Monday, January 25, 2010

அமெரிக்காவின் குசும்பு;


சீனா அச்சுறுத்தல்: அமெரிக்காவின் இரட்டை வேடம்
வெள்ளி, 22 ஜனவரி 2010( 11:42 IST )


இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர் இராபர்ட் கேட்ஸ், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியை சந்தித்தப் பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியதையும், சீனப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சர்வதேச உறவுகளில் அமெரிக்கா வெற்றிகரமாகப் போட்டுக்கொண்டிருக்கும் இரட்டை வேடம் பளிச்சென்று தெரியும்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சருடன், “இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு நிலை குறித்தும், சீனா இராணுவம் நவீனமயப்படுத்துவதும், அந்நாடு தனது இராணுவ பலத்தை பெருக்கிக்கொள்வதன் நோக்கம் குறித்தும் பேசியதாக” இராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சீனா ஒரு இராணுவப் பெரும் சக்தியாக உருவெடுப்பது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கவலையளிக்கக் கூடியதாகும் என்றும் கூறியுள்ளார்.

சீனா இராணுவ பெருக்கம் குறித்து அந்நாட்டுடன் இந்தியா பேச வேண்டும் என்றும் ஆலோசனை அளித்ததாகக் கூறுகிறார்.

இந்திய, சீன எல்லையில் எண்ணிடங்கா ஊடுவல், அருணாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் செல்வதற்கு எதிர்ப்பு, பிரதமரின் அலுவலக கணினிகளில் உள்ள தகவல்களை எடுக்கும் முயற்சி என்று சீனத்திற்கு இந்தியாவிற்கும் இடையே சிக்கல் நிறைந்த ஒரு சூழலில் டெல்லி வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர், அமெரிக்கா இந்தியாவிற்கு ஒரு முக்கியமான இடத்தைத் தந்துள்ளது போல, “ தெற்காசியாவிலும், உலக அளவிலும் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்களில் இந்தியா ஒரு நங்கூரமாக இருந்து வருகிறது” என்று புகழ்ந்துள்ளார்.


WD
இராபர்ட் கேட்ஸ் கூறிய வார்த்தைகளையும், சீனப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஹூ ஜிந்தாவோவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் வாசகங்களுடன் ஒப்புட்டுப் பார்த்தால் அமெரிக்கா போடும் இரட்டை வேடம் தெளிவாகத் தெரியும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி ஒபாமாவும் ஹூ ஜிந்தாவோவும் வெளியிட்ட அந்தக் கூட்டறிக்கையில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் இதுதான்: “. The U.S. side reiterated that it welcomes a strong, prosperous and successful China that plays a greater role in world affairs”. இதன் பொருள்: “உலக விவகாரங்களில் பெரும் பங்கு வகிக்கும் அளவிற்கு வலிமையான, செழுமையான, வெற்றிகரமான நாடாக சீனா இருக்க வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது”.

கூட்டறிக்கையில் இவ்வாறு கூறியது மட்டுமல்ல, தெற்காசியாவில் அமைதி ஏற்படுத்த சீனா...
உதவிட வேண்டும் என்றும், இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட சீனா உதவ வேண்டும் என்று ஒபாமா கேட்டுக் கொண்டார் என்ற செய்தியும் வந்தது. அவ்வளவுதான் கொதித்தெழுந்தது டெல்லி. “தனது அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள இந்தியாவிற்கு எந்த மூன்றாவது நாட்டின் தலையீடும் அவசியமல்ல” என்று அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் உடனடியாக அறிக்கை விடுத்துக் கண்டித்தார்.

சீனா வலிமையாக இருக்க வேண்டும், உலக விவகாரங்களில் அதன் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும், தெற்காசியாவின் அமைதியில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றெல்லாம் கூறிவிட்டு, இப்போது, சீனா தனது இராணுவத்தை நவீனப்படுத்துவதும், பலப்படுத்துவதும் அச்சுறுத்தலே என்று அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் இந்தியாவில் வந்து கூறுவது ஏன்?

உலக விவகாரங்களில் சீனாவின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்று பீஜிங்கில் சீன அதிபரோடு நின்றுகொண்டு ஒபாமா அறிக்கை வெளியிடுகிறார். டெல்லி வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர், உலக மற்றும் தெற்காசிய மண்டலத்தின் பாதுகாப்பில் இந்தியா நங்கூரமாக இருக்கிறது என்று கூறிகிறார்!

சீனாவிற்குப் போனால் அந்நாட்டை மையப்படுத்தி, பெருமைபடுத்திப் பேசுவது, டெல்லிக்கு வந்தால் இந்தியாவை பெருமைப்படுத்தி பேசுவதா? இதற்குப் பெயர்தான் இராஜதந்திரமா?

சீன இராணுவம் நவீனமயமாக்கலையும், பலப்படுத்துதலையும் குறித்து இந்தியா பேச வேண்டும் என்று ஆலோசனை கூறும் அமெரிக்கா அதைச் செய்யலாமே?

பயங்கரவாத அணுகுமுறையிலும் இரட்டை நிலை

அல் கய்தா இயக்கமே அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் இணைக்கும் குடையாக உள்ளதென்றும், அதன் கீழ்தான் தாலிபான், தெரிக் இ தாலிபான் பாகிஸ்தான், லஸ்கர் இ தயீபா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இயங்குகின்றன என்று கூறுகிறார்.

ஆனால், இந்த இயக்கங்களின் வளர்ச்சியிலும், தாக்குதல் திட்டத்திலும் பாகிஸ்தானின் அயல் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஜ.யின் கை உள்ளதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாற்றிவருவது குறித்து எதையும் கூறாமல் தவிர்த்துவிடுகிறார்.ஏனென்றால், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவின் நண்பன் பாகிஸ்தான்!

இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று இந்தியாவிற்கு அறிவுரை கூறும் அமெரிக்கா, பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறுவதை சரியென்றோ தவறென்றோ இதுநாள் வரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

இந்தியா எனும் பெரும் சந்தை வேண்டும், அணு உலைகளுக்கும், ஆயுதங்களுக்கும் அந்நாடு அளிக்கும் ஒப்பந்தங்கள் வேண்டும். ஆனால் அந்நாட்டு பாதுகாப்பு குறித்து அது அதன் அண்டை நாடுகளுடன் பேச வேண்டும்!

இதுதான் அமெரிக்காவின் நட்பு, இந்நாட்டுடன்தான் இந்தியா பலமான உறவு கொணடுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி கூறுகிறார்.நன்றி:தமிழ் வெப்துனியா 21.1.2010
«


எப்படியாவது இந்தியாவும் சீனாவும் போரிட வேண்டும் என அமெரிக்கா ஆசைப்படுகிறது.அப்படிப்போரிட்டால்,இரு நாடுகளும் பலத்த அழிவை சந்திக்கும்.இரு
நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்யலாம்.அதன் மூலம் மீண்டும் தான் வலிமை மிக்க நாடாக மாறிவிட அமெரிக்கா துடிக்கிறது.இந்தியா சீனா போர் வந்தால்,அணு ஆயுதங்கள்
பயன்படுத்தப்படும்.இரு நாடுகளின் பொருளாதாரமும் அதல பாதாளத்திற்குச் சென்றுவிடும்.
இந்தியாவும் சீனாவும் மீண்டும் வல்லரசு நாடுகளாக மாற சில நூற்றாண்டுகளாக காத்திருக்க
வேண்டும் .அதுவரை தான் இந்த உலகத்தில் ஒரே வல்லரசாக ஆட்சிபுரியலாம் என அமெரிக்கா கணக்குபோடுகிறது.இதுவே நமது ஆன்மீகக்கடலின் யூகம்.

சில மாதங்களுக்கு முன்பு,பா.ஜ.க. சொன்னது நிஜம் என்பதை இந்த அமெரிக்காவின் அறிக்கைகள் நிரூபிக்கின்றன.உலக அரங்கில் நாம் தனிமைபடுத்தப்பட்டுள்ளோம்.சீனாவின்
வல்லாதிக்கத்தை எதிர்கொள்ளுவதற்காக நாம் ஒரு நட்பு நாட்டை தேட வேண்டும் என பா.ஜ.கட்சி கூறியுள்ளது.

No comments:

Post a Comment