Saturday, August 12, 2017

திருக்க்ஷேத்திரக் கோவை

திருச்சிற்றம்பலம்
1.ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம், வடகச்சியும்,
அச்சிறுபாக்கம், நல்ல
கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி, கடல் சூழ்
கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர்
நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும், குருகாவையூர்,
நாரையூர், நீடு கானப்
பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும், பிதற்றாய்,
பிறைசூடிதன் பேர் இடமே!
2.அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு அகலா
முதுகுன்றம், கொடுங்குன்றமும்
கண் ஆர் கழுக்குன்றம், கயிலை, கோணம் பயில் கற்குடி,
காளத்தி, வாட்போக்கியும்,
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான்
பரங்குன்றம், பருப்பதம், பேணி நின்றே,
எண்ணாய், இரவும் பகலும்! இடும்பைக்கடல் நீந்தல் ஆம்,
காரணமே.
3.அட்டானம் என்று ஓதிய நால் இரண்டும், அழகன்(ன்)
உறை கா அனைத்தும், துறைகள்
எட்டு ஆம், திருமூர்த்தியின் காடு ஒன்பதும், குளம்
மூன்றும், களம் அஞ்சும், பாடி நான்கும்,
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை பங்கன் மதிக்கும்(ம்)
இடம் ஆகிய பாழிமூன்றும்,
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய், அரும்பாவங்கள்
ஆயின தேய்ந்து அறவே!
4.அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, வெள்ளைப் பொடி பூசி
ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்
சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திரு நனிபள்ளி,
சீர் மகேந்திரத்துப்
பிறப்பு இல்லவன் பள்ளி, வெள்ளச் சடையான் விரும்பும்(ம்)
இடைப்பள்ளி, வண் சக்கரம் மால்
உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி, உணராய், மட
நெஞ்சமே, உன்னி நின்றே!
5.ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு,
அணி ஆர் பெருவேளூர், விளமர், தெங்கூர்,
சேறை, துலை புகலூர், அகலாது
இவை காதலித்தான் அவன் சேர் பதியே.
6.மன வஞ்சர் மற்று ஓட, முன் மாதர் ஆரும் மதி கூர்
திருக்கூடலில் ஆலவாயும்,
இன வஞ்சொல் இலா இடைமாமருதும்,
இரும்பைப்பதிமாகாளம், வெற்றியூரும்,
கனம் அம் சின மால்விடையான் விரும்பும் கருகாவூர்,
நல்லூர், பெரும்புலியூர்,
தன மென்சொலில் தஞ்சம் என்றே நினைமின்! தவம் ஆம்;
மலம் ஆயினதான் அறுமே.
7.மாட்டூர், மடப் பாச்சிலாச்சிரமம், மயிண்டீச்சுரம், வாதவூர்,
வாரணாசி,
காட்டூர், கடம்பூர், படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர்,
மற்று உறையூர் அவையும்,
கோட்டூர், திரு ஆமாத்தூர், கோழம்பமும்,
கொதுங்கோவலூர், திருக்குணவயில்,
8.* *குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம்,
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியாத் தென்
புறம்பயம், பூவணம், பூழியூரும்,
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடிதோள்
நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே!
9.நெற்குன்றம், ஓத்தூர், நிறை நீர் மருகல், நெடுவாயில்,
குறும்பலா, நீடு திரு
நற்குன்றம், வலம்புரம், நாகேச்சுரம், நளிர்சோலை
உஞ்சேனைமாகாளம், வாய்மூர்,
கல்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்வண்ணனும் மா
மலரோனும் காணாச்
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு,
என்று சொல்லிக் குலாவுமினே!
10.குத்தங்குடி, வேதிகுடி, புனல் சூழ் குருந்தங்குடி,
தேவன்குடி, மருவும்
அத்தங்குடி, தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன்
சடை வைத்து உகந்த
நித்தன், நிமலன், உமையோடும் கூட நெடுங் காலம்
உறைவு இடம் என்று சொல்லாப்
புத்தர், புறம்கூறிய புன் சமணர், நெடும் பொய்களை விட்டு,
நினைந்து உய்ம்மினே!
11.அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற அமரர்பெருமான், பதி
ஆன உன்னி,
கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு இறைவன்
சிவ ஞானசம்பந்தன் சொன்ன
இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும்
நினைந்து ஏத்தி நின்று,
விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார், விதியார் பிரியார்,
சிவன் சேவடிக்கே.
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment