Wednesday, January 30, 2013

அறுபடைவீடும்,கந்தன் வழிபாடும்!!!


பழநி:

தண்டம் ஏந்தி  கோவணம் புனைந்து ஆண்டிக் கோலத்திலே
அருள் தரும் முருகன் அழகாய் நின்றான் ஆவினன் குடியாமே
பழமே வேண்டி பரமனைப் பிரிந்து பதமாய் நின்றிடவே
ஞாலம் எங்கும் ஞானம் நல்கும் பழனித் திருத்தலமே.

திருச்செந்தூர்

சூரன் முதலாய் அசுரரை வென்று தேவரைக் காத்திடவே
சூர சம்ஹாரம் செய்தான் முருகன் கடற்கரை ஓரத்திலே
சேவல் கொடியுடன் மயில்வா கனனன் காணும் திருக்கோலம்
காண்போர் கண்ணில் கண்ணீர் மல்கும் செந்தில் நகராமே.

திருப்பரங்குன்றம்

தெய்வ யானையை கந்தன் மணந்த தெய்வத் திருத்தலம்
பரங்கிரிநாதர் ஆவுடை நாயகி அம்பாள் அருள் கமழும்
தமிழகம் காணும் அறுபடை வீட்டில் முதலாம் படை வீடு
குடவரைக் கோவிலில் குமரன் திகழும் பரங்குன்றம் நகராமே

திருத்தணி

சூரரை வென்ற முருகன் சினமே தணிந்த திருத்தலமே
தணிகை மலையில் அமர்ந்தான் முருகன் தவமே இயற்றிடவே
குறத்தி வள்ளியை குகன் கைப்பிடித்த குன்றம் நகராமே
திருப்படி தோறும் திருநீறு மணக்கும் திருத்தணி  மலையாமே

சுவாமி மலை

பிரணவப் பொருளை முருகன் சிவனுக்கு உணர்த்திய திருத்தலமே
தகப்பன் சாமியாய் அழகன் அருளும் சுவாமி மலையாமே
கோவில் நகராம் கும்பகோணத்தில் திகழும் படைவீடு
திருவே ரகமே என்னும் பெயர் பெற்ற அழகிய திருத்தலமே

பழமுதிர்சோலை

சுந்தரமாக முருகன் நின்ற ஆறாம் படைவீடு
சுடராய் சுப்பிர மணியாய் அருள்வான் சோலை மலைமீது
அன்பாய் அருளாய் திகழும் முகத்தில்  புன்னகை  நீங்கா து   
அழகாய் முருகன் அருளும்  தலமே இதுபோல் வேறேது ...

No comments:

Post a Comment