Saturday, August 12, 2017

நமச்சிவாயத் திருப்பதிகம் காந்தாரபஞ்சமம்


திருச்சிற்றம்பலம்
1.சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!
2. பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை;
ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்;
கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது;
நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே!
3.விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்;
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!
4. இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும்,
“விடுக்கிற்பிரால்!” என்று வினவுவோம் அல்லோம்;
அடுக்கல் கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே!
5.வெந்த நீறு அருங் கலம், விரதிகட்கு எலாம்;
அந்தணர்க்கு அருங் கலம் அருமறை, ஆறு அங்கம்;
திங்களுக்கு அருங் கலம் திகழும் நீள் முடி
நங்களுக்கு அருங் கலம் நமச்சிவாயவே.!
6. சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால்
நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்;
குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர்
நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே!
7. வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும்,
ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும்,
நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே!
8. இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது;
சொல் அக விளக்கு அது சோதி உள்ள
பல் அக விளக்கு அது பலரும் காண்பது;
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!
9. முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்-
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே;
அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன் நெறி ஆவது நமச்சிவாயவே!
10. மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன்
பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ,
நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment