Saturday, August 12, 2017

ஒவ்வொருவரும் தினமும் ஜபிக்க வேண்டிய அகத்தியப் பதிகங்கள் !!!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினந்தோறும் ஓதியே ஆக வேண்டும்.
இத்திருமுறைப் பாடல்கள் அனைத்தும் நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுடன் தொடர்பு கொண்டவை.
ஆனால், இன்றைய கலியுகத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதனால் பன்னிரு திருமுறைகளில் உள்ள அனைத்துப் பாடல்களையும் தினமும் ஓத முடியுமா? தேவாரம், திருக்கோவையார்,திருப்பல்லாண்டு, திருவாசகம், பெரிய புராணம், திருவிசைப்பா, திருமந்திரம் போன்ற நூல்கள் இப்பன்னிரு திருமுறை தொகுப்பில் அடங்கும்.
இறைப் பெரும் அடியார்களால் இறையருளால் மனித குல மேம்பாட்டிற்காக அருளப் பெற்றவையே இந்தப் பாக்கள். சாதாரண மனிதனுக்கு உண்டான இறை பக்தி, அவனுக்கு உலகப் பொருட்கள் மேல் உள்ள நாட்டம் இவற்றை முழுவதுமாக உணர்ந்த சித்தர் குல நாயகரான ஸ்ரீஅகஸ்திய மாமுனி கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினமுமே எவ்வாறு ஓத முடியும் என்பதைக் குறித்து பொதிய மலையில் இறைவனை நோக்கி தவமியற்றினார்.
அன்ன ஆகாரமின்றி பன்னெடுங் காலம் அவருடைய தவம் தொடர்ந்தது. நீண்ட கால தவத்திற்குப் பின் எம்பெருமான் மனம் கனிந்து ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு காட்சி அளித்து அச்சித்தர் பிரானின் நீண்ட தவத்திற்கான காரணத்தை வினவினார்.
ஸ்ரீஅகஸ்திய மாமுனியும், “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! தாங்கள் அறியாதது ஒன்று உண்டா? கலியுகத்தில் இன்று வாழும் மனிதன் தன்னுடைய சாதாரண கடமையான பொருள் ஈட்டுதல், குடும்பத்திற்காக உணவு தேடுதல், குடும்பத்தாரைப்பாதுகாத்தல் என்று சுயநல செயல்களிலேயே தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டு விடுகிறான். தன்னுடைய உண்மையான கடமையான சிவ வழிபாட்டை முற்றிலுமாக மறந்து விட்டு அலைகிறான். சிவ வழிபாட்டிற்காக தற்போது செலவிடும் நேரத்தை மிக மிகக் குறைவாக மனித சமுதாயம் அமைத்துக் கொண்டு விட்டது. அதனால் மனிதன் சிவ வழிபாட்டை இயற்றாமல் வீணாக்கிய நேரம் என்னும் சஞ்சித கர்மாவின் அளவு பெருகிக் கொண்டே வருகிறது. இந்த வினைச் சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது சித்தர்களின் கடமை அல்லவா? இதுவும் தாங்கள் எங்களுக்குக் கருணை மேற்கொண்டு அளித்த பெரும் பேறு அல்லவா?’’
கிருத யுகத்தில் நிகழ்ந்தது போல் இன்றைய கலியுகத்தில் வேத பாராயணத்தை நிறைவேற்ற இயலாவிட்டாலும் பன்னிரு திருமுறைப் பாக்களைத் தினமும் ஓதி வந்தால், அதுவே கலியுக மனிதன் வேதம் ஓதிய பலனை அடைய வழிகாட்டும் என்று முன்னரே அருளினீர்கள்.
ஆனால், இன்றைய மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்களைக் கூட தினமும் முழுமையாக ஓத முடியாக அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளான். தாங்கள் பெருங் கருணை கொண்டு பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற இறை நியதிக்குச் சற்று விலக்கு அளிக்க வேண்டும் என்று தங்கள் திருவடிகளைச் சரணடைந்து கேட்டுக் கொள்கிறேன்," என்று எம்பெருமானிடம் தன்னுடைய கருத்தை வெளியிட்டார் அகத்திய மாமுனி.
உனது வேண்டுகோள் எமக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கிறது, மாமுனியே. மண்ணுயிர்கள் மேல் நீர் கொண்ட கருணை ஒப்பற்றது. நீர் விரும்பிய வண்ணமே கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற எமது நியதியிலிருந்து சற்றே விலக்கு அளித்து சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் ஓதினாலே யுக தர்ம நியதியால் அவனுக்கு அனைத்துப் பாடல்களையும் ஓதிய பலன் கிடைக்க யாம் வழி செய்வோம்," என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
இவ்வாறு வேத நாயகனான சிவபெருமான் பெருங் கருண கொண்டு நமக்கு அளித்த பாடல்களே ஸ்ரீஅகஸ்தியர் பன்னிரு முறைத் திரட்டு என்னும் இறைப் பாக்கள் ஆகும்.
காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் இந்தப் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபடலாம்.
தனி மனித ஆராதனையை விட கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம்.
இறையடியார்கள் தங்கள் குடும்பத்திலுள்ள அனைவருடனும் சேர்ந்து இந்தப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என அனைவரையும் ஒன்று திரட்டி இத்திருப்பதிகங்களை ஓதி வந்தால் சமுதாய ஒற்றுமையும், அமைதியும் நிலவ வழி ஏற்படும்.
இந்தப் பன்னிரு திருமுறைத் திரட்டுப் பாடல்களைக் காரிய சித்திக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, நோயால் வாடும்போது மந்திரமாவது நீறு ... என்னும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகத்தை ஓதி திருநீறு அணிந்து வந்தால் நோய் அகலும். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களின் கடுமை தணியும். திருமணம், வீடு, நிலம் போன்ற நியாயமான தேவைகளுக்காகவும், வருமானத்தை மிஞ்சிய செலவு, கடன் தொல்லை போன்றவை நிவர்த்தியாகவும் வாசி தீரவே காசி நல்குவீர் .. என்ற திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகத்தைத் தொடர்ந்து ஓதி பலன் பெறலாம்.
ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று மூன்று முறை ஓதுதல் சிறப்பு.
பாடல் பெற்ற சிவத் தலங்கள், மங்கள சாசனம் அமைந்த பெருமாள் தலங்கள் (திவ்ய க்ஷேத்திரங்கள்), சுயம்பு மூர்த்தி அருளும் தலங்கள், கங்கை, காவிரி போன்ற புனித நதிக் கரைகள், துளசி மாடம், பசுமடம், திருஅண்ணாமலை, ஐயர்மலை, பழனி மலை கிரிவலப் பாதைகள், மலைத் தலங்களில் இந்தப் பதிகங்களை ஓதுவதால் வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.
ஆனால், அபரிமிதமான இந்தப் பலன்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் வெள்ளம், புயல், வறட்சி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கவும், சமுதாய அமைதிக்காகவும், இன ஒற்றுமைக்காகவும் அர்ப்பணித்தல் சிறப்பாகும்.
அன்னை ஸ்ரீபாகம்பிரியாளுக்கு நன்றிகள்!!!

No comments:

Post a Comment