Monday, February 22, 2016

பாரதம் சிலிர்த்தெழுகிறது;வறுமையும்,வேலையின்மையும் குறையத் துவங்குகிறது=பாகம் 2


ஒரு இளைஞர் தனது தொழில்திறனை மேம்படுத்திக் கொள்ள அரசாங்கத்தின் நிறுவனத்தையோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தையோ அணுகலாம்;அவ்வாறு பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கும்.இது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நடைமுறை;

அப்பயிற்சி நிறுவனங்கள் தங்களிடம் பயிற்சி பெற்றவர்களுள் 50% பேர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனையாக இருந்தது;

ஊழலில் திளைத்தவர்கள் போலியாக ஒரு பயிற்சி நிறுவனத்தை துவக்கி ஒன்றுக்கு பத்தாக அரசாங்கத்திடம் இருந்து கட்டணம் வசூலித்து பயிற்சி பெற்றவர்களில் 50% பேர்களுக்கு தங்களுடன் ஒத்துழைக்கும்,வேலையளிக்கும் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்து அரசினை ஏமாற்றிவிடலாம்;பயிற்சி பெற்றவர்களும் சொற்ப சம்பளத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேலையை விட்டுவிடுவார்கள்;அடுத்த பேட்சில் பயிற்சி பெறுபவர்களை பணியமர்த்த வேறு ஒரு நிறுவனத்தைத் தேட வேண்டாமே! இப்படியாக பயிற்சி நிறுவனங்கள் அரசு நிதியை கபளீகரம் செய்து வந்தன.(தற்போதைய பொறியியல் கல்லூரிகளும் தமது மாணவ,மாணவிகளை இப்படித்தான் பயன்படுத்தி வருகின்றன)

ஆனால்,மோடி அரசு இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.அதாவது பயிற்சி பெற்றவர் ஒரு வருடத்திற்கு மேல் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி நிறுவனத்திற்கு அரசு ஊக்கத் தொகை அளிக்கும்.அதே போல்,பயிற்சி பெற்றவர் ரூ.15,000/-க்கு மேலான சம்பளத்தில் பணியில் அமர்ந்தாலும் பயிற்சி நிறுவனத்திற்கு ஊக்கத் தொகை உண்டு.இதனால்,போலி பயிற்சி நிறுவனங்கள் அறவே இல்லாத நிலை உருவாகும்.இவாறு தீர்க்கமான சிந்தனையுடன் இக்கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.

எந்த ஒரு பயிற்சியும் அதன் பாடத்திட்டத்தையும் மதிப்பீடு முறையைச் சார்ந்தே சிறப்பானதாக அமையும்.மத்திய அரசின் திறன் மேம்பாட்டுக் கொள்கை – 2015 இல்,பயிற்சிக்கான பாடத்திட்டத்திற்கும் மதிப்பீட்டு முறைக்கும் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.தேசிய தொழிற்திறன் தகுதி கட்டமைப்பு என்ற அமைப்பின் மூலம் 11 ஆம் வகுப்பில் இருந்து உயர்த் தொழில் நுட்பக் கல்வி நிலை வரையிலான தொழிற்கல்விப் பாடத்திட்டங்கள் 5 நிலைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நிலைக்கும் உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நம் நாட்டு மக்களிடையே +2 வில் தொழிற்கல்வி பாடத்தினை படிப்பவர்கள் பற்றி ஒரு கீழான எண்ணம் நிலவுகிறது.அதனால்,தொழில் நுட்ப உயர்கல்வியாக பொறியியல் பட்டப்படிப்பு படிக்க நினைப்பவர்கள் +2வில் குரூப் 1,குரூப் 2 பாடப்பிரிவுகளில் படித்துவிட்டு பொறியியல் பட்டப்படிப்பு படிக்கச் செல்கின்றனர்;+2 வில் தொழில் கல்வியைப் பாடமாகப் படித்தவர்களுள் பெரும்பாலானவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கச் செல்வதில்லை.இந்த நிலையை உடைத்திட திறன் மேம்பாட்டுக் கொள்கை 2015 இல் வழி வகை செய்துள்ளது.


மூன்றாம் பாகம் தொடரும் . . .

No comments:

Post a Comment