Monday, August 30, 2010

சிலிர்த்தெழும் இந்தியா:சம்பவம் 2

ராணுவ அதிகாரிக்கு விசா தர மறுத்த சீனாவுக்கு இந்தியா பதிலடி




















புதுடில்லி : இந்திய ராணுவத்தின் வட பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ஜாஸ்வாலுக்கு விசா வழங்க, சீன அரசு மறுத்துவிட்டது. அவர் காஷ்மீரில் சர்ச்சைக்குரிய பகுதியில் பணியாற்றுவதால், தங்கள் நாட்டிற்கு வரக்கூடாது என தெரிவித்துள்ளது. சீன அரசின் இந்தச் செயல், இந்திய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக, சீன அதிகாரிகள் இருவரின் இந்திய விஜயத்திற்கு அனுமதி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.














கடந்த ஜனவரி மாதம் இந்திய- சீன ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, ராணுவ ரீதியான பரிமாற்றங்களின் அடிப்படையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பரஸ்பரம் மற்ற நாட்டிற்குச் செல்வது என, சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய ராணுவத்தின் வட பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ஜாஸ்வாலை சீனாவுக்கு அனுப்ப, ராணுவத் துறை முடிவு செய்தது. ஆனால், அவருக்கு விசா வழங்க சீன அரசு மறுத்துவிட்டது. "பதட்டம் நிறைந்த, சர்ச்சைக்குரிய ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஜாஸ்வால் வருவதால், அவருக்கு வழக்கமான விசா வழங்க முடியாது. காஷ்மீரில் இருந்து வருவோருக்கு மாறுபட்ட விசா தான் வழங்க வேண்டும்' என, தெரிவித்துள் ளது. மேலும், ஜாஸ்வாலுக்குப் பதிலாக வேறு ராணுவ அதிகாரியை அனுப்புங்கள் என்றும் கூறியுள்ளது.














சீன அரசின் இந்த மறுப்பால், ஜாஸ்வால் அங்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. சீன அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ள இந்திய அதிகாரிகள், சீன ராணுவ அதிகாரிகள் இருவரின் இந்திய விஜயத்திற்கு அனுமதி தருவதை நிறுத்தி வைத்துள்ளனர். தேசிய ராணுவக் கல்லூரியில் சில பயிற்சிகளை மேற்கொள்வதற்காக அவர்கள் வருவதாக இருந்தது.














இந்த விவகாரம் பற்றி இந்திய வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறுகையில், ""சில காரணங்களால் ஜாஸ்வால் சீன பயணம் மேற்கொள்ள முடியவில்லை; அது பற்றி விரிவாக சொல்ல முடியாது. இருந்தாலும், இந்த விஷயத்தில் இந்தியாவின் கவலையை சீன அரசு உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த விவகாரம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன,'' என்றார். ஜெனரல் ஜாஸ்வால் இது பற்றி பேசுகையில், ""எனது சீன பயணம் தற்போதைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது; அதற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை,'' என்றார்.














அந்தோணி பதில்: இந்நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியதாவது: ராணுவ அதிகாரியின் சீன விஜயத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்நாட்டுடனான ராணுவ உறவுகளை துண்டித்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. சீனாவுடன் நாம் மிக நெருங்கிய வகையில் செயல்பட்டு வருகிறோம். இருந்தாலும், அவ்வப்போது சில பிரச்னைகள் தோன்றுகின்றன. இந்த குறுகிய கால பிரச்னைகள் எல்லாம் சீனாவுடனான ஒட்டு மொத்த அணுகுமுறையில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அந்தோணி கூறினார். இந்திய ராணுவ அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்ததை, அரசியல் கட்சிகள் பல கடுமையாக விமர்சித்துள்ளன. "இது இந்தியாவுக்கு அவமானம். இந்தப் பிரச்னையில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசின் அதிருப்தியை சீனாவிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளன.



No comments:

Post a Comment