Sunday, January 29, 2012

இந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தரங்கில் பெருமிதம்


சென்னை: ""அக்னி ஹோமம், கூட்டுப் பிரார்த்தனை போன்ற, இந்து சமயத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் அறிவியல் பூர்வமானவை'' என, தியோசோபிக்கல் சொசைட்டியின் தலைவர் செல்வராஜ் கூறினார்.

பூரண தத்துவ சபையின் சார்பில், "விஞ்ஞானம் - ஆன்மிகம் - சமூக சேவை' எனும் தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நேற்று துவங்கியது. சபையின் நிறுவனர் சத்தியநாராயணன் வரவேற்றார். கருத்தரங்கை, பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார்.

"அறிவியல் கோட்பாடுகளுக்கு பின்னுள்ள சமய உண்மைகள்' எனும் தலைப்பில், தியோசோபிக்கல் சொசைட்டியின் தலைவர் செல்வராஜ் பேசியதாவது: உடல்நலம் குன்றிய ஒருவர், பூரண குணமடைய வேண்டுமென்ற எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப் பிரார்த்தனை நற்பலனை தருகிறது. இதற்கு, பிரார்த்தனை செய்வோரின் நேர்மையான எண்ண அலைகள் முக்கிய காரணம் என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். சைவ சமயத்தின் முக்கிய குறியீடான ருத்ராட்சம் அணிவதால், மன அமைதி, தொழில் முன்னேற்றம், நிர்வாக பண்பு, படைப்பாற்றல் உள்ளிட்ட 21 வகை பயன்கள் கிடைக்கிறது. இதற்கு அதிலிருந்து வரும் மின்காந்த அலைகளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

அரச மரம், ஆலமரம் ஆகியவற்றின் சிறு குச்சிகள், வரட்டி, நெய் ஆகியவற்றை, பிரமீட் வடிவ செப்பு பாத்திரத்தில் போட்டு, தினமும் சூரிய உதயம் மற்றும் அஸ்தன நேரத்தில், யாகம் செய்ய வேண்டும். அப்போது அதிலிருந்து வெளிவரும் வாயுக்கு, எதிர்மறை எண்ண அலைகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. தம் வீட்டில், "அக்னி ஹோமம்' செய்து வந்த குறிப்பிட்ட குடும்பத்தின் உறுப்பினர்கள், போபால் விஷ வாயு சம்பவத்தில் பாதிக்கப்படாத நிகழ்வு இதற்கு சிறந்த உதாரணம். இப்படி, அக்னி ஹோமம், கூட்டுப் பிரார்த்தனை போன்ற, இந்து சமயத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் அறிவியல் பூர்வமானவை. இவ்வாறு செல்வராஜ் பேசினார்.

தொல்லியல் துறை முன்னாள் தலைவர் தியாக.சத்தியமூர்த்தி, "தொல்லியலும், விஞ்ஞானமும்' எனும் தலைப்பில் பேசும்போது, ""பெருவழுதி என்ற, சங்கால பாண்டிய மன்னன் வெளியிட்ட நாணயத்தில், அசுவமேத யாகத்தை விவரிக்கும் வகையில், குதிரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் பழமைமிக்க கோவில்கள், சிற்பங்கள், சிலைகள், கல்வெட்டுகள் ஆகியவை, நம் வேதங்களில் சொல்லப்பட்ட செய்திகளை உணர்த்துகின்றன. இவற்றின் பெருமையை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் பணியை எங்களின், "ரிச் பவுண்டேஷன்' செய்கிறது,'' என்றார்.
நன்றி:தினமலர் 29.1.12

No comments:

Post a Comment