Monday, September 17, 2012

தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றும் சினிமாக் காட்சிகள்!!!




கி.பி.1960 முதல் 1970 வரையிலான தமிழ்த்திரைப்படங்கள் தேசபக்தியையும்,தெய்வபக்தியையும் வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்தன;ஆனாலும் ,அப்போதே கவர்ச்சியை பயன்படுத்தும் விதமான படங்கள் தமிழ் இளைஞர்களின் மத்தியில் காதலுடன் சேர்ந்தே வக்கிரமான காம  எண்ணங்களையும் விதைத்தது;கூடவே பக்திப்படங்கள் , கடவுள் வடிவங்களை சுலபமாக மக்களின் மனதில் பதித்தன;புராணங்கள்,செவிவழிச் செய்திகள் திரைப்பட வடிவம் எடுத்தப்பின்னர்,இறைவழிபாடு பற்றிய நம்பிக்கையும் ஆரம்ப காலங்களான 1950 முதல் 1980 வரை அதிகரித்தன;


சென்சார் போர்டு தலைவராகவும்,உறுப்பினராகவும் இருந்து கொண்டே சில வக்கிரமான காட்சியமைப்புகளை தனது திரைப்படங்களில் வைத்து லட்சக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்தனர் சிலர்;அப்படி சம்பாதிப்பதை பலரும் காறித்துப்பியும்,கவலைப்பட வில்லை;பணம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என்று பலரும் அந்த கவுரவமான மனிதர்களிடம் கேட்டும்கூட அவர்கள் திருந்தவில்லை என்பது சோகமான உண்மை!!!

கி.பி.1970 களில் தண்ணீர்,தண்ணீர் என்று  ஒரு திரைப்படம் வெளிவந்தது;அந்தத் திரைப்படத்தின் மூலமாக அடிப்படைத் தேவைகளை தராத அரசுக்கு மக்களின் கோரிக்கையை சாத்வீகமான விதத்தில் தெரிவிக்கும் வழியே சாலை மறியல் என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டனர்.(இப்போதோ அதையும் தாண்டி பஸ்ஸையும்,பஸ்ஸில் பயணிக்கும் அப்பாவிகளையும்  எரிக்குமளவுக்கு முன்னேறி விட்டனர்)


மனிதனை மனிதனாக பார்க்காமல் பிறவியிலேயே தொழிலாளியாக சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள்,  தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்க திரைப்படங்களை பிரச்சார சாதனமாக  பயன்படுத்திக்கொண்டனர்;1970 முதல் 1985 வரை தியாகராஜன்,ரஜினிகாந்த் நடித்த் திரைப்படங்கள் இதைத் தான் வெளிப்படுத்தின;ஆனால்,கம்யூனிஸ்டுகளின் இந்த முயற்சி வெற்றி பெற்றாலும்,அந்த வெற்றியை தக்கவைக்க அவர்களுக்குத் தெரியவில்லை;ஆனால்,கம்யூனிஸ சிந்தனைகள் மூலமாக பணக்காரர்கள் வர்க்கம் கொத்தடிமைத் தனத்தைக் கைவிட நேர்ந்தது;


ஆனால்,கம்யூனிஸ்டுகளிடமிருந்து பாடம் கற்றுக்கொண்ட,திராவிடத்தை தனது பெயரில் கொண்ட கட்சியானது,சாதாரண மக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சியை கொண்டுவர இந்த திரைப்படங்களைப் பயன்படுத்திக் கொண்டது என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் ஆகும்.அப்படிப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டின் பக்தி,ஒழுக்கம்,மாண்புகள்,பெரியோர்களை மதித்தல் போன்ற தமிழ்ப்பண்பாடுகளை நாத்திகம் என்ற பெயரில் சின்னாபின்னப்படுத்தினர்.இன்றும் தொலைக்காட்சித்தொடர்களின் வாயிலாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு வீடுகளுக்கும் புகுந்து அடிமுட்டாளாக்கி,இவர்கள் கோடிகளில் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர்.(இவர்கள் நினைத்தால்,தமிழ் சமுதாயத்தையே சிந்திக்கும் விதமாக மாற்றமுடியும்;ஆனால்,ஒருபோதும் அப்படி செய்ய மாட்டார்கள்)


நூறாவது நாள் திரைப்படத்தின் மூலமாக ஒரு ஆட்டோ சங்கர் உதயமானான்;  இதனால்,தமிழ்நாட்டில் குற்றவாளிகள் தடயமில்லாமல் கொலை செய்து,துப்பு துலக்க முடியாத அளவுக்கு ஆதாரங்களை அழிக்க சினிமா சொல்லிக் கொடுக்கத் துவங்கியது;13 நம்பர் வீடு பேய்களைப்பற்றிய பயத்தை மாநிலமயமாக்கியது; பேய்களைப் பற்றிய பல மூடநம்பிக்கைகளை தமிழ்நாடெங்கும் பரப்பியது;


உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தின் மூலமாக ஏராளமான சமூக சேவகர்கள் உண்டாயினர்;ரஜினி,கமல்,சத்தியராஜ் நடித்த இருவேடங்கள் உள்ளடக்கிய திரைப்படங்கள் நிஜமான ரவுடிகளின் மத்தியில் ஈகை குணத்தைப்பரப்பியது; இன்று வரையிலும் ரவுடித்தனம் செய்து வரும் பல ரவுடிகள் தாம் சம்பாதிப்பதில் ஒருபகுதியை அன்னதானம்,படிப்புச் செலவு,கோவில் நிர்வாகச் செலவுக்கு செலவழிக்கத் துவங்கினர்.


1990 களில் இந்தியாவுக்கு வந்த தகவல் தொழில்நுட்ப அலை, தமிழ்நாட்டிலும் பரவத் துவங்கியது;1980களின் இறுதியில் கலர் டிவிக்கள் தமிழ்நாட்டில் பரவத் துவங்கின; வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு இந்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூதர்ஷன் ஒலியும்,ஒளியும் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.இந்த ஒரே ஒரு நிகழ்ச்சிக்காக டிவியின் முன்பாக தமிழ்நாடே அணிவகுக்கத் துவங்கியது;அந்த ஒரு மணி நேரத்துக்கு புதிதாக வர இருக்கும்,வெளிவந்திருக்கும் திரைப்படங்களின் பாடல்காட்சிகளை பார்க்க தமிழ்நாடே ஸ்தம்பித்தது;கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பும் அறிமுகமாகத் துவங்கியதும் இந்தக் கால கட்டத்தில் தான்;இந்த இரண்டும் ஒளிபரப்பாகும்போது திரையரங்குகளே முடங்கத் துவங்கின;அந்த அளவுக்கு சினிமா மோகம் இருப்பதை ஒருசிலர் அப்போதே கணிக்கத் துவங்கி,அதை வைத்து காசு பார்க்க நினைத்தனர்;


இதே காலகட்டத்தில்(1980 முதல் 1990 வரை)மதுரையிலிருந்து திரைப்பட இயக்குநராகவும்,கதாநாயகனாவும் ஆன ஒருவர் கிராமத்துக் கலைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்,தமிழ்நாட்டின் கிராமியப்பண்பாட்டை வெளியுலகிற்கு மட்டுமல்ல;இன்றைய நவீன கால இளைஞர்களுக்கும் புரியவைத்தது;அற்புதமான இசையும்,கிராமியக் கலையும் இணைந்து மக்களின் மனதில் குலதெய்வ வழிபாட்டையும்,கிராமக் கலைகள் மீது மரியாதையையும் புதுப்பிக்க உதவின என்பது சர்வேயால் கண்டறிய முடியாத உண்மைகள்!!!

தளபதியை பட்டமாகக் கொண்டவர் தனது அப்பாவாலேயே கதாநாயகனாக்கப்பட்டு,பல திரைப்படங்கள் வெளிவரத் துவங்கின;இந்த திரைப்படங்களின் கதைக்கரு எப்படியெல்லாம் காதலிப்பது? பெண்கள் எப்படியெல்லாம் கவர்ச்சியாக ஆடை அணிவது?உடலை மறைக்க ஆடை என்பது போய்,காமவெறியைத் தூண்டும் விதமாக ஆடை உடுத்தும்  காட்சியமைப்புகள் வெளிவர,செம கல்லா கட்டத்துவங்கினர் அப்பாவும்,மகனும்!இவர்கள் இருவருமே கிறிஸ்தவர்கள்  என்பது பலரால் நம்பமுடியாத உண்மை ஆகும். தமிழ்நாட்டுப் பெண்களின் ஒழுக்கம் நாசமாகத் துவங்கியது இந்த மாதிரியான திரைப்படங்களால் தான்!காதலின் இறுதியே காமம் என்பது போய் காதலே காமம் என்ற எண்ணத்தை தமிழ்நாடு முழுக்கவும் தனது திரைப்படங்களால் பரப்பியது இந்த புண்ணியவான்கள் தான்!தமிழ்ப்பண்பாட்டின் ஆதாரமான பெண்களின் ஒழுக்கத்தை சிதைக்கத் துவங்கினர்.

பேருந்துக்குள் பணிபுரிந்து,நடிகரானவர் தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக பல புத்திமதிகளை தனது திரைப்படங்களில் புகட்டிக்கொண்டே வந்திருக்கிறார்;ஒரு படத்தில் ருத்ராட்சத்தைக் கொண்டு திருப்புமுனைக் காட்சியாக வைத்து  தமிழ் திரையுலகத்தில் ஒரு  ஆன்மீகத் தூண்டலை உருவாக்கினார்;தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ரவுடியாக மாறுவதைப்போல சில படங்களில் நடிக்கக்  கூட செய்தார்.இதன்மூலமாக குடும்பம் என்ற அமைப்பை பாதுகாக்க ரவுடியாக மாறுவது தப்பில்லை என்ற எண்ணைத்தை தமிழ்நாட்டு ரசிகர்களிடம் விதைத்தார்;சாதுக்கள்,துறவிகளைப் பற்றி காட்சிகளை அமைத்ததன் விளைவாக,இன்று அவருடைய பல லட்சம் ரசிகர்கள் ருத்ராட்சம் அணியத் துவங்கிவிட்டனர்;யோகா,தியானம்,குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே துறவு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுதல்,துறவிகளின் வழிகாட்டுதலின்படி குடும்பத்தை நிர்வகித்தல் என்று ஒரு  மகத்தான மவுனப்புரட்சியை உருவாக்கிவிட்டார்.

1995 முதல் உலக வர்த்தக அமைப்பில் இந்தியா உறுப்பினராக கையெழுத்திட்டது;இதன்படி, யார் வேண்டுமானாலும் எந்தப் பொருளை வேண்டுமானாலும்,எங்கு வேண்டுமானாலும் குறைந்த விலையில் விற்கலாம்;வாங்கலாம்;எங்கே? இந்த உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே! உலகில் இருக்கும் 220 நாடுகளில் 185 நாடுகள் இதில் கையெழுத்திட்டன;இந்த உலக வர்த்தக அமைப்பில் சீனாவைச் சேர்க்கவில்லை;இந்தியாவாகிய நாம்தான் ரெக்கமண்டு செய்து சேர்த்தோம்;உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற போர்வையில் அமெரிக்கமயமாக்கல் இந்தியாவுக்குள் ஊடுருவத் துவங்கியது;பூமாலை என்ற வீடியோ பத்திரிகை சன் டிவியாக உருவெடுத்தது;வலுவான அரசியல் பின்னணியோடும்,சிறந்த நிர்வாகத்திறமையோடும்,பெரும் செல்வச் செழிப்போடும் சன் டிவியானது தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறத்துவங்கியது.இன்று சன் டிவியின் அத்தனை கெட்டப் பழக்கங்களும் எல்லா டிவி சேனல்களால் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றப்படுகின்றன.(சன் மியூஸிக்கில் பாட்டை பாதியிலேயே நிறுத்துவது;நிகழ்ச்சிகளுக்கு நடுவே விளம்பரம் என்பது போய்,விளம்பரங்களுக்கு நடுவே நிகழ்ச்சி என்ற அளவுக்கு தரம் தாழ்ந்து கோடிகளை சம்பாதிப்பது;முறையற்ற உறவை பெருமைப்படுத்தும் விதமாக மெகா சீரியல்கள் எடுப்பது;காம மயக்கத்தைத் தூண்டும் விதமாக புதிய,புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது;பேராசையை பரப்பும் விதமாக போட்டி வைத்து அதில் டிவி ரசிகர்களை பங்கேற்க வைப்பது;நகைக்கடைக்காரர்களிடம் மிரட்டி விளம்பரங்கள் வாங்குவது;)

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 1990கள் வரையிலும் பெரும்பாலும் தாவணியும், சேலையும் கட்டிய கல்லூரி மாணவிகள்,2000 வாக்கில் சுடிதாருக்குத் தாவத் துவங்கினர்;2010க்குள் ஜீன்ஸும் டாப்ஸீம் நாகரீகத்தை வெளிப்படுத்தும் ஆடைகளாகிவிட்டன;தாவணியும்,சேலையும் காணாமல் போய்விட்டன;காணாமல் போனது தாவணியும்,சேலையும் மட்டும் தானா? நான் அவன் இல்லை என்று ஒரு திரைப்படம்  சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது;அந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பே,நான் அவன் இல்லை கதாநாயகனும்,நான் அவள் இல்லை கதாநாயகியும் ஊருக்கு ஒருவர் உருவாகிவிட்டனர்;யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாத ஒரு இழிவான சூழ்நிலையை உலகமயமாக்கலும்,அதை பிரதிபலிக்கும் திரைப்படங்களும் உருவாக்கிவிட்டன;அது மட்டுமல்ல;கருச்சிதைவு செய்பவர்களின் வயது சராசரி குறைந்து போய் இன்று டீன் ஏஜின் விளிம்பைத் தொட்டுவிட்டது;

அது மட்டுமல்ல;1995 முதல் 2005 வரையிலும் கிராமத்துப்  பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களிலும் கூட தமிழ் கதாநாயகர்கள் வேட்டி கட்டுவதற்குப் பதிலாக பேண்ட் போட ஆரம்பிக்க,இன்று வேட்டியும் காணாமல் போய்விட்டது;2001 ஆம் ஆண்டு வாக்கில் வெளிவந்த சின்னத்தம்பி,கிழக்கு வாசல் போன்ற திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம்;முன்பெல்லாம் படித்தவர்கள் தான் பேண்ட் அணிவார்கள்;தற்போதோ யார் படித்தவர்,யார் படிக்காதவர் என்பதைக் கண்டறிய முடியாத அளவுக்கு குழப்பம் உண்டாகிவிட்டது;விளைவு? கிராமப்புறத்தில் வாழ்ந்துவரும் மதிப்புமிக்கவர்கள் மட்டுமே வேட்டி கட்டுவார்கள் என்ற நம்பிக்கையை சினிமா தமிழ்நாடு முழுவதும் பரப்பி விட்டது;


அதுவும் ஒரு வருட மனைவி ஒப்பந்தத்தை ஒரு திரைப்படத்தில் கதைக்கருவாக உருவாக்கி,அந்தத் திரைப்படம் வெளிவந்தது.இதன் பின்விளைவாக,அடுத்த சில வருடங்களில் ஒரு வார மனைவி,ஒரு மாத மனைவி,ஒரு மணி நேர மனைவி மட்டுமல்ல;கணவன்களும் உருவாகத் துவங்கிவிட்டனர்;இந்த ஒப்பந்தக் கணவன்,மனைவிகள் சென்னை,கோவை,மதுரை,திருச்சி முதலான மாநகரங்களில் மட்டும் தான் என்று எண்ண வேண்டாம்; சிறு நகரங்களுக்கும் பரவத் துவங்கி,சமுதாயத்தின் ஒரு அங்கமாகிவிட்டது;


இன்று ஆண்கள் அணியும் சட்டைகள் காணாமல் போகத் துவங்கி,டீ ஷர்ட்கள் எனப்படும் ரெடிமேட் ஆடைகள் பல லட்சம் டெய்லர்களின் வாழ்க்கையில் டெய்லரிங் பகுதிநேரவேலையாகி வருகின்றன;

2005 வரையிலும் கல்லூரிக்காதலை மையமாக வைத்தே பெரும்பாலான படங்கள் வெளிவந்தன;அது வரை கல்லூரிப் பருவத்தினரே ஓடிப்போயினர்;அதன்பிறகு பனிரெண்டாம் வகுப்புக்குள் கேமிராக்கள் நுழைய(1989 வாக்கில் வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு முதல்  சமீபத்திய களவாணி வரை) கொஞ்சநஞ்ச தமிழ்ப்பண்பாடும் சிதைந்து போனது; தனது காதலனால் கர்ப்பமாகும் பள்ளிமாணவியே தனது வீட்டுக்கே தெரியாமல் கர்ப்பத்தடை செய்வதும்,கருக்கலைப்பதும் சகஜமாகத் துவங்கியிருக்கிறது.இந்த சூழ்நிலை தமிழ்நாட்டின் சிறு நகரங்களுக்கும் பரவத் துவங்கிவிட்டது என்பது அதிர்ச்சி கலந்த உண்மை ஆகும்.   ஒருவனுக்கு ஒருத்தி என்பது வரலாற்றில் மட்டுமே இருக்கும் ஒரு நிகழ்வு என்ற சூழ்நிலையாகி,ஒருவனுக்கு பலத்தி,ஒருத்திக்கு பலவன் என்ற சூழ்நிலை  உருவாகத் துவங்கியிருக்கிறது.

மேலும் டிவியில் வரும் நகைக்கடை விளம்பரங்கள் டீன் ஏஜ் பெண்களின் மனதில் பேராசையை உருவாக்கிவருவதோடு,சிந்திக்கும் திறனையும் இழந்து வருகின்றனர்.இதன்விளைவாக,நான் அவன் இல்லை என்பது மாறி,நான் அவள் இல்லை என்ற அளவுக்கு சமுதாய ஒழுக்கச் சிதைவு ஏற்பட்டுவிட்டது;

வெற்றி பெறும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்தால்,அதன் பார்முலாவினை அப்படியே பின்பற்றுவது தமிழ்த்திரையுலகத்தின் எழுதப்படாத அரிச்சுவடியாக இருந்தாலும்,இன்று இந்தித்திரையுலகிற்கும்,ஹாலிவுட் திரையுலகிற்கும் வழிகாட்டும் அளவுக்கு தமிழ்த்திரையுலகம் உயர்ந்திருக்கிறது.


கடந்த பத்தாண்டுகளில் சினிமா வில்லன்கள் கதாநாயகனைத் துரத்துவது டாடா சுமோ போன்ற ஒருசில குறிப்பிட்ட வாகனங்களில் மட்டும் தான்;இப்படிப்பட்ட காட்சியமைப்புகளை தொடர்ந்து பல திரைப்படங்களில் வைத்ததன் பின்விளைவு என்னதெரியுமா? தமிழ்நாட்டில் கார் விற்பனை செய்யும் ஏஜன்ஸிகளுக்கு குறிப்பிட்ட விதமான கார்கள் விற்பனை அதிகரிக்கத்துவங்கியது.நம்பமுடியவில்லையா?கார்களை விற்பனை செய்யும் விற்பனைப்பிரதிநிதிகளிடம் கேட்டுப்பாருங்கள்!!!

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரையிலும்,கதாநாயகிகள் கண்ணியமாக ஆடை அணிந்து வந்தனர்;உலக நாயகனுடன் ஓடும் லாரியில் பாட்டுப்பாடி நடித்த நடிகையின் உடலை காட்டத் துவங்கினர்.(இன்று இருவருமே திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்)இன்று கதாநாயகிகளே தமது முழு உடலைக் காட்டுமளவுக்கு ‘முன்னேறி’விட்டனர்.இதன் உச்சமாக,திருட்டுத்தனமாக பார்க்கும் படங்களில் நடித்த கதாநாயகிகளும் வெள்ளித்திரை கதாநாயகிகளாக விஸ்வரூபமெடுக்கத் துவங்கிவிட்டனர்.இதுவும் தமிழ்நாட்டுப் பெண்களின் ஒழுக்கமனநிலையைச் சிதைத்துவிட்டது.

தமிழ் நாட்டின் சமுதாய விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக வெளிவரும் திரைப்படங்கள் மிகக்குறைவே! அப்படி வரும் படங்களும் கடுகு சிறுத்தாலும்,அதன் காரம் அதிகம் என்கிற அளவுக்கு அதன் விளைவுகள் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை தோற்றுவிக்கிறது.கற்றது தமிழ், இந்தியன்,எந்திரன்,ஏழாம் அறிவு,போராளி,சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் சமுதாயத்தில் பலத்த தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன;ஆனால்,அப்படி உருவாகும் தாக்கத்தை சமுதாய மறுமலர்ச்சியாக வெளிப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் சூழ்நிலையும்,சமுதாய ஒழுங்கும் சீரழிந்து போய்விட்டது;ஏனெனில்,இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பிக்கத் துவங்கினால்,சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியோ அல்லது மாறுதலோ உருவாகிவிடும்.



அப்படி உருவாகாமல் தடுக்குமளவுக்கு கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பாகும் மானாட,மயிலாட நிகழ்ச்சிகள்;ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் தவறாக வழிநடத்தி சீரழிப்பது என்று போதிக்கும் மெகா தொடர்கள்,இணையத்தின் பரவல்,செல்போன்களின் விலை வீழ்ச்சி,மென்பொருள் நிறுவனங்களின் கிராமப்பரவல் போன்றவை சிந்திப்பவர்களை மழுங்கடித்துவருகின்றன.

நகைச்சுவை கூட நமது மக்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கிவருகிறது;இரட்டையர்கள் செய்த நகைச்சுவையின் தாக்கத்தை விடவும்,வைகைக்கரையில் பிறந்து,பல வருடங்களாக துணை நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர்,தமிழர்களின் பலவீன சுபாவங்கள்,ஏக்கங்கள்,சமுதாய அவலங்களை தமது நகைச்சுவைக் காட்சிக்குப் பயன்படுத்தியதால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிட்டார்.ஆணியே புடுங்க வேண்டாம்;முடியல;ஆஹா நல்லாக் கெளப்புறாங்கய்யா பீதியை; (தன்னைத் தானே ஆட்காட்டிவிரலை காட்டி) உனக்கு வேணும்;அது போனமாசம்,நான் சொல்றது இந்த மாசம்; அது வேற வாய்,இது நாற வாய்;சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு? =இவைகளெல்லாம் இன்று தமிழ்நாட்டின் தினசரி வசனங்களாக மாறிவிட்டன;சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிவிட்டது.


ஐம்புலன்களையும் அடக்கத் தெரிந்தவரே யோகி,துறவி என்பது இந்துதர்மத்தில் எழுதப்படாத தகுதி ஆகும்.ஐம்புலன்களிலும் அதிகமான சக்திவாய்ந்தவை கண்களும்,காதுகளும் தான்! நாம் “பார்க்கும்” எந்த ஒரு காட்சியும் நமது கண்கள் வழியாக மூளையால் ‘பார்க்கப்பட்டு/ரசிக்கப்பட்டு/எரிச்சல்பட்டு’ வலதுபக்க மூளைப்பகுதியில் பதிவாகிறது;காதுகள் மூலமாக கேட்கும் எதையும் மனமானது,வலது பக்கமூளையில் பதிவு செய்துவிடும்;கடந்த கால அனுபவங்களோடு அதை ஒப்பிட்டுப் பார்க்கும்;பிறகே கேள்விப்பட்ட தகவல்களையும்,உண்மைத்தன்மையையும் பிரித்துப்பார்க்கும்;ஒரே நேரத்தில் நமது கண்களையும்,காதுகளையும் ஏமாற்றும் மனித கண்டுபிடிப்பே சினிமாவும்,டிவியும் ஆகும்.நமது மனோநிலையை மாற்றத்துவங்கியப்பின்னரே,மனிதர்களிடையே குற்றங்கள் நுணுக்கமாகவும்,கண்டுபிடிக்கமுடியாத விதமாகவும் பெருகிவிட்டன.அதே சமயம்,தினசரி பிராணயாமம் அல்லது தினசரி ஓம்சிவசிவஓம் அல்லது தினசரி ஓம்ஹரிஹரிஓம் ஜபித்தால் நமது கண்களையும்,காதுகளையும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

காதலும்,வீரமும் தமிழர்களின் பண்பாடாக பல நூற்றாண்டுகளாக இருந்துவந்தன.தற்போது காதலைக் காணவில்லை;ரவுடித்தனமே வீரமாக நம்பப்படுகிறது.இந்த  சூழ்நிலையை உண்டாக்கியது தமிழ்ச் சினிமாவின் வளர்ச்சியே ஆகும்.இனிவரும் காலத்தில் மட்டுமல்ல;எப்போதுமே சமுதாய அக்கறையோடு பெரும்பாலான திரைப்படங்கள் இயக்கப்படுவது அபூர்வமே!

எனவே,திரைப்படங்களையும்,அதில் வரும் காட்சிகளையும் முடிந்தவரையிலும் பின்பற்றாமலிருப்பதே நமக்கு நல்லது.தேசபக்தி,தெய்வபக்தியைத் தூண்டும் விதமாக திரைப்படங்கள் நிறைய வெளிவருவது நல்லது.மனோதத்துவரீதியாக சாதிக்க வைக்கும் டெக்னிக்குகளை காட்சியமைத்து யதார்த்தமான வாழ்க்கையை வெளிப்படுத்தும் விதமாக திரைப்படங்களை வெளியிட்டால் நல்லது.செய்வார்களா நமது திரையுலக பிரம்மாக்கள்? இப்படி ஒரு பத்தாண்டுகள் வரை செய்துவிட்டாலே தமிழ்நாட்டில் ஒரு சிறிய அளவிலான ஆன்மீகப்புரட்சியை உருவாக்கிவிடமுடியும்.


ஓம்சிவசிவஓம்

1 comment: