Monday, August 6, 2012

வேத மந்திரம் முழங்க இந்து பெயரை சூடிய 23 வாடிகன்(கிறிஸ்தவத் தலைமையக நாட்டின்) பிரஜைகள்


புதுச்சேரி: புதுச்சேரி, கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், இந்தாலி நாட்டைச் சேர்ந்த 23 நபர்கள், தங்கள் பெயரை இந்து பெயராக மாற்றிக் கொண்டனர்.

இத்தாலி நாட்டின் வாடிகன் நகரை சேர்ந்தவர் ப்ளாவியோ, 35. இவருடன் மேலும் சிலர், சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தனர். தஞ்சாவூர், திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழமையான கோவில்களுக்குச் சென்றனர். அப்போது, இந்து மதத்தின் மீதும், வேத மந்திரங்களைக் கற்பதிலும் ப்ளாவியோவிற்கு ஆர்வம் ஏற்பட்டது.வேதம் கற்பதற்காக, இன்டர்நெட்டில் தேடியபோது, புதுச்சேரியைச் சேர்ந்த ராஜா சாஸ்திரி குறித்து தெரிந்து கொண்டார். 2001ம் ஆண்டு, ராஜா சாஸ்திரியை அணுகி, தங்களுக்கு வேத மந்திரங்களை கற்றுத் தருமாறு, கேட்டுக் கொண்டார். ராஜா சாஸ்திரி, இத்தாலிக்குச் சென்று, ப்ளாவியோ குழுவினருக்கு மூன்று மாதங்கள் வேத மந்திரங்களைக் கற்றுக் கொடுத்தார். வேத மந்திரங்களைக் கற்பதற்காக, ப்ளாவியோ குழுவினர் மது, மாமிச உணவைத் துறந்தனர். ப்ளாவியோ குழுவினர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், மேலும் மந்திரங்களைக் கற்றுத் தேர்ந்தனர்.
இந்நிலையில், ப்ளாவியோ, தனது பெயரை இந்து பெயராக மாற்ற விரும்பினார். அவர் தனது குழுவினருடன் சில நாட்களுக்கு முன் புதுச்சேரி வந்தார். தனது ஆசை குறித்து, ராஜா சாஸ்திரியிடம் தெரிவித்தார். இதையடுத்து, ப்ளாவியோ உள்ளிட்ட 23 நபர்களின் பெயர்களை, இந்து கடவுள்களின் பெயராக மாற்றும் நிகழ்ச்சி புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் நேற்று நடந்தது. அதையொட்டி, கோ பூஜை, சிவ யாகம் நடத்தப்பட்டது. ராஜா சாஸ்திரி முன்னிலையில், வேதமந்திரங்கள் முழங்க சிவதீட்சை என்ற மந்திர உபதேசத்தை, ப்ளாவியோ உள்ளிட்ட அனைவரும் பெற்றுக் கொண்டனர். ப்ளாவியோ தனது பெயரை சிவானந்தம் எனவும், அவரது மனைவி ஸ்டெபானியா, சாவித்திரி எனவும் பெயரை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து குழுவில் இடம் பெற்ற அனைவரும் தங்கள் பெயரை இந்து பெயராக மாற்றிக் கொண்டனர். இது குறித்து ப்ளாவியோ கூறுகையில், "நாங்கள் சுற்றுலாவிற்காக, இந்தியா வந்தோம். பல இடங்களில் உள்ள கோவிலுக்கு சென்றபோது, இந்து மதம் எங்களைக் கவர்ந்தது. நாங்கள் வேதங்களைக் கற்றுக் கொண்டோம். எங்கள் பெயரை இந்து பெயராக மாற்ற ஆர்வம் ஏற்பட்டதால், தற்போது பெயரை மாற்றியுள்ளோம்' என்றார்.thanks:dinamalar

No comments:

Post a Comment