Wednesday, November 28, 2012

27.11.2012 அன்று அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது


திருவண்ணாமலை: லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். கடந்த 24ம் தேதி, பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேரில் எழுந்தருளிய தேரோட்டம் நடந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர் சமேத வள்ளி தெய்வானை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அதிகாலை காலை 4மணி அளவில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீராஜா குருக்கள் பரணி தீபத்தை கையிலேந்தி கோயில் முதல் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு இந்த பரணி தீபத்தை கொண்டு, சிவ- சக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதனை காட்டுவதற்காக, அம்மன் கோயில் கருவறையில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றப்பபட்டன. பின்னர் கோயிலில் உள்ள விநாயகர் சந்நதி உள்ளிட்ட அனைத்து சந்நதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டது. பரணி தீபம் ஏற்றப்படுவதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பின் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். அப்போது அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடி காட்சியளித்தார். காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர். பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது. அப்போது மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதைக் கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டும் வண்ணம் இருந்தது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கோயில் முதல் பிரகாரம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நன்றி:தினமலர் டாட் காம்

No comments:

Post a Comment