Thursday, January 12, 2012

கர்ணனின் மறுபிறவி!

எவ்வளவோ தானம் செய்த கர்ணன், தனது வாழ்நாளில் எவருக்கும் அன்னதானம் மட்டும் செய்ததில்லை. இறந்தபின் சொர்க்கத்தை அடைந்தான் கர்ணன். அங்கிருந்தவர்கள், பசி, தாகம் எதுவுமின்றி இருந்தனர். ஆனால், கர்ணனுக்கு மட்டும் பசித்தது. எவரிடம் கேட்டும் உணவு கிடைக்கவில்லை. கடைசியில் நாரதரைக் கண்டு, எனக்கு மட்டும் ஏன் பசிக்கிறது ? எனக் கேட்டான். கர்ணா. உன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்து சுவை ! என்றார் நாரதர். கர்ணனும் அப்படியே செய்தான். பசி தீர்ந்தது. ஆனால், வாயிலிருந்து விரலை எடுத்தவுடன் மீண்டும் பசித்தது. நாரதரிடம் காரணம் கேட்டான் கர்ணன். அவர், தானத்தில் சிறந்தது அன்னதானம். ஆனால், நீ உன் வாழ்நாளில் எவருக்குமே அன்னதானம் செய்ததில்லை. ஒரு முறை துரியோதனன் வீட்டில் அன்னதானம் நடந்தது. அப்போது பசியால் வாடிய ஒருவனுக்கு நீ அன்னதானம் நடக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டினாய். அந்தப் புண்ணியம் உன் ஆள்காட்டி விரலில் தொற்றியுள்ளது. அதனால் அதைச் சுவைத்ததும் பசி நீங்குகிறது ! என்றார். அதனால் கர்ணன், அன்னதானம் செய்வதற்காக மறுபிறவி எடுக்க விரும்பினான். அதற்காக சிவனிடம் வரம் பெற்றான். அந்த மறுபிறப்பே சிறுத்தொண்ட நாயனார். அன்னதானத்தின் மகிமையை உலகுக்கு உணர்த்தவே சிவன், வீரசைவ அடியாராக வந்து, பிள்ளைக் கறி கேட்டு சிறுத்தொண்டருக்கு அருள் புரிந்தார்

No comments:

Post a Comment