Wednesday, January 25, 2012

தி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற்கை உணவு அங்காடி


கொடைக்கானலில் 18 ஆண்டுகளாக இயற்கை உணவு அங்காடியை நடத்திவருகின்றனர் ஸ்ரீகாந்த் சந்தியா தம்பதியினர்.ஸ்ரீகாந்த் அவர்களின் தாயார் மாலதி ராம் கொடைக்கானலில் இவர்களின் இயற்கை விவசாயப்பண்ணையை நிர்வகித்துவருகிறார்.

இயற்கை உணவு அங்காடியாளர் திரு.ஸ்ரீகாந்த் அவர்களின் பேட்டி:-
? உங்களுக்கு இயற்கை உணவு அங்காடியை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

!! நான் நகரங்களில் தான் வசித்து வந்துள்ளேன்.அபார்ட்மெண்டுகளில் வாழ்ந்த போதிலும் கத்தரி,வெண்டை,தக்காளி போன்றவற்றை தொட்டிகளிலும் வாளிகளிலும் வளர்த்துள்ளேன்.நாம் விளைவித்த காய்கறிகளை நாமே சமைத்து உண்பது அலாதி இன்பம் தரக்கூடியது.இயற்கை விவசாயம் என்பது எனது ரத்தத்திலேயே ஊறியுள்ளது.
நான் கொடைக்கானலில் படித்துள்ளேன்.எனது தந்தையார் கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள் மலையில் 25 ஏக்கர் நிலம் வாங்கி சாகுபடி செய்துவந்தார்.21 ஏக்கரை விற்றுவிட்டோம்.இப்போது 4 ஏக்கரில் மட்டும் சாகுபடி செய்துவருகிறோம்.

? உங்கள் தோட்டத்தில் எவற்றையெல்லாம் பயிரிட்டுள்ளீர்கள்?

!! பிளம்ஸ், பேரிக்காய்,ஆரஞ்சு,மலைவாழை,அவக்கடோ ஆகியவற்றுடன் காபியும் பயிர் செய்துள்ளோம்.எங்கள் வீட்டைச் சுற்றி அரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில் காய்கறி சாகுபடி செய்துள்ளோம்.

?விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்கிறார்களா?

!! விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.வருங்கால தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட தயக்கம் காட்டிவருகின்றனர்.ஆனால்,கேற்கத்திய நாடுகளில் இப்படிப்பட்ட நிலை இல்லை;அங்கெல்லாம் உழைப்பின் கவுரவத்தை மதிக்கிறார்கள்;அங்கீகரிக்கிறார்கள்;நாமும் வேளான்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

? ரசாயன கலப்பற்ற இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

!! சிறுவயதில் எனக்கு இயற்கையின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு.மரங்களையும்,செடிகளையும் கொடிகளையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருப்பேன்.ராபர்ட் ரோடேல் எழுதிய ஆர்கானிக் கார்டனிங், லட்சுமண் சர்மா எழுதிய நேச்சர் க்யூர், ரேச்சல் கார்சன் எழுதிய சைலன்ஸ் ஸ்பிரிங் ஆகிய புத்தகங்களை நான் ஆர்வத்துடன் படித்துள்ளேன்.இந்தப் புத்தகங்கள் என் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தின என்று கூட சொல்லலாம்.

? நீங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் வேளாண்மையில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தீர்களா?

!! நான் எலக்ட்ரானிக்ஸ் துறையில் மிகவும் ஈடுபாடு உடையவன்.பிலானியில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நான் சேர்ந்து படித்தேன்.ஆனால்,சில காரணங்களால் அந்தப் படிப்பை நிறைவு செய்ய முடியாமல் போய்விட்டது.கொடைக்கானலுக்கு வந்து என் தந்தையாருடன் சேர்ந்து தோட்டத்தை கவனித்துக் கொண்டேன்.விவசாய நாட்டம் ஒரு போதும் குறையவில்லை;என் தந்தையாரின் மறைவிற்குப் பிறகு நானும் எனது தாயாரும் தோட்டத்தை கவனித்து வந்தோம்.திருமணத்திற்குப் பிறகு எனது மனைவியும் எங்களோடு சேர்ந்து தோட்டத்தை கவனித்து வருகிறார்.

? உங்கள் மனைவியும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்தானா?

!! அவர் ஐதாராபாத்தில் படித்தவர். விவசாய பின்னணி கொண்டவர் கிடையாது. ஆனால் என்னை மணந்து கொண்ட பிறகு அவருக்கு உண்மையிலேயே விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது.இப்போது நாங்கள் அனைவரும் விவசாயத்தை கவனித்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்ற நிலை காணப்படுகிறது.

? கொடைக்கானலில் உங்களுக்கு தோட்டம் இருக்கிறது.வீடும் இருக்கிறது. அதனால் கொடைக்கானலில் இயற்கை உணவு அங்காடியை நீங்கள் அமைத்தீர்கள்.ஆனால், சென்னையில் இயற்கை உணவு அங்காடி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட ஏதேனும் பிரத்யேக காரணம் உள்ளதா?

!! சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாவாக வரும் பலர் எங்களது கடைக்கு வந்துள்ளனர்.இயற்கை உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.அவற்றின் தரம் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர்.கொடைக்கானலில் உள்ளதைப்போல சென்னையிலும் நீங்கள் இயற்கை உணவு அங்காடியை ஏன் தொடங்கக் கூடாது? என்ற கேள்வி கேட்டனர்.அவர்களது விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில்தான் சென்னை பெசண்ட் நகரில் இயற்கை உணவு அங்காடியான தி எக்கோ நட் ஆரம்பித்தேன்.

? இங்கு பல்வேறு வகையான இயற்கை உணவுகளை விற்பனை செய்து வருகிறீர்கள்.இவற்றை எப்படி கொள்முதல் செய்கிறீர்கள்?

!! இயற்கை உணவுகளை சப்ளை செய்வதற்கென்றே சில அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புக்களின் வாயிலாக இயற்கை உணவுகளை கொள்முதல் செய்கிறோம்.எங்கள் தோட்டத்தில் விளைந்தவை;எங்கள் நன்பர்கள் தோட்டத்தில் விளைந்தவை ஆகியவற்றையும் விற்பனை செய்துவருகிறோம்.

? இயற்கை உணவு அங்காடிக்கு சென்னை மக்களிடையே அமோக வரவேற்பு இருக்கிறதா?

!! ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 60 பேர் வரை எக்கோ நட்டுக்கு வருகிறார்கள். இதுவே திருப்திகரமானது என்றுதான் நான் நினைக்கிறேன்.இந்தக் கடைக்கு விளம்பரம் எதுவும் கொடுத்ததில்லை; சில பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அங்கு பணிபுரிபவர்கள் எடுத்துக்கொண்ட முன்முயற்சியின் காரணமாக எங்கள் கடையைப் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.கடையின் வாடிக்கையாளர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.இங்கு கிடைக்கின்ற பொருட்கள் தரமானவை.இதை வாடிக்கையாளர்கள் தங்களது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறார்கள்.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கிறார்கள்.

?எந்த வகையான உணவுப் பொருட்கள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன?

!! முழு கோதுமை ரொட்டி,பல்வேறு தானிய ரொட்டி என எண்ணற்ற வகையான ரொட்டிகளை விற்பனை செய்துவருகிறோம்.வேர்க்கடலை,வெண்ணெய்,எள் எண்ணெய் போன்றவற்றிற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. எந்த வித ரசாயனமும் சேர்க்கப்படாத கேக் வகைகளையும்,பிஸ்கட் தினுசுகளையும் விற்பனை செய்து வருகிறோம்.எதற்கும் வெள்ளைச் சர்க்கரையை பயன்படுத்துவதில்லை;வெல்லத்தையே பயன்படுத்தி வருகிறோம்.கைகுத்தல் அரிசி, அவல்,பருப்பு வகைகள்,பயிறுகள்,பாதாம் பருப்பு,வால் நட்,முந்திரிப்பருப்பு போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறோம்.இவற்றுக்கெல்லாம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.விலை சற்று அதிகம்தான் என்ற போதிலும் பொருட்கள் தரமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் எங்களிடம் தொடர்ந்து உணவுப்பொருட்களை வாங்கி வருகிறார்கள்.
10 சப்பாத்திகள் கொண்ட தொகுப்பை ரூ.36/-க்கு விற்பனை செய்கிறோம்.இந்த சப்பாத்திகள் ஒரு மாதம் வரைக்கும் கெட்டுப்போகாது.வாடிக்கையாளர்கள் இதை மிகுந்த விருப்பத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.

? ஜீஸ்,ஜாம் போன்றவற்றுக்கு வாடிக்கையாளர்களிடையே எத்தகைய வரவேற்பு உள்ளது?

!! ஆப்பிள் ஜீஸ்,பைனாப்பிள் ஜீஸ் மற்றும் பல்வேறு வகையான ஜாம்களை விற்பனை செய்து வருகிறோம்.இவற்றுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

? இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவை இன்னும் பிரபலப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

!! ரசாயன விவசாயத்திற்கு அளிக்கப்படுகின்ற முக்கியத்துவம் இயற்கை விவசாயத்திற்கு அளிக்கப்படுவதில்லை;ஏனென்றால் ரசாயன உர ஆலை முதலாளிகள் கவனிக்க வேண்டியவர்களை கவனிக்கும் முறையில் கவனித்து விடுகிறார்கள்.இயற்கை விவசாயிகளால் இப்படி கவனிக்க முடியாது.பல்வேறு நோய்களுக்கு அடிப்படைக் காரணம், ரசாயன விவசாயம் தான்.ரசாயனக் கலப்புள்ள உணவுப்பொருட்கள் மனிதர்களின் ஆரோக்கியத்தை சிதைத்து வருகின்றன.இதிலிருந்து மக்களை மீட்க வேண்டுமானால் இயற்கை விவசாயத்திற்கும்,இயற்கை உணவுக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்களும் இயற்கை விவசாயத்தை ஆதரிக்க வேண்டும்.இயற்கை உணவையே சாப்பிடுவோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

? கொடைக்கானலில் உள்ள உங்கள் விவசாயப்பண்ணைக்கு அடிக்கடி செல்ல நேரம் கிடைக்கிறதா?

!! மாதம் ஒருமுறை ,எப்படியாவது கொடைக்கானலில் உள்ள விவசாயப்பண்ணைக்குச் சென்று விடுவேன்.இதேபோல எனது மனைவியும் கொடைக்கானலில் உள்ள தோட்டத்துக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.சென்னையில் நாங்கள் இருந்தாலும் எங்களது நினைவுகள் கொடைக்கானலில் உள்ள தோட்டத்தையே வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன.

? சென்னையில் வேறு இடங்களில் உங்கள் இயற்கை உணவு அங்காடி கிளைகளை திறக்கும் எண்ணம் ஏதேனும் உள்ளதா?

!! ஸ்மால் இஸ் பியூட்டிபுல் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.சென்னையில் இந்த ஒரு கடை மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.வேறு இடங்களில் கிளைகளைத் தொடங்க விருப்பம் இல்லை;தோட்டத்தைக் கவனிக்க வேண்டும்;இந்தக் கடையை கவனிக்க வேண்டும்;யோகா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இவற்றுக்கே நேரம் சரியாகிவிடுகிறது.எனவே,அகலக்கால் வைக்க விரும்பவில்லை.

நன்றி:விஜயபாரதம் 2011 தீபாவளி மலர் புத்தகம் 1,பக்கம்106,107 மற்றும் 109.

No comments:

Post a Comment