Saturday, August 12, 2017

திருஆரூர் திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்
1.குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ-
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்,
சிலம்பு அலம்பா வரு சேவடியான், திரு மூலட்டானம்
புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
2.மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர்
சொல்-திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ-
வில்-திடம் வாங்கி, விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்,
 புற்று இடம்கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
3. ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ-
செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன், சென்று அடையாத்
திரு உடையான், திரு ஆரூர்த் திருமூலட்டானன், செங்கண்
பொரு விடையான், அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
4.மாசினை ஏறிய மேனியர், வன்கண்ணர், மொண்ணரை விட்டு
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டுகொலோ-
தேசனை, ஆரூர்த் திருமூலட்டானனை, சிந்தைசெய்து
பூசனைப் பூசுரர்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
5. அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,
வருந்தி நினைந்து, “அரனே!” என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ-
திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
6.வீங்கிய தோள்களும் தாள்களும் ஆய் நின்று, வெற்று அரையே
மூங்கைகள் போல் உண்ணும் மூடர்முன்னே நமக்கு உண்டு கொலோ-
தேம் கமழ் சோலைத் தென் ஆரூர்த் திருமூலட்டானன், செய்ய-
பூங்கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
7.பண்ணிய சாத்திரப் பேய்கள் பறி தலைக் குண்டரை விட்டு
எண் இல் புகழ் ஈசன்தன் அருள் பெற்றேற்கும் உண்டுகொலோ-
திண்ணிய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானன், எங்கள்
புண்ணியன் தன் அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
8. கரப்பர்கள், மெய்யை; “தலை பறிக்கச் சுகம்” என்னும் குண்டர்
உரைப்பன கேளாது, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
திருப் பொலி ஆரூர்த் திருமூலட்டானன், திருக்கயிலைப்-
பொருப்பன், விருப்பு அமர் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
9. கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு,
உய்யும் நெறி கண்டு, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
ஐயன், அணி வயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
10. குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு,
உற்ற கருமம் செய்து, உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
மல் பொலி தோளான், இராவணன்தன் வலி வாட்டுவித்த
பொன் கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment