Wednesday, January 30, 2013

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-3


நரேனும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் கைரேகை பார்த்துக் கொள்வார்கள். எல்லாம் விளையாட்டுதான்! நரேன்தான் கைரேகை நிபுணர்! தன் கையிலுள்ள ஏதாவது ரேகை ஒன்றைக் காட்டி, இதோ பாருங்கள், இந்த ரேகை இருப்பதால் நான் துறவியாவேன் என்பான். இப்படித் தம்மிடம் தாத்தா ஒருவர் கூறியிருப்பதாகவும் தெரிவிப்பான். நரேன் நீ துறவியானால் நாங்களும் துறவிகளாகி விடுவோம் என்று நண்பர்கள் கூறுவார்கள். அந்த அளவிற்கு நண்பர் மனதில் இடம் பிடித்திருந்தான் அவன்.
நரேன் தனது பாட்டனாரான துர்க்கா பிரசாதின் சாயலை ஒத்திருந்தான். பாருங்கள், நானும் ஒருநாள் என் தாத்தாவைப் போல் சன்னியாசி ஆகிவிடுவேன் என்று தன் நண்பர்களிடம் கூறுவான்.
எல்லா தெய்வங்களிலும் நரேனுக்கு மிகவும் பிடித்திருந்தது சிவபெருமானைத்தான். அனைத்தையும் துறந்து, தியாகத்தின் வடிவமாக அவர் வீற்றிருப்பது அவனது மனத்தை மிகவும் கவர்ந்தது. சில வேளைகளில் அவனும் துணிகளை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு திரிவான். புவனேசுவரியின் மனத்தை இது நெருடும், எங்கே இவனும் இவனது தாத்தாவை போல் துறவியாகி போய்விடுவானோ! என்று கவலை கொண்டார் அவர். நரேன் என்ன இது? இது என்ன கோலமடா? என்று கேட்டார்.
'நான் சிவனாகிவிட்டேன், பார் நான் சிவனாகி விட்டேன். 'நானே சிவன்' என்றான் நரேன். அவன் தெரிந்து சொன்னானோ, தெரியாமல் சொன்னானோ! ஆனால் மிகவும் உயர்நிலை மந்திரமான 'நானே சிவன்' (சிவோஹம்) என்பதை அந்தக் குழந்தைப் பருவத்திலேயே சொன்னான் அவன்!
மாடியறையிலுள்ள சிவபெருமானின் முன்னால் சென்று அமரும் போதெல்லாம் நரேனுக்குத் தன் தாயார் அடிக்கடி கூறுகின்ற வார்த்தைகள் நினைவுக்கு வரும். தமது பூதங்களில் ஒன்றை சிவபெருமான் வெளியில் துரத்தி விட்டதாகவும், அந்தப் பூதம்தான் என்றும் அவர் குறிப்பிட்டது அவனை மிகவும் சிந்திக்கச் செய்தது; 'அப்படியானால் நான் ஏதோ குறும்பு செய்ததற்காக, ஏதோ தவறு செய்ததற்காக சிவபெருமான் என்னை அனுப்பிவிட்டாரா? என்று அவன் மனத்தில் சந்தேகமும் தவிப்பும் எழும்.
உடனே தாயிடம் ஓடிச் சென்று, 'அம்மா ஏனோ தெரியவில்லை. நான் எப்போதோ துறவியாக இருந்திருப்பேன் என்று தோன்றுகிறது. தவறுகள் செய்யாமல், குறும்புகள் செய்யாமல் இருந்தால் சிவபெருமான் மீண்டும் என்னை ஏற்றுக் கொள்வாரா?' என்று கேட்டான். அதற்கு நரேனின் கேள்வி புவனேசுவரியின் மனத்தை உறுத்தியது. 'இவனும் சிவபெருமானை நாடி, துறவியாகி விடுவானா?' என்ற சிந்தனை அவருள் எழுந்தது. 'அப்படி நடப்பதற்கில்லை. அதுபற்றியெல்லாம் சிந்திக்கின்ற வயது இவனுக்கில்லை என்று தெளிந்தார் அவர்.

No comments:

Post a Comment