Wednesday, March 6, 2013

சுவாமிவிவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா=பகுதி 8= துணிந்து செல்! எதிர்த்து நில்!


பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ வேண்டும். எந்த இடத்திலும் நிலையாகத் தங்காமல் சஞ்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். கைத்தடி, கமண்டலம் இரண்டை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மா ஒன்றையே துணையாகக் கொள்ள வேண்டும். ஒரு துறவி இப்படி வாழவே விரும்புவான். சுவாமிஜியின் எண்ணமும் அதுவாக இருந்தது.
1888 நடுப் பகுதிவரை சுவாமிஜி அருகிலுள்ள ஆன்ட்பூர் போன்ற இடங்களுக்கு ஓரிருமுறை சென்று வந்தார். நீண்ட தூரம் எங்கும் போகவில்லை. 1887 கோடைக்காலத்தில் அவருக்குச் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அப்போது சகோதரத் துறவிகளின் வேண்டுகோளுக்கிணங்க வைத்திய நாதம் போன்ற இடங்களில் சில காலம் தங்கினார். நீண்ட பயணமாக அவர் சென்ற முதல் இடம் வாரணாசி என்று அழைக்கப்படுகின்ற காசிப்பெரும் பதி.
சுவாமிஜியும் தமது பிரிவிராஜக வாழ்க்கையை, அதாவது பயண வாழ்க்கையை இங்கிருந்து ஆரம்பித்தார். பிரேமானந்தர், ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடரான பக்கீர் பாபு ஆகியோருடன் காசிக்குச் சென்றார் சுவாமிஜி. அங்கே சுமார் ஒரு வார காலம் தங்கியிருந்தார். புனித கங்கை, புத்தரும் சங்கரரும் போதித்த இடங்கள், எண்ணற்ற கோயில்கள், இறைவன் புகழ் பாடுவதும் ஜபதவங்களில் ஈடுபடுவதுமாக இருக்கின்ற துறவியர் கூட்டம் எல்லாம் சுவாமிஜியைப் பரவசத்தில் ஆழ்த்தின.
காசியின் அழகிய கோயில்களுள் ஒன்று துர்க்கா கோயில். ஒருநாள் அங்கே சென்று தேவியைத் தரிசித்து விட்டு, ஓர் ஒற்றையடிப் பாதை வழியாகத் திரும்பி வந்துகொண்டிருந்தார் சுவாமிஜி. ஒரு பக்கம் பெரிய குளம், மறுபக்கம் உயர்ந்த மதிற்சுவர். அந்தப் பாதை வழியாக அவர் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு குரங்குக் கூட்டம் அவரை எதிர்த்தது. சுவாமிஜியின் வேகம் தடைபட்டது. அவர் முன்னேறத் தயங்கினார். அவர் பின்வாங்குவதைக் கண்டதும் குரங்குகள் அவரை நோக்கி முன்னேறின. சுவாமிஜி திரும்பி ஓடத் தொடங்கினார். குரங்குகள் விடாமல் துரத்தின. அவரது வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவையும் விரைந்து முன்னேறி அவர்மீது விழுந்து கடிக்கத் தொடங்கின. இனி சமாளிக்க முடியாது என்று தளரும் நிலைக்கு வந்து விட்டார். அப்போது வயதான துறவி ஒருவரின் குரல் கேட்டது. 'நில், எதிர்த்து நில், மிருகங்களை எதிர்கொள்.' இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சுவாமிஜியிடம் ஒரு புத்துணர்ச்சி பரவியது. ஓடிக் கொண்டிருந்தவர் நின்றார். உறுதியாக நின்று குரங்குகளை வெறித்துப் பார்த்தார். அவ்வளவுதாள், அவை பின்வாங்கத் தொடங்கின. சுவாமிஜி முன்னேறத் தொடங்கியதும் அவை திரும்பி ஓடலாயின.
இந்த நிகழ்ச்சி சுவாமிஜியின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. இயற்கை வேகங்களையும், பிரச்சினைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும், அவற்றிற்கு ஒருபோதும் பணிந்து விடக் கூடாது என்பதை சுவாமிஜி இந்த நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்டார். அவரது பல சொற்பொழிவுகளில் இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் கற்றுக் கொண்ட படிப்பினையின் தாக்கம் இருப்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment