைவி, மக்கள், குடும்பம் எல்லாம். இவைகளெல்லாம் இல்லை என்றால், அவனவன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு போய் விடுவான். அதனால் தான், மனிதனை சம்சார சாகரத்தில் சிக்க வைக்கிறார் பகவான். ஆனால், இதில் சிக்கிக், சுற்றிச் சுற்றி எவ்வளவு காலம் தான் வருவது? இதிலிருந்து மெதுவாக கழன்று, விடுதலை பெற்று பகவானை அடைய முயற்சி செய்ய வேண்டாமா? இந்தப் பிறவிப் பிணியைப் போக்கிக் கொள்ள வேண்டாமா?

பகவானை அடைவது அவ்வளவு சுலபமல்ல. ஆசாபாசங்கள் மனிதனை, பகவான் பக்கம் போக விடாமல் இழுக்கிறது; அதையும் மீறித் தான் போக வேண்டும். ஒரு ஜென்மாவில் இல்லா விட்டாலும், அடுத்தடுத்து வரும் ஜென்மாக்களிலும், இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஒருவன் ஒரு ஊருக்குப் போகப் புறப்படுகிறான். ஒரு நாளைக்கு 10 கி.மீ., நடக்கிறான். இருட்டி விட்டது. அந்த ஊரில் இரவு தங்கி, மறுநாள் காலையில் நடக்க ஆரம்பிக்கிறான். மறுபடியும் ஒரு 10 கி.மீ., தூரம் நடந்து, இன்னொரு இடத்தை அடைகிறான். அங்கே தங்கி, மறுநாள் நடக்க ஆரம்பிக்கிறான்.
இப்படி சில நாட்கள் நடந்து, நடந்து ஒருநாள் இவன் போக வேண்டிய இடத்தை அடைந்து விடுகிறான்.

அதுபோல, பகவானை அடைய, நற்கதி பெற ஒரே ஜென்மாவில் முடியாது. அடுத்தடுத்த ஜென்மாவிலும், இடைவிடாமல் முயன்று கொண்டே இருந்தால், ஏதோ ஒரு ஜென்மாவில் இந்தப் பிறவிப் பிணி தொலைந்து, அவனை அடைந்து விடலாம்.

அப்படி இல்லாமல், முதல் நாள் 10 கி.மீ., நடந்து, மீண்டும் வீட்டுக்கே திரும்பி வந்தால், இவன் போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேர மாட்டான். அதுபோல, குடும்ப பாசங்களிலிருந்து விடுபட்டு பக்தி செய்து கொண்டே ஒவ்வொரு ஜென்மாவை கடந்து, காலம் வரும்போது அவனடி சேர வேண்டும்.
வண்டியில் கட்டிய மாடு, போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேரும்; செக்கில் கட்டிய மாடு நாள் முழுவதும் நடந்தாலும், செக்கையே தான் சுற்றிச் சுற்றி வரும். அதுபோல பகவானை நோக்கி போய்க் கொண்டிருக்க வேண்டும். செக்கு மாடு மாதிரி குடும்பத்தையும், மனைவியையுமே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தால், விமோசனம் ஏது? அதற்காக குடும்பம், மனைவி, மக்கள் என்றால் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதல்ல!

அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்துகொண்டே , இறைவனை தேடுதலையும் ஒரு கடமையாகக் கொள்ளுங்கள். அதற்க்கு முதலில் உங்கள் ஆத்மாவை அறியவேண்டும். அதன் பிறகு உங்கள் பிறவியின் நோக்கம் உங்களுக்கு புலப்படும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibm3qPEDoGYLM3u-LNNq9ImZChW38dk66a1NM3KyF5sR-8J-Lp7rIqo-VBSbAIuFn7QvEtlljWjF0CLPMa_zQdOBQtxgWX3-SJVnoJkG_ff3rsw19z6Fd8FX4-6hFG1Pfs_1mq04eoS-s/s320/mookambika-thumb1.png

குடும்ப பாரம் ஒருபக்கம் இருக்கட்டும்; அவர்களுக்காகவே பாடுபட்டு காலத்தை கழிக்க வேண்டாம். இகலோக சுகம் இங்கே கிடைக்கும்; பரலோக சுகம் என்பது அங்கே கிடைக்கும். இங்கே கிடைப்பது நிரந்தரமானதல்ல; அங்கே கிடைப்பது தான் நிரந்தரமானது; நித்யமானது ஒன்றுக்கு முயற்சி செய்யாமல், அநித்யமானதுக்கு ஆசைப்பட்டு வாழ்நாளை வீணாக்க வேண்டுமா?

பெரியோர், மகான்கள், மறுபிறவி என்றாலே நடுங்குகின்றனர். விஷயம் புரியாமலா பயப்படுகின்றனர்? ஏதோ பாதாம் அல்வாவும், பஜ்ஜியும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதா நித்ய சுகம்! பகவானை அடைந்து விட்டால், பசியும் கிடையாது; தாகமும் கிடையாது. அவனுக்கு கைங்கரியம் செய்து கொண்டே சுகப்படலாமே!

முயற்சி செய்யுங்கள், ஏதோ ஒரு ஜென்மாவிலாவது பலன் கிடைக்கும்!

அரை வேக்காட்டு / போலி சாமியார்களை விட்டுத்தள்ளுங்கள். பெரிய , பெரிய ரிஷிகள், சித்தர்கள் , முனிவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் போலே இருப்பது ஒரு அற்புத அனுபவம் தான். நம் ஆன்மாவும் , முடிவில் அதைத்தான் நாடுமோ ? இறைவனை அடைவதுதான் இறுதி என்றால்... இன்றிலிருந்தே இறை வழிபாட்டையாவது தொடங்குவோமே..!
!



No comments:

Post a Comment