Thursday, January 12, 2012

வேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20




சதிக்கு விலை போன மேக்ஸ்முல்லர் பாகம்-1

ஆராய்ந்து எழுதியவர் டாக்டர்.எம்.எல்.இராஜா.ஈரோடு

 நமது பாரதத்திரு நாட்டின் வரலாற்றில், ஐரோப்பியர்களால் புகுத்தப்பட்ட  தவறுகள், நமது தொன்மையைக் குறைத்துவிட்டன.பண்டைய கிரேக்க நூல்களில் The Classical Accounts of India ஒரு சில இடங்களில் காணப்பட்ட சேண்ட்ரோகோட்டஸ் என்ற பெயர், மகத மன்னர் சந்திரகுப்த மவுரியரைத் தான் குறிக்கிறது என்ற அனுமானம், ஐரோப்பியர்கள் நம் நாட்டு வரலாற்றில் புகுத்திய முதன்மையான,அடிப்படையான தவறு ஆகும்.இதுவே நம் நாட்டு வரலாற்றின் ஆதாரத்தூண்(Cheet Anchor) என்று அவர்களால் கூறப்பட்டது.ஆனால்,உண்மையில் இது Cheet Anchor அல்ல; Cheat Anchor(ஏமாற்றுத்தூண்) என்பதை நாம் ஆதாரங்களுடன் பார்த்தோம்.இக்கருத்துக்கு உறுதியான சான்றாகக் காட்டப்பட்ட மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க நாட்டுப் பயணியின் குறிப்புகள்(மெகஸ்தனிஸின் இண்டிகா), மிகவும் பொய்யானவை;நம்பகத்தன்மை சிறிதும் அற்றவை என்பதை விரிவாகப் பார்த்தோம்.மேலும் இந்த வில்லங்கத்தை விதைத்த ஆங்கில நீதித்துறை அதிகாரி வில்லியம் ஜோன்ஸ், இந்த வில்லங்கத்தை வளர்த்த கலோனல் வில்போர்டு மற்றும் ஏ.ஏ.வில்சனின் குறிப்புகள்,தவறுகளும் முரண்பாடுகளும் நிறைந்தவை என்பதையும் பார்த்தோம்.இதுபோன்று ஐரோப்பியர்கள் புகுத்திய இந்திய வரலாற்றுத்தவறுகளின் உண்மையான பரிமாணத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், ஆர்யபட்டரின் கால நிர்ணயத்தில் அவர்கள் செய்த அநீதியை ஆதாரத்துடன் பார்த்தோம்.அடுத்ததாக,இந்த தவறான ஆதாரத்தூணை நிறுவியதில்,மேக்ஸ்முல்லரின் பங்கையும்,அதற்காக அவருக்குத் தரப்பட்ட பயனையும் பார்ப்போம்:

மேக்ஸ் முல்லர்:

ப்ரீட்ரிக் மேக்ஸ்முல்லர்(Friedrich Maxmuller,1823 to 1900) ஜெர்மன் நாட்டவர்.17,18 ஆம் நூற்றாண்டுகளில்,ஜெர்மனியர்களுக்கு அளவுகடந்த  ஸமஸ்க்ருத பற்றுதலும்,பாரத நாட்டுக் கலாச்சாரத்தின் மீது மிகுந்த மரியாதையும் இருந்தன.உதாரணமாக,ஒன்றுபட்ட ஜெர்மனி நாடு உருவாகியதில்,அடிப்படைப் பணிகள் செய்த ப்ரீட்ரிக் ஹெகெல்(George whilelm Friedrich Hegel,1770 to 1831), “ஜெர்மனியர்கள் பாரதத் தத்துவத்தின் நேரடி சீடர்கள்” என்றே குறிப்பிட்டார்.ஹெகலைப் பின்பற்றியவர்கள் ‘ஹெகேலியன்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.இவர்களே ஒன்றுபட்ட ஜெர்மனி நாடு (ப்ரஸ்ஸியா=Prussia) உருவாகியதில் பெரும்பங்கு வகித்தனர்.ஆகவே, ஸ்மஸ்க்ருதம் மற்றும் பாரதத்தின் மீதான பற்றுதல்,மதிப்பு ஆகியவையே ஒன்றுபட்ட ஜெர்மனி, 1871 இல் உருவானதற்கு அடிப்படைக் காரணம் என்று கருதப்படுகிறது.இதனாலேயே கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1863 முதல் 1867 வரை இருந்த ஆங்கிலேயரான ஹென்றி ஜேம்ஸ்(Henry James Summer Meine,1822 to 1888) இதைப் பற்றிக்குறிப்பிடும்போது, “A Nation born out of Sanskrit”(ஸம்ஸ்க்ருத மொழியால் பிறந்த ஒரு தேசம் ஜெர்மனி) என்று கூறினார்.ஐரோப்பாவில் இவ்வாறு நேர்மறை விளைவால்(Possitive Effect) உருவானது ஜெர்மனி மட்டுமே!பிற ஐரோப்பிய தேசங்கள் அனைத்தும் ஒன்றின் எதிர்ச்செயல் விளைவால்(Negative and Opposite Effect)உருவானவையே!!

இக்கால கட்டத்தில் ,தமது ஸ்ம்ஸ்க்ருத பற்றுதல் காரணமாக,ஜெர்மனியர்கள் ஸம்ஸ்க்ருத மொழியை ஓரளவு கற்று வந்தனர்.இவ்விதமாக ஸமஸ்க்ருதத்தை அரைகுறையாகக் கற்றவர்தான் மேக்ஸ்முல்லர்.மேலும்  இக்கால கட்டத்தில் மேக்ஸ்  முல்லர் போதிய பொருளாதார வசதிபெற்றிருக்க வில்லை;ஆகவே,பொருள்வளம் தேடி, 1846 இல் அவர் இங்கிலாந்துக்கு வந்தார்.ஏனென்றால், கி.பி.1850களில் இங்கிலாந்தும்,பிரான்ஸீம் உலகில் பல இடங்களில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தி,அந்த நாடுகளைச் சுரண்டி சற்றே வளத்துடன் இருந்தன.ஆனால்,ஜெர்மனி ஒரு நாடாகவே அப்போது உருவாகியிருக்கவில்லை.பொருள் வளம் வேண்டி இங்கிலாந்து வந்த மேக்ஸ் முல்லர், 1854 இல் மெக்காலே என்ற ஆங்கிலேய  அதிகாரியை லண்டனில் சந்தித்தார்.

மெக்காலே:

தாமஸ் பேபிங்டன் மெக்காலே(Thomas Babington Macaulay,1800 to 1859) என்ற ஆங்கிலேயர்தான்,தவறுதலாக இன்றைக்கும் நம் நாட்டில் பின்பற்றப்படும் கல்வி முறையை,நம் நாட்டில் புகுத்தியவர்.இவர் 1800 இல் இங்கிலாந்தில் ஒரு சாதாரணகுடும்பத்தில் பிறந்தார்.கல்லூரிப்படிப்புக்குப்  பின் அரசியலில் ஈடுபட்டு, 1830 களில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.ஆனால்,தந்தை வாங்கிய கடன்,போதிய வருமானமின்மை இவற்றின் காரணமாக,மிகப் பெரிய பொருளாதார சரிவில் மெக்காலே சிக்கிக் கொண்டார். மேலும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இவரது வாதம் காரணமாக,அரசியலிலும் இவருக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.இதனால்,கல்லூரிப்படிப்பின்போது தனக்குக் கொடுத்த கேம்பிரிட்ஜ் தங்க மெடலைக் கூட விற்க நேர்ந்தது.எழுத்துக்கள் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டே வாழ்க்கை நடத்த நேர்ந்தது.

இந்த கஷ்டகாலத்தில்,இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நமது நாட்டைப் பற்றி ஒரு சட்டம்,(Govt.of India Act 1833) கொண்டுவரப்பட்டது.அதன்படி,கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் கவுன்சிலில்,சட்ட உறுப்பினர் பதவி ஒன்று ஏற்படுத்தப்பட்டது.வறுமையில் வாடிய மெக்காலேவிற்கு அந்தப் பதவியைத் தர  ஆங்கில அரசு முன்வந்தது.ஆண்டுக்கு 10,000 பவுண்டுகள்(இங்கிலாந்து நாட்டு பணம்) என்று சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.வறுமை மற்றும் அன்றாடச்செலவுகளுக்கே எழுத்துக்கள் மூலம் கிடைத்த வருமானம் போதாத நிலை,இவற்றின் காரணமாகவும்,,ஐந்து ஆண்டுகளில் செலவு போக 30,000 பவுண்டுகள் மீதம் செய்ய இயலும் என்பதாலும்,மெக்காலே இந்த வேலையை ஏற்றுக்கொண்டார்.1834 இல் பாரதம் வந்த மெக்காலே, 1838 வரை நம் நாட்டில் இருந்தார்.

மெக்காலேவின் நோக்கம்:

பாரதத்தைச் சுற்றிப் பார்த்த மெக்காலே, பாரதத்தைப் பற்றிய தனது குறிப்புகளை,1835 இல் ஆங்கில அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்.அதில்,
“நான் பாரதத்தில் குறுக்கிலும் நெடுக்கிலும் பயணம் செய்துள்ளேன்.ஒரு பிச்சைக்காரனையோ,ஒரு திருடனையோ நான் பார்க்கவில்லை;அவ்வளவு செல்வச் செழிப்பையும்,உன்னத குணங்கள் கொண்டுள்ள மனிதர்களையும் இந்த நாடு பெற்றுள்ளது.இப்படிப்பட்ட ஒரு தேசத்தை,நாம் வென்று ஆள முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை;இது சாத்தியம் ஆகவேண்டுமானால், இந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள ஆன்மீகக் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைக்க வேண்டும்.இதற்காக இந்த நாட்டின் தொன்மையான கல்வி முறையை,கலாச்சாரத்தை நீக்கி,புதுமுறையை புகுத்த வேண்டும்.
இதன்மூலம் வெளிநாட்டு மற்றும் ஆங்கிலேயரின் வழிமுறைகள்,தமது நாட்டு வழிமுறைகளை விட உயர்ந்தவை என்ற எண்ணம்,பாரத மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.இதனால்,பாரத மக்கள் தமது சுயமதிப்பு(சுயமரியாதை),மரியாதை மற்றும் சொந்தக் கலாச்சாரத்தை இழந்து,ஆங்கிலேயர்களால் ஆளப்படுகின்ற நாடாக,உண்மையிலேயே மாறிவிடுவார்கள்”என்பது ஆகும்.

தங்களைத் தாங்களே அதிமேதாவிகள்(Elite) என்று கூறிக்கொண்டு, ஆங்கிலேய வெள்ளை வெளிநாட்டு மோகத்தால்,ஆங்கிலேயர் முறைகளைப் போற்றிப் பின்பற்றுகிற நம் நாட்டவர் பலரை நாம் இன்றும் காணும்போது,மெக்காலே கண்ட கனவு வீண் போகவில்லை என்பதை உணர்கிறோம்.ஆம்,மெக்காலே மட்டும் இன்று உயிரோடு இருந்திருப்பாரானால்,இந்த ‘மெக்காலே புத்திரர்களைப்’ பார்த்து மிகுந்த திருப்தியும் மகிழ்வும் அடைந்திருப்பார்.

மெக்காலே கல்வி முறை:

மேற்கூறிய தனது முடிவை நடைமுறைக்குக் கொண்டுவர கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரலிடம்,ஆங்கிலேயர் ஆட்சி நீடிக்கவும்,கிறிஸ்தவ மதமாற்றம் நன்கு நடக்கவும்,இந்த புதுகல்வித்திட்டத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி,நம் நாட்டில் தனது கல்விமுறையை மெக்காலே புகுத்தினார்.அதுவரை பயிற்றுமொழியாக இருந்துவந்த ஸ்மஸ்க்ருத மொழிக்குப் பதிலாக,ஆங்கிலத்தை மெக்காலே கொண்டுவந்தார்.கணிதம்,விஞ்ஞானம் அனைத்தும் மேற்படிப்பில் ஆங்கிலம்  மூலமாக மட்டும் கற்பிக்க மெக்காலே ஆணையிட்டார்.இதனால் விஞ்ஞானம் படிப்பவர்களுக்கு ஸமஸ்க்ருதம் தெரியாமல் போனது.ஸம்ஸ்க்ருதம் படிப்பவர்களுக்கு விஞ்ஞானம் தெரியாமல் போனது.ஒரு மாணவர்,ஒரு சேர ஸம்ஸ்க்ருதமும்,விஞ்ஞானமும் கற்றுக்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.இதனால் நம் நாட்டின் அறிவுப்பொக்கிஷமான புராதனமான ஸம்ஸ்க்ருத நூல்களில் காணப்பட்ட விஞ்ஞான விஷயங்கள் புதிய மாணவர்களுக்குத் தெரியாமல் போனது.இதன் மூலம்,விஞ்ஞானம் என்பது புத்திசாலிகளான ஐரோப்பியரின் சாதனை என்றும்,நமது முன்னோர்களாகிய இந்துக்கள் விஞ்ஞானத்தை அறிந்திருக்கவில்லை என்றும்,ஒரு தவறான எண்ணம் ஏற்படத்துவங்கியது.இவ்விதமாக,ஐரோப்பியர் மீது உயர்ந்த மதிப்பும்,நமது முன்னோர்களைப் பற்றி தாழ்வான கருத்தும்,நம் நாட்டின் மாணவர்கள் மனதில் ஏற்பட வழிவகுக்கப்பட்டது.மெக்காலேவின் சூது,நயவஞ்சகம்,நரித்தனம் நிறைந்த நெடுநோக்குத் திட்டங்களுக்கு இது ஒரு மிகச் சரியான எடுத்துக்காட்டு ஆகும்.

பாரதத்தில் தான் புகுத்திய ஆங்கில அடிமைக் கல்வியைப் பற்றி, தனது தந்தைக்கு 12.10.1836 இல் கல்கத்தாவிலிருந்து ஒரு  கடிதம் மெக்காலே எழுதினான்.அதில் அவன், “ஆங்கிலக் கல்வி கற்ற எந்த ஒரு ஹிந்துவும் முழுமையான ஹிந்துவாக இருக்கமாட்டார்.மேலும் இந்தக் கல்வித்திடாம் தொடர்ந்தால்,அடுத்த 30 ஆண்டுகளில் வங்காளத்தின் மதிப்புமிக்க குடும்பங்களில்,ஹிந்து தெய்வச்சிலைகளை வணங்குபவர் ஒருவர் கூட இருக்கமாட்டார்.அதாவது அனைவரும் ஹிந்து மதத்தை விட்டுவிட்டு கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிவிடுவார்கள்” என்பது ஆகும்.மேலும் அவன், “We must at present do our best to form a class,who may be interpreters between us and the millions whom we govern,in opinion mrals and intellect” என்றும் கூறியுள்ளான்.இதன் பொருள், “இவ்வாறு ஆங்கிலக்கல்வி கற்ற பாரத நாட்டைச் சேர்ந்தவர்கள்,ஆள்கிற ஆங்கிலேயருக்கும், ஆளப்படுகிற பாரத மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர்களாகவும்,சிந்தான முறையில் ஆங்கிலேயரின் அடிவருடிகளாகவும் இருப்பார்கள்” என்பது ஆகும்.ஆகவே மெக்காலே கல்வித்திட்டம் மிகவும் பாதகமான நோக்கம் கொண்டது. அது இன்றளவும் படுபாதகமான விளைவுகளை,நம் நாட்டில் ஏற்படுத்தி வருகின்றது.

அடுத்த திட்டம்:

மெக்காலே 1838 இல் இங்கிலாந்து சென்றான்.இதன் பின்,பாரதத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நீடித்து,கிறிஸ்தவ மதமாற்றம் நன்கு நடைபெற,தனது அடுத்த திட்டத்தை  துவக்கினான்.இதன்படி,பாரதத்தின் தொன்மையான புனித மத நூல்களின் பெருமைகளைக் குறைத்து,அவை மூடநம்பிக்கைகள்,முரண்பாடுகள் மற்றும் தவறுகள் மலிந்தவையாகத் திருத்திக் காட்டுகிற தவறான ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட முடிவெடுத்தார்.இந்த தவறான ஆங்கில மொழிபெயர்ப்பையே பாரதத்தின் மாணவர்களுக்குக் கற்பிக்கவும் ஆவன செய்ய விரும்பினான்.இதனால் பாரத மக்களின் மனதில் தனது மதம்,மத நூல்கள் பற்றி ஒரு தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி,அதன் மூலம் கிறிஸ்தவ மதமாற்றம் படுவேகமாக நடைபெற வழிவகுத்தான்.இதற்காக அரைகுறையாக சமஸ்க்ருதம் தெரிந்த, அதே நேரத்தில் தனது இந்த பாவகரமான(நரித்தனமான) செயலுக்கு உடன்படக்கூடிய ஒரு ஐரோப்பியரைத் தேட ஆரம்பித்தான்.ஏறக்குறைய 15 ஆண்டுகளாக நீநீநீண்ட தேடல் முயற்சிக்குப்பின்னர்,மெக்காலே மேக்ஸ்முல்லரை,1854 இல் லண்டனில் சந்தித்தான்.தொடர்ந்து சிந்திப்போம்.

நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 23,24;அக்டோபர் 2011.




1 comment:

  1. ஹிந்துக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு

    ReplyDelete