Friday, October 22, 2010

சதுரகிரியின் பெருமைகளும்,பெரியமகாலிங்கம் என்ற திருக்கையிலாயமும்


சதுரகிரியின் பெருமைகள்

விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அமைந்திருப்பது வத்றாப் ஒன்றியம் ஆகும்.இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தின் பெயர் தாணிப்பாறை ஆகும்.வத்ராப்பிலிருந்து காலையிலும் மாலையிலும் நகரப்பேருந்து வசதி தலா ஒருமுறை இருக்கிறது.ஆட்டோ வசதி 24 மணிநேரமும் வத்ராப்பில் கிடைக்கிறது.

தாணிப்பாறையிலிருந்து மலைக்காட்டுப்பாதை வழியாக 5 மணிநேரம் பயணித்தால் வருவதே சதுரகிரி.இந்த 5 மணிநேரத்தில் நான்கு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும்.

தாணிப்பாறையிலிருந்து புறப்பட்டால் எண்ணெய்க்குடம் பாறை,அத்தி ஊற்று,கோரக்குண்டா,இரட்டை லிங்கம்,சின்னப்பசுக்கடை,நாவல் ஊற்று,பெரியபசுக்கடை,பிலாவடி கருப்பசாமி கோவில் என்ற இடங்களைக் கடந்துசென்றால் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தைச் சென்றடையமுடியும்.

சதுரகிரி பூலோகத் திருக்கையிலாயம் என்றழைக்கப்படுகிறது.

அத்திஊற்றிலிருந்து மலைப்பாதை நேர்செங்குத்தாக அமைந்திருக்கிறது.அந்த இடத்தில் ஓரிடத்தில் ஆங்கில எழுத்தான எஸ் வளைவில் பாதை வளைந்து செல்லுகிறது.லேசாக எட்டிப்பார்த்தோமானால் கீழே கிடுகிடு பாதாளம் தெரியும்.எப்படியும் சுமார் 2000 அடி கீழே தெள்ளிய ஓடை ஒன்று ஓடும்;அந்த நேர்குத்துப் பாதையைக் கடந்ததும்,ஒரு பசுவின் காலடித்தடம் தென்படும்;அதுவே காமதேனுவின் பாதத்தடம் ஆகும்.அதை வழிபட்டு சிறிது தூரம் சென்றதும்,ஒரு பெரிய மலைச்சமவெளியைக் காணலாம்.நாம் போகும் மலைப்பாதையிலிருந்து சுமார் 50 அடி கீழே இறங்கிட வேண்டும்.அப்படி இறங்கினால்,அமைந்திருப்பதுதான் கோரக்குண்டா!

இங்கே இயற்கையாகவே ஒரு கால்பந்து அளவுக்கு பல பள்ளங்கள் இருக்கும்;இந்தப் பள்ளத்தில் கோரக்கர் மூலிகை மருந்துகளையும்,மதுவையும் தயாரித்ததாகச் சொல்லுவார்கள்.

கோரக்குண்டாவில் ஒரே நேரத்தில் நூறு பேர்கள் குளிக்குமளவுக்கு அருவியும்,சுனையும்,குளமும் அமைந்திருக்கிறது.ஒவ்வொரு அமாவாசையன்றும் அருள்மிகு காளிமுத்துசுவாமிகள் ஆசிரமத்தினைச் சேர்ந்தவர்கள்காலை 10 மணி முதல் 12 மணிக்குள் தேன்,தினைமாவினால் ஒரு சிவலிங்கம் செய்து சிவமந்திரங்கள் சொல்லி வழிபட்டு,பூஜையின் முடிவில் அந்த சிவலிங்கத்தையே மீண்டும் மாவாக்கி அருட்பிரசாதமாக வழங்கிவருகின்றனர்.

கோரக்குண்டாவைக் கடந்ததும் ரெட்டைலிங்கம் வரும்;இந்தப்பாதை ஓரளவு அகலமான பாதையாக அமைந்திருக்கிறது.

போகர் 7000 என்ற புத்தகத்தில் சதுரகிரி மலைப்பிராந்தியத்தை போகர் பாடல்களாகவே விவரித்துள்ளார்.தாணிப்பாறையில் ஆரம்பித்து,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் வரையிலும் இருக்கும் மலைப்பகுதிகளை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறார்.

உதாரணமாக அத்தி ஊற்றிலிருந்து தென்கிழக்கே அம்பெய்யும் தூரத்தில் கண்வர் மகரிஷி ஆசிரமம் அமைந்துள்ளது.அந்த ஆசிரமத்தின் முன்பக்கத்தில் எப்போதும் சந்தனம் வாடை கமழும்;

கண்வர் மகரிஷி ஆசிரமத்திலிருந்து மேற்கே கூப்பிடுதூரத்தில் அகத்தியரின் காட்டேஜ்போன்ற தங்குமிடம் அமைந்திருக்கிறது என புராதன லேண்ட் மார்க்காகவே போகர் பாடியிருக்கிறார்.

சதுரகிரிசுந்தரமகாலிங்கத்திலிருந்து மூன்று மணிநேரம் மலைப்பகுதிக்குள் பயணித்தால் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்;

சதுரகிரி சுந்தரமகாலிங்கத்திலிருந்து காலை 5.30 மணிக்கு அங்குள்ள மலைவாசிப் பளியர்கள் வழிகாட்டிடப் புறப்பட்டால்,மதியம் 1 மணிக்குள் பெரிய மகாலிங்கத்திற்குச் சென்றுவிடலாம்;திரும்பவும் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்திற்கு வர மாலை 6 மணியாகிவிடும்.அதே சமயம் அந்த ஒழுங்கற்ற மலைப்பகுதியில் காலை 5.30 முதல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்;அப்படிச்சென்றால் மட்டுமே பெரிய மகாலிங்கத்துக்குச் சென்றடைய முடியும்.வழியில் ஏராளமான பலவிதமான பழத்தோப்புக்கள் இருக்கின்றன.

பெரும்பாலானவர்களுக்கு பெரிய மகாலிங்கம் இருப்பதே தெரியாது;கேள்விப்பட்டு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்றேஇதுவரை தெரியவில்லை;சித்தர்களும் சிவபெருமானும் வசிக்கும் இடமே இந்த பெரியமகாலிங்கம்தான் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.அந்த பெரியமகாலிங்கத்தின் அடையாளமே ஆயிரம் ஆண்டுகளுக்குக் குறையாத ஆலமரம் ஒன்று அங்கே இருக்கின்றது.அதன் விழுதுகள் ஐந்தாக விரிந்து ஒரு ஐந்துதலை நாகம் போல் மிகப் பரந்தப்பரப்பை தன்னுள் வைத்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரின் வட கிழக்கே ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது.அதன் பெயர் திருவண்ணாமலை;நிஜப்பெயர் திரு வண்ணான்மலை.அந்தக் கோவிலையொட்டி ஒரு சதுரகிலோ மீட்டருக்குள் தென் மேற்குத் திசையில் ஒரு குன்று அமைந்திருக்கிறது.அதற்கு நரிப்பாறை என்று பெயர்.அந்த நரிப்பாறையின் பின்புறம் ஒரு குகை அமைந்திருக்கிறது.ஒரே நேரத்தில் சுமார் 20 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய அளவுக்கு அந்த குகை அமைந்திருக்கிறது.இந்த குகைக்கு முற்காலத்தில் ஆதிசங்கரர் வந்திருக்கிறார்.இந்த குகையிலிருந்து ஓராள் நுழையுமளவுக்கு ஒரு குகைப்பாதை போகிறது.இந்த குகை சதுரகிரிக்குச் செல்லுவதாக செவிவழிச்செய்திகள் இருக்கின்றன.

இந்தக் காலத்திலும் நரிப்பாறையின் குகைக்குள் ஓரிரவு யாராலும் தங்கிட முடியாது;ஆத்ம பலம் உள்ளவர்கள் மட்டுமே தங்கி சித்தர்களை தரிசிக்க முடியுமாம்.

No comments:

Post a Comment